பக்கங்கள் செல்ல

Friday, November 15, 2024

பவுலிய கடித தொகுப்பு குறித்த அனுமானமும் அது பலிதீர்த்த பவுலும்

  بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

பவுலிய கடித தொகுப்பு குறித்த அனுமானமும் அது பலிதீர்த்த பவுலும்

    நாம் சென்ற கட்டுரையில் பவுலிய கடிதத் தொகுத்தல் குறித்த அனுமானங்களை கண்டிருந்தோம். இந்த கட்டுரையில் பவுலிய கடிதங்கள் குறித்த அனுமான கோர்வை ஒன்றை காண இருக்கிறோம். அதாவது சென்ற கட்டுரையில் நாம் கண்ட அனுமானங்களில் ஒன்றில் இருந்து அது ஒட்டி உருவான அனுமானங்களையும், அந்த அனுமானங்கள் பவுலை குறித்தும் பவுலிய கடிதங்கள் குறித்தும் எத்தகைய பிம்பத்தை தோற்றுவிக்கிறது என்பதையும், அது எப்படி பவுலிய கடிதங்களின் எழுத்தர் பவுல் என்பதையே கேள்விக்குள்ளாக்கிறது என்பதையும் இன் ஷா அல்லாஹ் காணயிருக்கிறோம்.

பவுலின் மரணத்திற்கு பின்……..

    நாம் சென்ற கட்டுரையில் கிட்டத்தட்ட பவுலின் கடிதங்களின் வெளிரங்க மேற்கோல்கள்(Explicit References) என்பது ஐரீனியஸின் காலத்தில் அதாவது கி.பி. 150க்கு பிறகுதான் கிடைக்கிறது என்பதை கண்டிருந்தோம். கி.பி. 150க்கு பிறகு திடிரென பெருவெடிப்பாக இந்த கடிதங்கள் திருச்சபைகளின் புலக்கத்திற்கு வந்துள்ளது இதன் மூலம் புலனாகிறது. இந்த உலகில் நடக்கும் எதற்கும் ஒரு காரணமும் ஒரு கர்த்தாவும் இருக்கும். பவுலிய கடித புலக்கத்தின் தோற்றுவாயாக சென்ற தொடரில் நான்கு விஷயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
  1. அப்போஸ்தலர் நடபடிகளின் பரவல் என்று .Lapsed Interest or Goodspeed- Knox Theory கூறுகிறது.
  2. ஞானவாத கிறித்தவர்களின் எழுச்சி. என்று Composite Anti-Gnostic or Schmithals Theory  கூறுகிறது.
  3. புறஜாதி கிறித்தவர்களுக்கும், யூத கிறித்தவர்களுக்குமான மோதல் என்று F.C. Baur  என்ற ஜெர்மானிய இறையியலாளர் கூறுகிறார்.
  4. மார்சியோன் எனும் பேதக்காரனின் எழுச்சி என்று . Gradual Collection or Zahn-Harnack Theory  கூறுகிறது.
     மேற்குறிபிட்ட நான்கில் தள்ளுவதற்கு மிகவும் எளிமையான காரணி “அப்போஸ்தலர் நடபடிகளின் பரவல்” என்பதுதான். அப்போஸ்தலர்கள் நடபடியும், பவுலிய கடிதத் தொகுப்பும் பெருமளவில் மேற்கோள் காட்டப்பட்டது ஐரீனியஸினால்தான். அதனால் இரண்டும் சமகாலத்தில் பெருமளவிலான புலக்கத்திற்கு வந்துள்ளது என்பதால் அப்போஸ்தலர் நடபடிகளின் பரவல் காரணம் என்பது ஏற்புடைய காரணி அல்ல. ஏனைய மூன்று காரணிகளுக்கான வாய்ப்புகளும் இருப்பதை நாம் பவுலிய கடிதங்களின் உள்ளடக்கத்தின் வாயிலாகவும், முற்கால கிறித்தவ பிரிவினர்களின் ஆவணங்கள் வாயிலாகவும் அவதானிக்க முடிகிறது.  


        கி.பி. ஒன்றாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் வாழந்த ரோமின் கிளமண்ட் அவர்கள் குறித்தும் அவர் ஒரு இடத்தில் மட்டுமே பவுலிய கடிதத்தை வெளிரங்கமாக மேற்கோள் காட்டுகிறார் என்பதையும் கண்டிருந்தோம். ரோமின் கிளமண்ட் பல இடங்களில் உயிர்த்தெழுதல் குறித்து பேசுகிறார். ஆனால் பவுலின் கடிதத்தில் காணப்படும் கிறித்தவர்கள் இன்றும் தூக்கிப்பிடிக்கும், “இயேசுவின் உயித்தெழுதல் குறித்த நம்பிக்கையே கிறித்தவத்தின் அடிப்படை” என்ற கொள்கையை, பவுலை சுட்டிகாட்டி பேச வில்லை. பவுலிய கடிதம் இந்த கோட்பாட்டை பின்வருமாறு கூறுகிறது.
    கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. (1 கொரிந்தியர் 15:12-14)
        உயிர்த்தெழுதலை பற்றி பல முறை பேசிய முதலாம் கிளமண்ட் ஒரு இடத்தில் கூட பவுலை சுட்டிக்காட்டி பேசவில்லை. கிறித்தவத்தின் அடித்தளமாக விளங்கும் இயேசு உயிர்த்தெழுதலை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் நம்பிக்கையே வீண் என்ற கோட்பாட்டை முதலில் முன்வைத்த பவுலை தவிர்த்து, இவர்கள் பேசி இருப்பது பவுலின் கடிதங்களாக முதலாம் கிளமண்ட், பாலிகார்ப் போன்றவர்களின் திருச்சபைகளின் கையில் இருந்தவை இன்றிருப்பவற்றில் இருந்து மாறுபட்டவை என்பதையே காட்டுகிறது.

    இதே போன்ற நிலைதான் அந்தியோக்காவின் இக்னேஷியஸின் ஆக்கங்களிலும் நிலவுகிறது. ஞானவாத கிறித்தவம் என்பது கி.பி.2ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவானதாகும். கிறித்தவத்தின் ஆரம்பகாலத்தில் பல பேதக்காரர்கள் தோன்றியிருந்தாலும், இந்த ஞானவாத கிறித்தவம் என்பது வேகம் பெற்றது என்னவோ கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் தான். கி.பி.2ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்ததாக கூறப்படும் அந்தியோக்காவின் இக்னேஷியஸின் எழுத்துக்களில்தான் முதன் முதலாக இவர்களது கொள்கைகள் எதிர்க்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது. ஆனால் இவர்களது கொள்கைகளை எதிர்த்த இக்னேஷியஸ் எந்த இடத்திலும் பவுலிய கடிதங்களை வெளிரங்கமாக சுட்டி காட்டி, அதனை மேற்கோல்களாக காட்டி எதிர்க்கவில்லை. மாறாக பவுலிய கடிதத்தின் உள்ளடக்கத்திற்கு மாறான கொள்கையை கொண்டிருந்தார். பவுலிய கடிதத்தை பொருத்தவரை மாம்சமும் ஆவியும் ஒன்றுக்கொன்று விரோதமானவை
மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.(கலாத்தியர் 5:17)
இதற்கு மாற்றமாய்தான் இக்னேஷியஸின் கடிதங்கள் பேசுகின்றன.
        But even those things which ye do according to the flesh are spiritual; for ye do all things in Jesus Christ.  
ஆனால் நீங்கள் மாம்சத்தின்படி செய்கிற காரியங்களும் ஆவிக்குரியவையே; ஏனென்றால், நீங்கள் எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்துவுக்குள் செய்கிறீர்கள் (Chapter VIII.-Renewed Praise of the Ephesians, The Epistle of Ignatius to the Ephesians)
    உண்மையில் பவுலிய கடிதங்கள் என்பவை இருந்து, அவை கிறித்தவ உலகில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறியப்பட்டு இருந்திருந்தால் இக்னேஷியஸ் பவுலிய கடிதங்களை சுட்டிக்காட்டி ஞானவதத்தை எதிர் கொண்டிருப்பார். ஆனால் பவுலிய கடிதங்களில் ஞானவாதத்திற்கு எதிரான கருத்தியல் காணப்படுகிறது என்று கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஐரீனியஸ் தான் முதன் முதலில் பவுலிய கடிதங்களை சுட்டிக்காட்டி ஞானவதத்தை விமர்சிக்கிறார். உண்மையில் பவுலிய கடிதங்கள் கிறித்தவ திருச்சபைகளில் வாசிக்கும் அளவிற்கு செல்வாக்குடையதாய் இருந்திருந்தால் அந்த ஆக்கங்களின் மைய கொள்கைகளை சுட்டிக்காட்டி முதலாம் கிளமண்ட், இக்னேஷியஸ் போன்றவர்கள் பேசியிருப்பார்கள். எனவே பவுலிய கடிதங்கள் குறித்து இரண்டாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை யாரும் அறிந்திருக்கவில்லை என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அதாவது பவுலிய கடிதங்கள் கி.பி.150 க்கு பிறகு எழுதப்பட்டது என்பதற்கு இது வழுவான சான்றாய் உள்ளது. 
இந்த செய்தியை உறுதிபடுத்துவதாய் Goodspeed- Knox Theory (லிங்க் இணைக்கப்பட வேண்டும்) உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 

    Goodspeed- Knox Theory கூறுவதில் இதற்கான காரணம் அப்போஸ்தல் நடபடிகளின் பரவல் என்பது வேண்டுமானால் வரலாற்று ரீதியாக ஏற்க முடியததாய் இருக்கலாம். ஆனால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை யாரும் கேட்பாரற்று கிடந்த ஒரு ஆக்கம்தான் பவுலிய கடிதங்கள் என்பதை பட்டவர்த்தனமாய் கூறுகிறது. இங்குதான் சிக்கல் உருவாகிறது. யாரும் கேட்பாரற்று கிடந்த கடிதம் எப்படி நூறு ஆண்டுகளுக்கு பிறகு தொகுக்கப்பட்டது?. யார் அந்த கடிதங்களை சேகரித்து வைத்திருந்தது? சேகரித்து வைத்திருந்தவர்களுக்கும் பவுலிற்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுக்கு வரலாற்று ரீதியான ஆதாரப்பூர்வமான பதில்கள் ஏதும் இல்லை. இது குறித்து Harry Y. Gamble  பின்வருமாறு தனது நூலில் கூறுகிறார்.
        Despite a great expenditure of effort over the past century, we are able today to claim very few assured conclusions and cannot describe with any confidence the process by which the individual letters of the Apostle were gathered into a collection and came to form a substantial part of the New Testament canon. 
        கடந்த நூற்றாண்டில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இன்று நாம் மிகக் குறைவான உறுதியான முடிவுகளைப் பெற முடிகிறது. மேலும் அப்போஸ்தலரின் தனிப்பட்ட கடிதங்கள் ஒரு தொகுப்பாக சேகரிக்கப்பட்ட செயல்முறையையும், புதிய ஏற்பாட்டு நியதியின் கணிசமான பகுதியை உருவாக்கியதையும் எந்த நம்பிக்கையுடனும் விவரிக்க இயலவில்லை. ( Harry Y. Gamble., The Textual History of the Letter to the Romans, 11)
        இப்படி பவுலின் மரணித்திற்கு பிறகு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாய் பெரிய பேசுபொருளாய் இல்லாத அந்த பவுலின் கடிதங்கள் எங்கிருந்து வந்தன ??????? அதன் தொகுப்பை முதன் முதலில் வெளியிட்டது யார்? அவர் நம்பகமானவரா?????


    கேள்வியுடன் முடிவடைந்த சென்ற பகுதிக்கான விடை இந்த தலைப்புதான். மார்சியோன் என்பவர் கி.பி.85-160 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்த துருக்கியின் சினோப் என்ற பகுதியை சேர்ந்த ஆரம்பகால கிறித்தவ இறையியலாளர் ஆவார். இவரது தந்தை சினோப்பின் பிஷப்பாக இருந்தவர் என்று எபிபேனியஸ் கூறுகிறார். இயேசுவின் ஒற்றை உண்மை சீடர் என்று அவர் கருதிய பவுலின் சீடர் என்று தன்னை கூறிக்கொண்டார். இவர்தான் முதன் முதலில் தொகுக்கப்பட்ட முதல் புதிய ஏற்பாட்டை வழங்கியவர் ஆவார். தியாகி ஜஸ்டின், ஐரீனியஸ் போன்ற ஆரம்ப கால கிறித்தவ பிதாக்களால் அந்தி கிறிஸ்து என்று அழைக்கப்பட்டவர். ரோம் திருச்சபையினால் கி.பி.144ல் திருச்சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். மார்சியோனை பொறுத்தவரை, பழைய ஏற்பாட்டின் கடவுள், இவ்வுலகை படைத்து, நியாயப்பிரமாணத்தை கொடுத்து, அவர்களது பாவத்திற்காக மக்களை மரணத்தினாலும் வாதையினாலும் வாட்டி வதைக்கும் கொடுர யூத குல கடவுள். புதிய ஏற்பாட்டை கொடுத்த முதன்மை கடவுள் இரக்க குணம் உடையவர். மார்சியோன் குறித்து கிறித்தவ திருச்சபை பிதாக்கள் பின்வருமாறு கூறுகின்றனர்.
Justin Martyr 
        And there is Marcion, a man of Pontus, who is even at this day alive, and teaching his disciples to believe in some other god greater than the Creator. And he, by the aid of the devils, has caused many of every nation to speak blasphemies, and to deny that God is the maker of this universe, and to assert that some other being, greater than He, has done greater works. All who take their opinions from these men, are, as we before said, called Christians; 
    மார்சியோன், பொன்டஸின் ஒரு மனிதர், அவர் இன்றும் உயிருடன் இருக்கிறார், மேலும் படைப்பாளனை காட்டிலும் பெரிய கடவுளை நம்பும்படி தனது சீடர்களுக்குக் கற்பிக்கிறார். மேலும் அவர், பிசாசுகளின் உதவியால், ஒவ்வொரு தேசத்திலும் பலரை நிந்தனைகள் பேசவும், இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை மறுக்கவும் செய்துள்ளார். மேலும் அவரை(படைப்பாளனை) விட பெரிய வேறு சிலவை உள்ளது என்பதை வலியுறுத்த பெரிய ஆக்கங்களை அவர் செய்துள்ளார்.  இவர்களிடமிருந்து தங்கள் கருத்துக்களைப் பெறுபவர்கள் அனைவரும், நாம் முன்பு கூறியது போல், கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்; ( The First Apology of Justin Chapter XXVI.—Magicians not trusted by Christians)

Irenaeus

        And Polycarp himself replied to Marcion, who met him on one occasion, and said, “Dost thou know me?” “I do know thee, the first-born of Satan.”  

  ஒரு சந்தர்ப்பத்தில் தன்னைச் சந்தித்த மார்சியனுக்கு, பாலிகார்ப் "என்னை உனக்குத் தெரியுமா?" "சாத்தானின் முதற்பேறான உன்னை நான் அறிவேன்." என்று  பதிலளித்துள்ளார். (Against Heresies, book III, Chapter III—A refutation of the heretics, from the fact that, in the various Churches, a perpetual succession of bishops was kept up)
        இப்படி ஜஸ்டினாலும், பாலிகார்ப்பினாலும் சாத்தானின் துணைவன் என்றும், சாத்தானின் முதல் பிள்ளை என்றும் அழைக்கப்பட்டவர்தான் மார்சியோன். இவரை பின்பற்றுபவர்கள் கிறித்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்ற மேலதிக தகவலை ஜஸ்டின் கூறுகிறார்.


      இவரது புதிய ஏற்பாடு எவஞ்சலியோன் – சுவிஷேம் அப்போஸ்டோலிக்கான்- சீஷர்கள் என்று இரு பாகங்களை கொண்டிருந்தது. மார்சியோனின் புதிய ஏற்பாடு, Jason David BeDuhn தனது நூலான THE FIRST NEW TESTAMENT Marcion’s Scriptural Canonல் கூறுவது போல் பின்வரும் நூல் வரிசை அமைப்பினை கொண்டிருந்தது.
  • சுவிஷேசம்
  • பவுலிய கடிதங்கள்
    • கலாத்தியர் 
    • 1 கொரிந்தியர் 
    • 2 கொரிந்தியர் 
    • ரோமர்
    • 1 தெசலோனிக்கேயர்
    • 2 தெசலோனிக்கேயர் 
    • லவோதிக்கேயர் 
    • கொலோசெயர் 
    • பிலிப்பியர்
    • பிலேமோன்
    மேலே கூறப்பட்ட பவுலின் கடிதங்களின் ஆரம்ப வசனங்கள் எதிலும் பவுலின் கூட்டாளிகளின் பெயர் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடதக்கது. அதாவது பவுலின் தனித்த கடிதங்களாக இவை காணப்படுகின்றன. இந்த கடிதங்கள் குறித்து ஐரீனியஸ் கூறும் போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்
    In like manner, too, he dismembered the Epistles of Paul, removing all that is said by the apostle respecting that God who made the world, to the effect that He is the Father of our Lord Jesus Christ, and also those passages from the prophetical writings which the apostle quotes, in order to teach us that they announced beforehand the coming of the Lord.
    அவ்வாறே, உலகைப் படைத்த கடவுளைப் பற்றி, அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாக இருக்கிறார் என்று அப்போஸ்தலரால் சொல்லப்பட்ட அனைத்தையும், கர்த்தருடைய வருகையை முன்னரே அறிவித்தார்கள் என்பதை நமக்குக் கற்பிப்பதற்காக, அப்போஸ்தலன் மேற்கோள் காட்டிய தீர்க்கதரிசன எழுத்துக்களின் பகுதிகளையும் நீக்கி, அவர் பவுலின் நிருபங்களைத் சிதைத்தார்.( Against Heresies Book I, Chapter 27-Doctrines of Cerdo and Marcion.) 
        மார்சியோன் உண்மையில் பவுலிய கடிதங்களை மாற்றி எழுதி தனது புதிய ஏற்பாட்டை உருவாக்கினார் என்ற கூற்று உண்மையாக இருந்தால் மார்சியோனின் சமகாலத்தவரும், மார்சியோனை விட இளையவரான ஜஸ்டின் அவர்கள் எங்கும் பவுலிய கடிதத்தை மார்சியோன் சிதைத்துவிட்டார் என்ற கருத்தை முன்வைக்கவில்லை. பாலிகார்ப், ஜஸ்டின் போன்றவர்கள் மார்சியோன் குறித்து பேசி இருக்கிறார்கள். ஆனால் மார்சியோனின் பவுலிய கடித தொகுப்பு குறித்து வாய்திறக்கவில்லை. 


        பாலிகார்ப், ஜஸ்டின் போன்றவர்கள் இது குறித்து வாய் திறக்காததும், இந்த கடிதங்களை மார்சியோன் தொகுத்து வழங்கிய பிறகே கிறித்தவ உலகில் பவுலின் கடிதங்களும் அதன் உள்ளடக்கம் குறித்த தகவல்கள் நமக்கு பெரிய பேசுபொருளாய் கிடைக்கிறது என்பதும் பின்வரும் மூன்று சாத்தியங்களை முன்வைக்கிறது.


    இந்த கருத்திற்கு எதிரான பல விமரசன்ங்களை ஐரீனியஸின் ஆக்கங்களில் காணமுடிகிறது. ஐரீனியஸ் தனது ஆக்கங்களில் பவுலிய கடிதங்களை மார்சியோன் சிதைத்துவிட்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார்.  இந்த சாத்திய கூறை ஏற்கும் பட்சத்தில் இன்றைய புதிய ஏற்பாட்டின் பவுலிய தொகுப்பை சந்தேகிக்கும் நிலை ஏற்படும்.


ஐரீனியஸ் தனது ஆக்கங்களில் முன்பே இருந்த பவுலிய கடிதங்களை மார்சியோன் சிதைத்துவிட்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார். ஆயினும் இன்றிருக்கும் பவுலிய கடிதங்கள் மார்சியோனின் கொள்கையை பிரதிபலிப்பதாய் உள்ளது.  

மார்சியோனின் கொள்கைகள் அதனை பிரதிபலிக்கும் பவுலிய கடித வசனங்கள்
நியாயபிரமான மறுப்பு
நியாயப்பிரமானத்தை இழிவு படுத்தும் பவுலிய கடிதம்:
    மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.(கலாத்தியர் 3:13)

    
    மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.(ரோமர் 5:20)
சாத்தானை இவ்வுலகின் கடவுள் என்று மார்சியோன் கூறுதல்
சாத்தானை இவ்வுலகின் கடவுளாக பவுலிய கடிதம் அழைக்கிறது:
        ἐν οἷς ὁ θεὸς τοῦ αἰῶνος τούτου ἐτύφλωσεν τὰ νοήματα τῶν ἀπίστων εἰς τὸ μὴ αὐγάσαι τὸν φωτισμὸν τοῦ εὐαγγελίου τῆς δόξης τοῦ Χριστοῦ, ὅς ἐστιν εἰκὼν τοῦ θεοῦ. 

    தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (2 கொரிந்தியர் 4:4)
ஒரே ஒரு சுவிஷேசத்தை மட்டுமே முன்னிறுத்துவது
சுவிஷேசத்தை ஒற்றை படையில் அழைக்கும் பவுலிய கடிதம்:   
    வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.( கலாத்தியர் 1:7)
பவுலே கடவுள் குறித்து நன்கு அறிந்தவர் என்ற மார்சியோனின் வாதம்
தனக்கே இயேசு குறித்து தெரியும் என்று பவுல் கூறுதல்:    
    எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. (2 கொரிந்தியர் 11:4)
பன்னிரண்டு சீடர்களை தூசிக்கும் மார்சியோன்
பேதுரு மற்றும் ஏனைய அப்போஸ்தலர்களை தூசிப்பது:  
    என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மாறுத்தரமாவது: புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா?மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை? எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்? 
(1 கொரிந்தியர் 9:3-7)



குறிப்பு:
I கொரிந்தியரில் பல வர்ணனையாளர்கள் கெபாஸின் [அதாவது, பீட்டர்ரின்] கட்சி (1 கொரி. 1:12 [Cephas]; 3:22) ஆகிய வசனத்தில் கொரிந்துவில் உள்ள யூதவாதக் கட்சி என்று வாதிடுகின்றனர் -- பவுல் இந்தப் பிரிவை ஏற்கவில்லை. இதேபோல் 1 Cor. 9:5, பவுல் கேபாஸ் [அதாவது, பேதுரு] மற்றும் இயேசுவின் சகோதரர்கள், அதாவது ஜெருசலேம் தூண்களைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்....கலாத்தியர் மற்றும் 1 கொரிந்தியர்களின் இந்த அத்தியாயங்களில் பவுலுக்கும் பேதுருவுக்கும் இடையிலான போட்டி மிகவும் வலுவாகத் தெரிகிறது. ."(J.K. Elliot,  Essays and Studies in New Testament Textual Criticism (Bloomsbury Publishing 2015 P.No. 132)

    இன்னும் சொல்லபோனால் டெர்டுள்ளியன் பவுலை பேதக்காரர்களின் அப்போஸ்தலன் (hæreticorum apostolus) என்றே கூறுமளவிற்கு பல பேதக்காரர்களின் வழிகேட்டிற்கு அடிகோலிட்டது பவுலிய கடிதங்களே (Tertullian, Anti-Marcion. Book III Chapter 5). எனவே பவுலிய கடிதங்கள் மார்சியோனின் கொள்கைகளை கொண்டிருந்தது என்பதை நாம் புதிதாக கூறவில்லை. காலத்தால் ஏனைய கிறித்தவ நற்செய்தி நூல்களை காட்டிலும் முந்தையது பவுலிய கடிதங்கள் என்று கிறித்தவ அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் பவுலிய கடிதங்கள் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பெரும் புலக்கத்திற்கு வந்துள்ளது. எனவே மார்சியோனின் கைச்சரக்குத்தான் பவுலிய கடிதங்கள் என்ற சாத்தியகூறுக்கு வாய்ப்பாக இந்த வரலாற்று குறிப்பும், மார்சியோனின் கொள்கையை கூறும் பவுலிய கடித வசனங்களும் அமைந்துள்ளது. ஆனால் மேலே விவரித்த சாத்திய கூற்றை ஏற்றாலும் புதிய ஏற்பாட்டின் பவுலிய கடிதத் தொகுப்பு, வழிகெட்ட மார்சியோனின் கைச்சரக்கு என்றாகிவிடும். இதனால்தான் என்னவோ இன்று தங்களை இஸ்லாமிய எதிரியாக காட்டிக்கொள்ளும் நவநாகரிக கிறித்தவ பாஸ்டரான Hermann Detering தனது நூலான “THE FALSIFIED PAUL- EARLY CHRISTIANITY IN THE TWILIGHT” ப.எண். 102ல் பின்வருமாறு கூறுகிறார்.
    W. C. van Manen, who for the first time carried out a fundamental textual and literary investigation of the letter to the Galatians to examine the possibility that the Catholic church tendentiously reworked the Pauline letters, in which case the briefer Marcionite version would be the more original. The result of his investigation by and large confirmed this suspicion very impressively. 
    W.C. வான் மானென், கலாத்தியர்களுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையான உரை மற்றும் இலக்கிய விசாரணையை முதன்முறையாக மேற்கொண்டார், கத்தோலிக்க திருச்சபையானது பவுலின் கடிதங்களை பெருமளவில் மறுவேலை செய்ததற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார். இதை பொருத்தவரை சுருக்கமான மார்சியோனைட் பதிப்பு மிகவும் அசலானதாக இருக்கும். அவரது விசாரணையின் முடிவு இந்த சந்தேகத்தை மிகவும் சுவாரஸ்யமாக உறுதிப்படுத்தியது.
    ஹெர்மான் டெடரிங்கை பொறுத்தவரை பவுலிய கடிதங்களை உருவாக்கியது சைமன் என்ற சூனியக்காரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது குறித்த ஆய்வை விளாவாரியாக மேற்குறிபிட்ட நூலில் தந்திருக்கிறார். இப்படி கிறித்தவ பாதிரிகளே பவுலிய கடிதம் வழிகெட்ட கூட்டத்தினரால் உருவாக்கப்பட்டு, அதிலும் தில்லுமுள்ளுகளை கிறித்தவ திருச்சபைகள் செய்தே உருவாக்கியது என்று பகிரங்கமாக கூறிவருகின்றனர்.


    இந்த மூன்றாவது சாத்திய கூறுதான் எதனையும் காரணமாக கூறி தள்ள இயலாத ஒன்று.
  • ஏனென்றால் கி.பி. 150 வரை பெரும் பேசு பொருளாய் பவுலிய கடிதங்கள் இல்லை. பவுலின் அடிப்படை கொள்கையை கூட அதனை சுட்டிகாட்டி யாரும் பேச வில்லை. இக்னேஷியஸ் போன்றவர்கள் அதற்கு மாற்றமான கொள்கையை கொண்டிருப்பதை காணமுடிகிறது.
  • ஐரீனியஸின் கையில் இருந்த பவுலிய கடிதம் மார்சியோனின் பவுலிய தொகுப்பில் இருந்து வேறுபட்டதாக இருந்ததால்தான், அதனை விமர்சனமாக ஐரீனியஸினால் முன்னெடுக்க முடிந்தது.
  • மார்சியோன் செய்யும் திருகுதாளத்தையே திருச்சபையும் செய்து கொண்டிருந்ததால் இதனை ஜஸ்டின் உதாசீனப்படுத்திவிட்டார் அல்லது இந்த தலைப்பிற்குள் நுழையாமல் அமைதி காத்துக்கொண்டார்
  • அல்லது பவுலிய கடிதத் தொகுப்பு இருப்பதையே ஜஸ்டின் அறியாமல் இருந்திருக்க வேண்டும். கி.பி.150 வரை அறியப்படாமல் இருந்த ஒன்றை, மக்களிடம் பெரிதும் போய் சேராத ஒன்றை யார் மாற்றினாலும் யாராலும் அறியமுடியாது. 
எனவேதான் மார்சியோனின் பவுலிய கடித தொகுப்பு குறித்து ஆய்வு செய்த Jason David BeDuhn பின்வருமாறு கூறுகிறார்
        Based upon the recent studies of Clabeaux and Schmid, Gamble observes that the large majority of peculiar readings attested for Marcion can otherwise be closely paralleled in the larger textual tradition of Paul’s letters, especially the so-called Western text and some parts of the Syrian tradition. This means that Marcion is not to be credited with extensive tendentious emendations, and that his text of the epistles belonged to a common pre-Marcionite form of the Pauline text that was already current around the beginning of the second century. This would mean not only that Marcion did not create the first collection of Paul’s letters, but also that he did not rescue Paul from complete obscurity, since others before him cared enough about what Paul had written to collect and circulate his letters. Both the Apostolikon and the catholic Pauline corpus go back to a common collection ancestral to both. 

Clabeaux மற்றும் Schmid இன் சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில், Marcion க்கு சான்றளிக்கப்பட்ட பெரும்பாலான விசித்திரமான வாசிப்புகள், பவுல் எழுதிய கடிதங்களின் பெரிய உரை மரபில், குறிப்பாக மேற்கத்திய உரை மற்றும் சிரிய மரபின் சில பகுதிகளுடன் நெருக்கமாக இருப்பதை Gamble உற்றுநோக்கியிருக்கிறார். இதன் பொருள், மார்சியன் விரிவான போக்குடைய திருத்தங்களுக்கு சொந்தக்காரர் ஆகமாட்டார், மேலும் அவரது நிருபங்களின் உரை இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மார்சியோனைட் வடிவத்திற்கு முன்பே இருந்த பொதுவான  பவுலின் உரைக்கு சொந்தமானது. பவுலின் கடிதங்களின் முதல் தொகுப்பை மார்சியன் உருவாக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், பவுலை முழு குழப்பத்தில்லிருந்து அவர் காப்பாற்றவில்லை என்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது, ஏனெனில் அவருக்கு முன் மற்றவர்கள் பவுல் தனது கடிதங்களை சேகரித்து விநியோகிக்க எழுதியதைப் பற்றி போதுமான அளவு கவனித்திருந்தனர். அப்போஸ்டோலிகான் மற்றும் கத்தோலிக்க பவுலிய நியமனம் ஆகிய இரண்டும், இரண்டுக்கும் பொதுவான முந்தைய சேகரிப்புக்கு திரும்பிச் செல்கின்றன. (Jason David BeDuhn “THE FIRST NEW TESTAMENT Marcion’s Scriptural Canon” P.No.204-205)
        அதாவது மார்சியோன் தொகுப்பதற்கு முன்பே ஒரு பவுலிய கடித தொகுப்பு யாரிடமோ இருந்துள்ளது அதற்கு பட்டிங் டிக்கரிங் பார்த்து உருவாக்கப்பட்டதுதான் மார்சியோன் மற்றும் கத்தோலிக்க பவுலிய கடிதத்தொகுப்பு என்கிறார் Jason David BeDuhn. இதன் மூலம் மார்சியோன் மட்டும் அல்ல கிறித்தவ திருச்சபையும் பவுலின் கடித தொகுப்பினை அவர் அவர் இஷ்டத்திற்கு கைகளில் வைத்திருந்தார்கள் என்பதும், இன்று இருக்கும் புதிய ஏற்பாட்டின் பவுலிய கடித தொகுப்பு முன்னிருந்த தொகுப்பில் இருந்து திரித்து மாற்றி கூட்டல் குறைத்தல் செய்து எழுதப்பட்டவை என்பதும் விளங்குகிறது. மேலும் இதனை உறுதி படுத்தும் வகையில் Harry Y. Gamble பின்வருமாறு கூறுகிறார்.
The larger collections of Paul's letters that come into view in the second century, consisting variously of ten, thirteen, and fourteen letters, were outgrowths of these earlier small and perhaps regional collections.  
இரண்டாம் நூற்றாண்டில் கவனத்திற்கு வந்த பவுலிய கடிதங்களின் பெரிய தொகுப்புகள், பத்து, பதின்மூன்று மற்றும் பதினான்கு கடிதங்களை கொண்டவை, இவை முந்தைய சிறிய மற்றும் சிலவேலைகளில் பிராந்திய சேகரிப்புகளின் வெளிவளர்ச்சிகளாக இருந்தன.(Harry Y. Gamble., Books and Readers in the Early Church P.No.100)

Paul's copies would have been a valuable resource to his associates, who eventually collated and revised them. Ultimately, they would have transcribed them, together with some pseudonymous letters, in a comprehensive format. 
பவுலின் பிரதிகள் அவரது கூட்டாளிகளுக்கு மதிப்புமிக்க ஆதாரமாக இருந்திருக்கும், அவர்கள் இறுதியில் அவற்றைத் தொகுத்து திருத்தினார்கள். இறுதியில், அவர்கள் சில புனைவு கடிதங்களுடன், விரிவான வடிவத்தில் அவற்றைப் படியெடுத்திருப்பார்கள்.(Harry Y. Gamble., Books and Readers in the Early Church P.No.101)
    மேலே கூறப்பட்ட காம்பலின் கருத்தை நான் விவரிக்க அவசியமில்லை என்று எண்ணுகிறேன். இப்படி பலரின் கைகளிலும் ஒவ்வொரு வகையான பவுலிய கடிதத்தொகுப்பு இருந்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. 


    மேலே கூறப்பட்ட படியான நிலை இருப்பதால்தான் இப்படி பவுலின் மரணித்திற்கு பிறகு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாய் பெரிய பேசுபொருளாய் இல்லாத அந்த பவுலின் கடிதங்கள் எங்கிருந்து வந்தன………??????? அதன் தொகுப்பை முதன் முதலில் வெளியிட்டது யார்? அவர் நம்பகமானவரா????? இல்லை மார்சியோன் போன்ற ஃபிராடா? பவுலிய கடிதங்கள் சரியானதென்றால் அதனை மாற்ற திருத்த வேண்டிய அவசியமென்ன??? கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான அளவுகோல் என்ன? போன்ற  கேள்விகள் அவசியமாகிறது. ஆனால் இது எதற்கும் எந்த வரலாற்று ரீதியான ஆதாரப்பூர்வ பதிலும் கிறித்தவ உலகில் இல்லை. 

        கிறித்தவ அறிஞர்கள் முன்வைத்த அனுமான கோட்பாடுகளோ, கிறித்தவ நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் பயங்கரமான முடிவுகளை தரக்கூடியதாக இருக்கிறது. சென்ற கட்டுரையையும், இந்த  கட்டுரையையும் சேர்த்து படித்தால் பின்வரும் விஷயம் புரியும். கிறித்தவர்களில் ஒரு கும்பல் பவுலிய கடிதங்கள் 14ம் பவுலால் எழுதப்பட்டது என்கிறது. ஒரு கும்பல் எபிரேய நிருபம் தவிர்த்து 13 கடிதங்கள் பவுலால் எழுதப்பட்டது என்கிறது, மாரிசியோன் வழிவந்த ஆதி கிறித்தவர்கள் (ஜஸ்டின் இவர்களை கிறித்தவர்கள் என்றே கூறுகிறார்)  10 கடிதங்கள் பவுலால் எழுதப்பட்டது என்கிறார்கள். இன்றைய கிறித்தவ அறிஞர்களில் பெரும்பான்மையினர் 07 கடிதங்கள் பவுலால் எழுதப்பட்டது என்கிறார்கள். F.C.பவ்ர் என்ற ஜெர்மானிய அறிஞர் வழிவந்த கிறித்தவ அறிஞர்கள் 04 கடிதங்கள் பவுலால் எழுதப்பட்டது என்கிறார்கள். இறுதியாக ஹெர்மான் டெட்டரிங் போன்ற பாதிரிகள் பவுலிய கடிதங்கள் மொத்தமும் ஃபோர்ஜரி என்று கூறுகின்றனர். 

    அதாவது அட்ரஸில்லாத நபர்களின் கைகளில் பவுலின் பெயரில் இருந்த கடிதங்கள், யார் என்றே அறியப்படாதவர்களால் கூட்டல் குறைத்தல் செய்யப்பட்டு, மாற்றி எழுதப்பட்ட கைச்சரக்குதான்  இன்று புதிய ஏற்பாட்டில் இடம்பெற்றிருக்கும் பவுலிய கடிதத் தொகுப்பு என்பதைதான் கிறித்தவ அறிஞர்களின் கோட்பாடுகள் முடிவாக கூறுகிறது. வரலாற்று ஆதாரங்கள் இல்லாமல் அனுமானம்தான் ஆதாரம் என்றால் இப்படியான அவலநிலைதான் ஏற்படும் என்பதற்கான சிறந்த உதாரணத்தைதான் நாம் ஆய்வாக இந்த கட்டுரையில் முன்வைத்துள்ளோம். அடுத்த கட்டுரையில் இந்த கருத்தை மேலும் உறுதிபடுத்தும் தகவல்களை பார்ப்போம் இன் ஷா அல்லாஹ் 

No comments:

Post a Comment