பக்கங்கள் செல்ல

Thursday, June 27, 2024

ஒத்தமை நற்செய்தி நூல்களும் அது குறித்த அனுமானக் குழப்பங்களும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஒத்தமை நற்செய்தி நூல்களும் அது குறித்த அனுமானக் குழப்பங்களும்

        நாம் பைபிலின் புதிய ஏற்பாட்டின் பாதுகாப்பு குறித்து பார்த்து வருகிறோம். புதிய ஏற்பாட்டின் வரலாற்று தரவுகள் அடிப்படையில் அதன் நம்பகத்தன்மையை எடை போடுவதற்கு முன்பு புதிய ஏற்பாட்டின் முதல் மூன்று நற்செய்தி நூல்கள் குறித்து இங்கு காணவுள்ளோம். புதிய ஏற்பாட்டின் முதல் மூன்று நற்செய்தி நூல்களான மத்தேயூ மாற்கு மற்றும் லூக்கா என்பவை ஒத்தமை நற்செய்தி நூல்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நற்செய்தி நூல்கள் ஒவ்வொன்றும் மற்ற நற்செய்தி நூலினை தழுவி எழுதப்பட்டதாக பல நூற்றாண்டுகளாக கிறித்தவ உலகம் விவாதித்து வருகிறது. அது குறித்தும் அதனை விளக்க முற்படும் அனுமானங்கள் குறித்தும் இந்த கட்டுரையில் காண உள்ளோம் இன் ஷா அல்லாஹ்….

    ஒத்தமை நற்செய்தி நூல்கள்- பெயர் காரணம்
    ஒத்தமை நற்செய்தி நூல்களின் வசன பகிர்வு
    ஒத்தமை நற்செய்தி நூல்களின் சிக்கல்
    ஏன் ஒத்தமை சிக்கலை தீர்ப்பது அவசியமாகிறது
    வரலாற்றில் ஒத்தமை நற்செய்தி நூல்களின் சிக்கல்
        அகஸ்டினின் அனுமானம்: (கிபி 354- 430)
    ✅ஒத்தமை நற்செய்தி நூல்களின் சிக்கல் 18ம் நூற்றாண்டிற்கு பிறகு

        1.நியோ-கிரீஸ்பாக் அனுமானம்
        2.இரு ஆவண அனுமானம்
        3.நான்கு ஆவண அனுமானம்
        4.ஃபேரர்-கூல்டர் அனுமானம்
        5.ஆதி நற்செய்தி நூல் அனுமானம்
        6.இணை நற்செய்தி நூல் அனுமானம் 
        7.பாய்ஸ்மாட் அனுமானம்

    ✅மாற்குதான் முதலில் எழுதப்பட்டது ஆதாரங்களும் வாதங்களும்

    இந்த ஆய்வின் மூலம் நாம் அறிந்து கொள்வது

            புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்தி நூல்களில் மத்தேயூ மாற்கு மற்றும் லூக்கா ஆகியவை தமக்குள் மிகப் பெரும் அளவில் ஒத்தமைந்திருப்பதாலும், தமக்குள் ஒரு பொதுப்பார்வை கொண்டிருப்பதால் ஒத்தமை நற்செய்திகள் (Synoptic Gospels என்று அழைக்கப்படுகின்றன. இந்த நற்செய்தி நூல்கள் பெரும்பாலும் இயேசுவைப் பற்றிய அதே உவமைகளையும், குறிப்புக்களையும் கொண்டிருக்கின்றன, நிகழ்வின் வரிசையை பொதுவாக பின்பற்றுகின்றன, மேலும் ஒத்த சொற்களைப் பயன்படுத்துகின்றன. மேலும் இயேசு குறித்த சித்தரிபுக்கள், அற்புத நிகழ்வுகள் சிறப்புப்பெயர்கள் ஆகியவையும் ஒன்றாய் இருக்கின்றன உதாரணமாக இயேசுவின் பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தின் நிகழ்வுகளை, இந்த மூன்று நற்செய்தி நூல்களும் ஒரே அத்தியாயத்தில் அதே வரிசையை கொண்டிருப்பதை காணலாம்

நிகழ்வு மத்தேயு மாற்கு லூக்கா
முடக்குவாதமுற்ற மனிதனை இயேசு குணப்படுத்துதல் மத்தேயு 9:1-8 மாற்கு 2:1-12 லூக்கா 5:17-26
இயேசு பாவிகளுடனும் வரி வசூலிப்பவர்களுடனும் சாப்பிடுதல் மத்தேயு 9:9-13  மாற்கு 2:13-17 லூக்கா 5:27-32
இயேசு உபவாசம் பற்றி கேள்வி கேட்கப்படுதல் மத்தேயு 9:14-17 மாற்கு 2:18-22 லூக்கா 5:33-39
ஓய்வுநாளில் இயேசு குணமளித்தல் மத்தேயு 12:1-14 மாற்கு 3:1-6 லூக்கா 6:1-11
சீசருக்கு வரி செலுத்துதல் மத்தேயு 22:15-22 மாற்கு 12:13-17 லூக்கா 20:20-26
உயிர்த்தெழுதலின் போது திருமணம் குறித்து இயேசு கூறுதல் மத்தேயு 22:23-33 மாற்கு 12:18-27 லூக்கா 20:27-40
"மேசியா யாருடைய மகன்?" என்று வினவப்படுதல் மத்தேயு 22:41-46 மாற்கு 12:35-37 லூக்கா 20:41-44
நியாயப்பிரமாண ஆசிரியர்களுக்கு எதிரான எச்சரிக்கை மத்தேயு 23:1-12 மாற்கு 12:38-40 லூக்கா 20:45-47

   
  இந்த மூன்று நற்செய்தி நூல்களும் தங்களுக்குள் பல வசனங்களை பொதுவாக கொண்டும் இருக்கின்றன.  மத்தேயூவின் 1068 வசனங்களில் 598 வசனங்கள் மாற்கு சுவிஷேசத்துடன் ஒத்தமைந்துள்ளது. லூக்கா சுவிஷேசத்துடன் 256 வசனங்கள் ஒத்தமைந்துள்ளது. அதே போல் லூக்காவின் 1149 வசனங்களில் 483 வசனங்கள் மாற்கு சுவிஷேசத்துடன் ஒத்தமைந்துள்ளது. மத்தேயூவுடன் 264 வசனங்கள் ஒத்தமைந்துள்ளது. மாற்கு சுவிஷேசம் தனது 661 வசனங்களில் 640 வசனங்களை ஏனைய இரு சுவிஷேசத்துடனும் பகிர்ந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் இந்த மூன்று நற்செய்தி நூல்களும் தனக்கான தனித்த வசனங்களையும் கொண்டுள்ளது. மாற்கு 20 வசனங்களையும், மத்தேயூ 214 வசனங்களையும், லூக்கா 402 வசனங்களையும் தன்னகத்தே தனித்த வசனங்களாக கொண்டுள்ளன. 


ஒத்தமை நற்செய்தி நூல்களின் சிக்கல் 


நாம் முன்சென்ற பகுதியில் மத்தேயூ மாற்கு மற்றும் லூக்கா ஆகிய சுவிஷேசங்கள் எப்படி ஒத்தமைந்துள்ளன என்பதையும், எவ்வாறு தனித்து உள்ளது என்பதையும் பார்த்தோம், இந்த மூன்று சுவிஷேசங்களும் தங்களுக்குள், பல இடங்களில் ஒத்தமைந்தும், சில வார்த்தைகளில் சிறு வேறுபாடுகளையும், சில வார்த்தைகளில் பெரிய வேறுபாடுகளையும், ஒரே நிகழ்வை சில நேரம் விவரிக்கும் போது  ஒன்றிலிருந்து மற்றொரு சுவிஷேசம் நீண்டதாகவும், வேறுபட்டதாகவும் இருப்பதை காரண காரியத்துடன் விளக்குவதே ஒத்தமை சிக்கல் என்று கூறப்படுகிறது. இதை விளக்க முற்படும் ஆய்வு என்பது எல்லாம் ஆவி தூண்டியதால் எழுதப்பட்டது என்று குருட்டுத்தனமாக நம்புவர்களுக்கானது அல்ல. மத்தேயூ, மாற்கு, லூக்கா என யாரும் தாங்கள் ஆவியால் உந்தப்பட்டுதான் இவற்றை எழுதினோம் என்று எந்த சுய வாக்குமூலமும் அவர்களது சுவிஷேசம் என்று கூறப்படுபவற்றில் கூறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உதாரணமாக லூக்கா சுவிஷேசம் பின்வருமாறு கூறுகிறது.
        மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்ப முதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.  (லூக்கா 1:1-4)
    மேற்குறிபிட்ட வசனத்தில் தெள்ளத்தெளிவாக ஒரு விஷயம் நமக்கு புலப்படுகிறது. அதாவாது லூக்கா சுவிஷேசத்தின் ஆசிரியர் தான் விசாரித்துதான் இவற்றை எல்லாம் எழுதியதாக அவரே சுய சாட்சியமிடுகிறார். அதனால் இந்த மத்தேயூ மாற்கு லூக்கா ஆகியோர் எதன் அடிப்படையில் இந்த சுவிஷேசங்களை எழுதினார்கள். மூன்றும் வேறுபட்ட நபர்களின் படைப்பு என்றால் ஏன் பல இடங்களில் நிகழ்வுகளை கூட வரிசை கிரமமாக ஓரே அத்தியாத்தில் இடம் பெறச்செய்ய வேண்டும். பழைய ஏற்பாட்டின் பகுதிகளை மேற்கோலிடும் போதும் கூட ஓரே வகையான மாறுபாட்டுடன் ஏன் தரவேண்டும். உதாரணமாக பழைய ஏற்பாட்டின் ஏசாயா புத்தகத்தின் வசனங்களை மேற்கோலிடும் ஒருத்தர் கூட ஏன் அதன் உண்மை வாசகத்தை காட்ட வில்லை. ஒரே மாறுதலுடம் கூறுவது ஏன்??

வசன எண் வசனம்
ஏசாயா 40:3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
மத்தேயூ 3:3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே
மாற்கு 1:3  கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
லூக்கா 3:3 அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
    
    மேலும் இந்த ஒத்தமை நற்செய்திகள் இயேசுவின் பொதுப்பணி பற்றியும் அவருடைய துன்பங்கள் பற்றியும் தருகின்ற செய்திகளுக்கிடையே மிகப் பெரும் ஒற்றுமை உள்ளது. இவ்வாறு ஒன்றுபடும் முக்கிய இடங்கள் கீழ்வருவன:
🚩 இயேசு திருமுழுக்கு யோவானோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.
🚩இயேசு சீடர்களைத் திரட்டி அவர்களுக்குப் போதனை வழங்கினார்.
🚩இயேசு கலிலேயாவில் மக்களுக்குப் போதித்து அவர்களுக்குக் குணமளித்து, பொதுப்பணி புரிந்தார்.
🚩இயேசு எருசலேமுக்குச் சென்றார்.
🚩இயேசு எருசலேமில் பாடுகள் அனுபவித்தார் (இயேசு பிடிபடல், நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படல், துன்பம் அனுபவித்தல், இறத்தல்.
🚩இயேசு கல்லறையில் அடக்கப்பட்ட பின் கல்லறை வெறுமையாக இருந்தது என சீடர் கண்டுபிடித்தனர்.

    முன்சென்ற பகுதியில் அதேபோல் எப்படி ஒரே அத்தியாத்தில் நிகழ்ச்சி நிரல் ஒரே வரிசையில் அமைந்துள்ளது என்பதை கண்டோம். எனவே ஓரே செய்தி அதே சொற்களால் பகிரப்படுவதாலும், அதே வரிசையில், அதே பக்க கருத்துகள் மற்றும் அதே மாற்றப்பட்ட மேற்கோள்களுடன் பகிரப்படுவதாலும், இந்த நற்செய்தி நூல்களில் ஒன்று மற்றவர்களுக்கு ஒரு ஆதாரமாக இருந்திருக்கு வேண்டும் என்பதை அறிவுள்ள யாரும் ஒத்துக்கொள்வார்கள். இந்த கருத்தினை பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே இந்த சிக்கலை தீர்ப்பதற்காக அறிஞர்கள் தங்களுக்குள் பல அனுமானத்தை முன்வைக்கின்றனர்.

ஏன் ஒத்தமை சிக்கலை தீர்ப்பது அவசியமாகிறது:


    இந்த கேள்விக்கான விடையை மாற்க் கோடார்க் என்பவரது The Synoptic Problem A Way Through the Maze என்ற நூலில் இருந்து அவசியமான பகுதியை இங்கு சுருக்கமாக தருகிறோம்.

👉வரலாற்று உறுதிபாடு:  சினோப்டிக் சிக்கலைத் தீர்ப்பது, வரலாற்றுக் கேள்விகள், வரலாற்று இயேசுவைப் பற்றிய நம்பகமான ஆதாரங்கள் பற்றிய கேள்விகள் மற்றும் ஆரம்பகால கிறிஸ்தவத்தின் வளர்ச்சியைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க உதவுகிறது.


👉இறையியல்: சினாப்டிக் சிக்கலை ஆராய்வது, நற்செய்தி நூல்களுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றிய இறையியல் பிரதிபலிப்பை ஊக்குவிக்கிறது.


👉மரபுவழி கலாச்சார காரணிகள்: வரலாற்று விமர்சனக்கேள்விகளுக்கான விடையை இந்த சிக்கலை தீர்ப்பதின் மூலம் பெறலாம். அதாவது யார் முதலில் எழுதினார்கள், யார் யாரிடமிருந்து நகலெடுத்தார்கள், தொலைந்து போன ஆவணங்கள் ஏதும் இருக்கிறதா போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வை அடைய இது அவசியமாகும்.


👉இலக்கிய புதிர்: ஒரே நிகழ்வின் வேறுபட்ட குறிப்புகள், சிக்கலான ஆதாரங்களின் பின்னல், தோற்றம் மற்றும் சார்பு குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவையுடைய இலக்கியங்களுக்கு அனைத்து கலாச்சாரங்களிலும் நிறைய உதாரணங்கள் உள்ளன. ஆனால் எதுவும் ஒத்தமை நற்செய்தி நூல்களின் ஒத்தமை சிக்கலுக்கு ஒத்ததாக எதிலும் இல்லை.எனவே இதற்கான தீர்வை கண்டறிவது பேராவல் உடையதாய் இருக்கிறது.


    மிக எளிமையாக கூறுவது என்றால் ஏசுவை வரலாற்று ரீதியாக நிறுவவும், நற்செய்தி நூல்களின் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலான சிக்கலை தீர்க்கவும் இந்த ஒத்தமை சிக்கலை தீர்த்தாக வேண்டும், இல்லை என்றால் நற்செய்தி நூல் வேதம் என்பது வெறும் வெத்து நம்பிக்கையாக மட்டுமே இருக்கும். மேலும் இலக்கிய புதிர் என்ற வர்ணனை, எந்த இலக்கியத்திலும் இல்லாத சிக்கலை ஒத்தமை நூல்கள் கொண்டிருப்பதாக கூறுகிறது. நம்மை பொறுத்தவரை இதன் மூலமாக கிறித்தவ புதிய ஏற்பாட்டின் வரலாற்று நம்பகத்தன்மை என்ன என்பதை விளக்குவதும், எப்படி வரலாற்று ஆவணங்களாக, அனுமானங்களே உள்ளன என்பதையும் தொழுரித்து காட்டுவதுமே ஆகும்.

வரலாற்றில் ஒத்தமை நற்செய்தி நூல்களின் சிக்கல்:


    இன்றிருக்கும் கிறித்தவ மிசனரிகள், நாம் ஒத்தமை நற்செய்தி நூல்களின் சிக்கல் குறித்து கேள்விகள் எழுப்பப்டும் போது அது ஒரு சிக்கலே அல்ல என்பது போலவும், லிபரல் அறிஞர்களின் தேவையற்ற ஆய்வு என்பது போலவும் இதனை கடந்து செல்ல முற்படுகின்றனர். ஆனால் உண்மையில் இந்த ஆய்வின் தொடக்கப்புள்ளி என்பது சர்ச்சுகளின் தொடக்க காலம் தொட்டே உருவான ஒரு சிக்கல் தான். இது குறித்து 20ம் நூற்றாண்டின் ஜெர்மானிய இறையியலாளர் வெர்னர் ஜார்ஜ் கும்மல் பின்வருமாறு கூறுகிறார்.
    The ancient church and its opponents had already noticed the differences and contradictions among the Gospels, but the explanation was restricted to details. Augustine was the first to develop ideas about the literary relationships between the various Gospels. 
    ஏற்கனவே பண்டைய தேவாலயமும் அதன் எதிர்ப்பாளர்களும் சுவிசேஷங்களுக்கிடையில் வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளை கவனித்திருந்தனர், ஆனால் அதற்கான விளக்கம், “அதன் விவரங்கள்” என்று மட்டுப்படுத்தப்பட்டது. பல்வேறு சுவிசேஷங்களுக்கு இடையிலான இலக்கிய உறவுகள் பற்றிய கருத்துக்களை முதலில் உருவாக்கியவர் அகஸ்டின். (Introduction to the New Testament by Werner Georg Kummel Translated by  Howard Clark Kee, P.No.38)
        ஐரேனியஸ், ஓரிகன், யூஸிபியஸ், முதலாம் கிளமண்ட் என்று பல தேவாலய பிதாக்கள் ஒத்தமை நற்செய்தி நூல்களின் உருவாக்க கால வரிசை குறித்து தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்துள்ளனர். வெர்னர் ஜார்ஜ் கும்மல் கூறுவதை கருத்தில் கொண்டால், தேவாலய பிதாக்களின் ஒத்தமை நற்செய்தி நூல்களின் கால வரிசை குறித்த தொடர் பரப்புரை, ஒத்தமை நற்செய்தி நூல்களின் சிக்கலினால், தேவாலய மக்களிடம் தோன்றிய அவநம்பிக்கையை போக்குவதற்கான பரப்புரையாகவே பார்க்க முடிகிறது. 

    ஆனால் அகஸ்டீன் தான் இந்த நற்செய்தி நூல்களுக்கு இடையிலான தொடர்பிற்கான அனுமானத்தை முதன் முதலில் முன்வைத்தார். அதுவே கிபி 19ம் நூற்றாண்டு வரை இந்த விஷயத்தில் பெறும் ஆதிக்கம் செலுத்திய அனுமானமாக விளங்கியது. அகஸ்டின் (கிபி 354- 430) நைசிய திருச்சபைக்கு பிறகு வந்தவர். இன்றும் இவரை கத்தோலிக்கர்களும், ஏஞ்சேலிக்கல் கிறித்தவர்களும் திருச்சபையின் கட்டமைப்பாளராக கருதுகின்றனர். இந்த அகஸ்டின் அப்படி என்னதான் கூறியுள்ளார் என்பதை அவரது எழுத்துக்களில் இருந்து பார்போம்.

அகஸ்டினின் அனுமானம்: (கிபி 354- 430)

    Of these four, it is true, only Matthew is reckoned to have written in the Hebrew language; the others in Greek. And however they may appear to have kept each of them a certain order of narration proper to himself, this certainly is not to be taken as if each individual writer chose to write in ignorance of what his predecessor had done, or left out as matters about which there was no information things which another nevertheless is discovered to have recorded. But the fact is, that just as they received each of them the gift of inspiration, they abstained from adding to their several labours any superfluous conjoint compositions. For Matthew is understood to have taken it in hand to construct the record of the incarnation of the Lord according to the royal lineage, and to give an account of most part of His deeds and words as they stood in relation to this present life of men. Mark follows him closely, and looks like his attendant and epitomizer.
    "இந்த நான்கு பேரில், மத்தேயு மட்டுமே எபிரேய மொழியில் எழுதியதாகக் எண்ணப்படுவது உண்மைதான்; மற்றவை கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை. அவர்கள் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு குறிப்பிட்ட வரிசையை விவரித்ததாகத் தோன்றினாலும், ஒவ்வொரு தனிப்பட்ட எழுத்தாளரும் தனது முன்னோடி என்ன செய்தார் என்பதை அறியாமல் எழுதுவதைப் போலவோ அல்லது தகவல் எதுவும் இல்லாத விஷயங்களாக விட்டுவிட்டதாகவோ இதை நிச்சயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் உந்துதலை பரிசாக பெற்றதைப் போலவே, அவர்கள் தங்கள் கடும் உழைப்பில் அதிகப்படியான ஒத்தமைந்த தொகுத்தலையும் தவிர்த்தனர். மத்தேயு, அரச பரம்பரையின்படி இறைவனின் அவதாரப் பதிவேட்டைக் கட்டியெழுப்பவும், அவருடைய செயல்கள் மற்றும் வார்த்தைகளின் பெரும்பகுதியை இன்றைய மனிதர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாகக் கூறவும் அதைக் கையில் எடுத்ததாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. மார்க் அவரை நெருக்கமாகப் பின்தொடர்ந்து, அவரது உதவியாளர் மற்றும் சுருக்கி எழுதுபவராக தெரிகிறார். (St. Augustine , The Harmony of Gospels, Book I, Chapter 2: On the Order of the Evangelists, and the Principles on Which They Wrote)

ஒத்தமை நற்செய்தி நூல்களின் சிக்கல் 18ம் நூற்றாண்டிற்கு பிறகு


1.நியோ-கிரீஸ்பாக் அனுமானம்:


    கிரீஸ்பாக் அனுமானத்தின் படி மத்தேயூதான் முதலில் எழுதப்பட்டது, அதன் பிறகு லூக்கா, அதன் பிறகு மாற்கு மத்தேயூவில் இருந்தும் லூக்காவில் இருந்தும் எடுத்து எழுதப்பட்டது. மத்தேயூவும், லூக்காவும் ஒத்தமைந்த பகுதிகள் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டது. முரண்பட்டு இருக்கும்போது இரண்டில் ஏதேனும் ஒன்றில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை  ஃபார்மர் என்ற அறிஞரும் வலியுறுத்தினார்.



பதிலளிக்கப்பட்ட விஷயங்கள் - பலம்
✌சிறு சிறு ஒற்றுமைகளுக்கான காரணத்தின் விளக்கம்.

✌எந்த அனுமான ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை.

விடையளிக்க முடியாத சிக்கல்களும் பலவீனமும்
மாற்கு மத்தேயூ மற்றும் லூக்காவின் சுருக்கம் என்றால் மத்தேயூ மற்றும் லூக்காவில் ஒத்தமைந்து காணப்படும் சில செய்திகளை விட்டது எதனால் என்ற கேள்விக்கு இந்த அனுமானத்தை கொண்டு விடையளிக்க இயலவில்லை. உதாரணமாக ஏசு பிதாவிடம் ஜெபிக்க கற்றுக்கொடுத்த செய்தி மத்தேயூவில் 9:9-13 லும், லூக்கா 11:2-4 ஒத்தமைந்த கட்டளைகள் மாற்கில் விடுபட்டுள்ளது. அது போல மத்தேயூ மற்றும் லூக்காவின் கிரேக்கம், மாற்கின் கிரேக்கத்தை விட பண்பட்டதாய் இருக்கிறது. மத்தேயூ மற்றும் லூக்காவில் இருந்து மாற்கு காப்பி அடித்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்காது. குறிப்பாக லூக்கா மற்றும் மத்தேயூ மாறி பல இடங்களில் பழமையான வரி வடிவங்களை கையாண்டுள்ளன. லூக்கா மத்தேயூவின் காப்பி என்றால் லூக்கா மத்தேயூவின் பண்பட்ட வரி வடிவத்தை கையாண்டிருக்கும், அதற்கு மாற்றமாக இருப்பது மொத்த அனுமானத்தையும் கேள்விக்குறியாக்குகிறது.

2.இரு ஆவண அனுமானம்

        இரு ஆவண அனுமானம் என்பதை இரு மூல அனுமானம் அல்லது கோட்பாடு எனவும் அழைக்கப்படுகிறது. ஜெர்மானிய இறையியல் அறிஞர்களால் 19ம் நூற்றாண்டில் முன்வைக்கப்பட்டது. இன்று இதுதான், ஒத்தமை நற்செய்திகளின் சிக்கலின் விடையாக பெரும்பான்மை அறிஞர்களால் ஏற்கப்பட்ட அனுமானமாகும். இந்த அனுமானத்தின் படி முதன் முதலில் எழுதப்பட்ட மாற்கும், வாய்வழியாக கடத்தப்பட்ட அனுமானிக்கப்பட்ட மூலமான “Q” ஆவணமும், மத்தேயூ மற்றும் லூக்கின் மூல ஆதாரமாக கருதப்படுகிறது. Q – என்பது ஜெர்மானிய மொழியின் “Quelle” என்ற சொல்லை குறிப்பதாகும். இதற்கு மூலாதாரம் என்று பொருள். இதில் மத்தேயூவும், லூக்காவும் ஒன்றை ஒன்று சார்ந்தவை அல்ல. தனித்தவை. 


பதிலளிக்கப்பட்ட விஷயங்கள்-  பலம்:
✌மாற்குதான் முதலில் எழுதப்பட்டது என்பது உறுதியாக நிறுவப்படுகிறது. மத்தேயூ, மாற்கின் கிட்டதட்ட 97% வசனத்தை கொண்டிருக்கிறது. அதுபோல லூக்கா, மாற்கின் கிட்டதட்ட 89% வசனத்தை கொண்டிருக்கிறது. (குறிப்பு: மாற்குதான் முதலில் எழுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை இந்த கட்டுரையின் இறுதியில் பட்டியலிடுவோம் இன் ஷா அல்லாஹ்)
 
✌“Q”- மூலம் இருந்தற்கான ஆதாரத்தை மத்தேயூ மற்றும் லூக்காவில் இருக்கும் தனித்த வசனங்கள் அதனை உறுதிப்படுத்துகிறது.

விடையளிக்க முடியாத சிக்கல்களும் பலவீனமும்
       மத்தேயூவும், லூக்காவும் ஒன்றை ஒன்று சாராதவை என்பது ஏற்புடையதாக இல்லை. நாம் முன்பே கண்டது போல லூக்கா, மத்தேயூவின் 256 வசன்ஙகளை கொண்டிருக்கிறது.  அதே போல் மாற்கினால் பொதுமை படுத்தப்பட்ட பல சொற்கள், மத்தேயூ மற்றும் லூக்காவினால் குறிப்பு படுத்தப்பட்ட சொல்லாக காணப்படுகிறது. 

3.நான்கு ஆவண அனுமானம்:

    1924ல் பர்னட் ஹில்மே ஸ்ட்ரீடர் என்ற ஆங்கிலேயே இறையியலாளர் நான்கு ஆவண அனுமானத்தை தனது “The Four Gospels: A Study of Origins” என்ற புத்தகத்தில் முன்வைத்தார். இந்த அனுமானத்தின் படி மத்தேயூ மற்றும் லூக்காவில் தனித்த வசனங்கள் முறையே “M”-மூல ஆவணத்தில் இருந்தும் “L” மூல ஆவணத்தில் இருந்து வந்திருக்கலாம் என்ற அனுமானத்தை முன்வைத்தார். இரு ஆவண அனுமானம் போன்றதே இதன் பலமும் பலவீனமும்.


4. ஃபேரர்-கூல்டர் அனுமானம்:

    அஸ்டின் ஃபேரர் என்ற ஆங்கில இறையியலாளர் 1955, ஒத்தமை சிக்கலிற்கு தீர்வாக இந்த அனுமானத்தை முன்வைத்தார். இந்த அனுமானம் மாற்கு நற்செய்தியை முதலில் எழுதப்பட்டதாகவும், அனுமான ஆவணமான “Q” மூல ஆவணம் அவசியமற்றது என்றும் வாதிட்டது. மைகேல் கூல்டர் மேலும் இதனை பண்படுத்தி வழங்கியதால் இந்த அனுமானம் ஃபேரர்-கூல்டர் அனுமானம் என்று அழைக்கப்படுகிறது. லூக்கா, மத்தேயூ மற்றும் மாற்கை பயன்படுத்தினால் “Q” மூல ஆவணம் அவசியமற்றது என்பது இவர்களது வாதம். தற்காலத்தில் இதனை மாற்கு கூடகர் போன்ற வேதாகம அறிஞர்கள் முன்னிறுத்தி வருகின்றனர். லூக்கா மற்றும் மத்தேயூ மாறி பல இடங்களில் பழமையான வரி வடிவங்களை கையாண்டுள்ளனர் என்ற எதிர் கேள்விக்கு, லூக்கா பழமையானது என்பது அறிஞர்களின் வாதம்தானே என்று மாற்கு கூடகர் பதிலளித்துவிட்டார். ஆனாலும் இந்த அனுமானத்தில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. 


விடையளிக்க முடியாத சிக்கல்களும் பலவீனமும்:
    இந்த அனுமானத்தில் விடையளிக்க முடியாத சிக்கல், மத்தேயூ மற்றும் லூக்காவிற்கு இடையே இருக்கும் முரண்பாடுகளாகும். குறிப்பாக இயேசுவின் பிறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் ஆகிய நிகழ்வுகளில் அவை இரண்டிற்கும் இருக்கும் முரண்பாடுகள், லூக்கா மத்தேயூவை சார்ந்து எழுதப்பட்டது என்பதை கேள்விக்குறியாக ஆக்குகிறது. இயேசுவின் பிறப்பு செய்திகள் மத்தேயூ மற்றும் லூக்காவில் பின்வரும் ஒற்றுமையை கொண்டிருக்கிறது. 1. இயேசுவின் பெற்றோரின் பெயர் மேரி மற்றும் யோசேப்பு. 2. இயேசு பெத்தலகேமில் பிறந்தார் 3. அந்த குடும்பம் இறுதியில் நசரேத்தில் வாழ்ந்தது. ஆனால் மத்தேயூவும் மாற்கும் இயேசுவின் பிறப்பு செய்தியில் முரண்பட்டும் இருக்கிறது. லூக்காவின் படி மேரியும், யோசேப்பும் நாசரேத்தில் வாழ்ந்தவர்கள். இயேசுவின் பிறப்பின் போது பெத்தலகேமிற்கு பயணப்பட்டிருந்தனர்.(லூக்கா 2:5), ஆனால் மத்தேயூ நாசரேத்து குறித்து ஆரம்பத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. மாறாக மத்தேயூ 2:23ல் அர்கெலாயு என்ற யூதேயாவின் மன்னனுக்கு அஞ்சி மேரி மற்றும் இயேசுவுடன் குடியேறிய இடமாக காட்டப்படுகிறது.    மத்தேயூவில் வானவர் யோசேப்புவிடம் பேசினார் (மத்தேயூ 1:20,21). லூக்காவில் வானவர் மேரியிடம் பேசினார்.(லூக்கா 1:28-38) மத்தேயூவில் சாஸ்திரிகள் கிழக்கில் இருந்து பயணித்து இயேசுவை பணிந்து கொள்ள வந்ததாக காணப்படுகிறது.(மத்தேயூ 2:1-2) லூக்கா மேய்ப்பர்கள் வந்ததாக கூறுகிறது.(லூக்கா 2:15). இயேசு உயித்தெழுதல் பற்றிய குறிப்புக்களில் மத்தேயூவும் லூக்காவும் வேறுபட்டு காணப்படுகிறது. (மத்தேயூ-28, லூக்கா-24) இந்த முரண்பாடுகளும், வேறுபாடுகளும் லூக்கா,  மத்தேயூ மற்றும் மாற்கு ஆகிய இரண்டில் இருந்து மட்டும் எழுதப்பட்டது என்ற ஃபேரர்-கூல்டர் அனுமானத்தை மறுப்பதாக இருக்கிறது. மத்தேயூ மாற்கு அல்லாத மற்றுமோர் ஆவணம் இங்கு பயன்படுத்தப்பட்டிருப்பதை  அறிய முடிகிறது. 

5. ஆதி நற்செய்தி நூல் அனுமானம்


    1784 ரெய்மரஸ் என்ற நாத்திகரின் கிறித்தவ நற்செய்தி நூல்கள் அனைத்தும் புனிதமிக்க ஃபோர்ஜரி என்ற வாதத்திற்கு பதிலளிக்கும் முகமாக லெஸ்ஸிங் என்பவரால் வழங்கப்பட்ட எதிர் வர்ணனை லெஸ்ஸிங்கின் மரணத்திற்கு பின்பு வெளியிடப்பட்டது. ரெய்மரஸின் எழுத்தாக்கங்கள் வெளிவர காரணமாக இருந்ததும் இந்த லெஸ்ஸிங் என்பது குறிப்பிடத்தக்கது. லெஸ்சிங்கை பொறுத்தவரை, கிறித்தவ ஊழியக்காரர்களின் மத்தேயூ, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்தி நூல்களுக்கு முன்பே இருந்தே ஆதி நற்செய்தி நூல் (Ur- Gospel/Proto Gospel)-ன் தனித்த பயன்பாடுதான் மத்தேயூ, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்தி நூல்கள் உருவாக காரணம். இந்த அனுமானம் ரெய்மரஸின், நற்செய்தி நூல்களுக்கு மத்தியில் இருக்கும் முரண்பாடுகளே அது ஃபோர்ஜரியாக இருப்பதற்கு போதுமானது என்ற வாதத்திற்கு பதிலளிக்கும் முகமாக வழங்கப்பட்டது.
(Theological and Theoretical Issues in the Synoptic Problem Edited by John S. Kloppenborg and Joseph Verheyden P.No. 31)
    இந்த அனுமானமத்திலும், சிலர் ஆதி மாற்கு என்ற நற்செய்தி நூல் இருந்ததாக அறிஞர்களில் ஒரு பிரிவினர் வாதிக்கின்றனர்.  நாம் சென்ற தொடரில் பார்த்தது போல் அரமேய மத்தேயூதான் ஆதி நூல் என்று மற்றொரு பிரிவினர் வாதிக்கின்றனர். இந்த அனுமானத்தின் கூறுகள்:

👉எழுதப்பட்ட ஆதி நூல் மக்களிடம் பல வடிவங்களாக இருந்தது என்று லெஸ்ஸிங் அனுமானிக்கிறார்.

👉ஐக்கார்னை பொறுத்தவரையில் ஓசை வடிவில் இருப்பதை காட்டிலும் நூல்வடிவில் இருப்பது அப்போஸ்தலர்களுக்கு அவசியமாய் இருந்த்தால் அதனை எழுத்து வடிவில் மாற்கு, மத்தேயூ, லூக்கா என்ற நற்செய்தி நூல்களாக உருவாக்கினர் என்பது அவரது அனுமானம்.

👉கீஸ்லரை பொறுத்தவரையில் ஓசை வடிவமே நமக்கு அவசியமானது என்கிறார்.

👉வெஸ்ட்காடை பொறுத்தவரையில் ஜெருஸலேம் இருமொழி பயன்பாட்டுடைய நகரம். அதனால் நற்செய்தி நூல்களின் வார்த்தைகள், பேச்சு வடிவங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.


பதிலளிக்கப்பட்ட விஷயங்கள்-  பலம்:

✌எந்த அனுமான அதி எழுத்து வடிவ ஏடுகளும் முன்வைக்கப்பட வில்லை.

✌சிறு ஒத்தமைகள் குறித்து விவரிக்கிறது.

சிக்கல்களும் பலவீனமும்

    மாற்கின் மீதான மத்தேயூ மற்றும் லூக்காவின் அதீத இலக்கிய சார்புநிலை, மத்தேயூவும் லூக்காவும் மாற்கில் இருந்து தனித்து உருவாக்கப்பட்ட நூல்கள் என்பதை ஏற்க இயலாத நிலையை இருவாக்குகிறது. லூக்காவே அனேகம் பேர் எழுத்து வடிவில் செய்திகளை தொகுத்துக்கொண்டிருப்பதாக கூறுகையில் அதி எழுத்து வடிவ ஏடுகள் இல்லை என்பதை ஏற்க இயலாது. இந்த அனுமானம், மாற்குதான் அரம்பத்தில் எழுதப்பட்டது என்ற முடிவிற்கு அறிஞர்களை இறுதியில் இட்டுச்செல்கிறது.

6.இணை நற்செய்தி நூல் அனுமானம்:


        மேற்குறிபிட்ட அனுமானத்தை ஒட்டி அல்பெர்ட் ஃபச்ஸ், Spuren von Deutero markus என்ற 5 பாகம் கொண்ட ஆய்வை வெளியிட்டார். அதில் மாற்கு எழுதப்பட்ட பிறகு அது திருத்தப்பட்டு இணை மாற்கு நற்செய்தி நூல் ஒன்று உருவாக்கப்பட்டது. பின்னாளில் அதில் இருந்தே மத்தேயூவும் லூக்காவும் உருவாக்கப்பட்டது என்பது இவரின் அனுமானம். இதில் மாற்கில் இருக்கும் இயேசுவின் சில வார்த்தைகள் மத்தேயூவிலும் லூக்காவிலும் மொத்தமாக ஒன்று போல் நீக்கப்பட்டுள்ளது. உதாரணமாக

வசன எண்வசனம்
மாற்கு 2:27-28 பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
மத்தேயூ 12:8 மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
லூக்கா 6:5மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
    
    மேற்குறிபிட்ட வசனத்தில் பார்த்தோம் என்றால் “மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது” என்ற இயேசுவின் வார்த்தை மத்தேயூவிலும், லூக்காவிலும் ஒரு சேர நீக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நீக்கல்களுக்கான காரணத்தை மேலே குறிபிட்ட ஆதி நற்செய்தி நூல் அனுமானத்தினால் விளக்க இயலாததினால், அல்பெர்ட் ஃபச்ஸ் போன்றவர்கள் இணை நற்செய்தி நூல் அனுமானத்தை முன்வைக்கின்றனர். முன்சென்ற அனுமானத்தின் முதல் சிக்கலை மட்டுமே இந்த அனுமானம் தீர்த்துள்ளது. ஏனைய இரண்டும் இதற்கும் பொருந்தும். 


7.பாய்ஸ்மாட் அனுமானம்:


        இந்த அனுமானம் 6 அனுமான அவணங்கள் இருந்தால்தான் ஒத்தமை சிக்கல் குறித்து எழுப்பப்டும் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க முடியம் என்று கூறுகிறது. அவை
1. பாலஸ்தீன (A) ஆதி நற்செய்தி நூல் அதிலிருந்த திருத்தப்பட்டு உருவாக்கப்பட்ட கிறித்தவ திருத்தப்பட்ட நூல்(B)
2. பாலஸ்தீன (C) தனி  ஆவணம்
3. Q - மூல ஆவணம்
4. இடைக்கால மத்தேயூ
5. இடைக்கால மாற்கு
6. லுக்காவின் ஆதி நூல்


 சிக்கல்களும் பலவீனமும்:

மாற்கின் மீதான மத்தேயூ மற்றும் லூக்காவின் அதீத இலக்கிய சார்புநிலை, மத்தேயூவும் லூக்காவும் மாற்கில் இருந்து தனித்து உருவாக்கப்பட்ட நூல்கள் என்பதை ஏற்க இயலாத நிலையை இருவாக்குகிறது. இந்த ஆறு அனுமான அவணங்களும் இருந்தனவா என்பதை உறுதி செய்ய முடியவில்லை, மேலும் இந்த அனுமானத்தின் செய்முறை அடுக்குகளை (Process stage) உறுதிபடுத்த இயலாத நிலை உள்ளது.

தீராத ஒத்தமை சிக்கல்:

நாம் மேலே விளக்கியுள்ள அனுமானங்களே, ஒத்தமை சிக்கல் தீர்க்கப்பட வேண்டியது எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை விளங்க போதுமானது. ஆயினும் இதற்கு இன்றளவும் திருப்திகரமான, அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கக்கூடிய எந்த கோட்பாடோ, அதற்கான ஆதாரமோ இன்றுவரை கிறித்தவ உலகத்தினால கொண்டுவர முடியவில்லை என்பதுதான் உண்மை. எனவே தான் புதிய ஏற்பாட்டின் மாபெரும் அறிஞர் என்று அழைக்கப்படும் அமெரிக்காவை சேர்ந்த J. A. Fitzmyer பின்வருமாறு குறிப்பிடுகிறார். 

J. A. Fitzmyer summarizes the grand shortcoming this way  (Fitzmyer 1981 : 63):

    [The synoptic problem is] a problem that has thus far failed to find a fully satisfying solution. The main reason for this failure is the absence of adequate data for judgment about it. Extrinsic, historically trustworthy data about the composition of these Gospels are totally lacking, and the complexity of the traditions embedded in them, the evangelists ’ editorial redaction of them, and their free composition bedevil all attempts to analyse objectively the intrinsic data with critical literary methods. (The Blackwell companion to New Testament P.No: 241)

    (சினோப்டிக் பிரச்சனை) இதுவரை ஒரு முழுமையான திருப்திகரமான தீர்வைக் கண்டுபிடிக்கத் தவறிய ஒரு பிரச்சனை. இந்த தோல்விக்கான முக்கிய காரணம், இது பற்றிய தீர்வுக்கு போதுமான தரவு இல்லாததுதான். இந்த நற்செய்திகளின் தொகுப்பு பற்றிய வெளிப்புற, வரலாற்று ரீதியாக நம்பகமான தரவு முற்றிலும் இல்லை, மேலும் அவற்றில் பொதிந்துள்ள மரபுகளின் சிக்கலான தன்மை, சுவிசேஷகர்களின் எழுத்துருவாக்க திருத்தங்கள், மற்றும் அவர்களின் கட்டற்ற தொகுத்தல் ஆகியவை விமர்சன இலக்கிய முறைகள் மூலம் உள்ளார்ந்த தரவுகளை நடுநிலையாக பகுப்பாய்வு செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் பாழ்படுத்திவிடுகிறது.   (The Blackwell companion to New Testament P.No: 241) 

மாற்குதான் முதலில் எழுதப்பட்டது ஆதாரங்களும் வாதங்களும்:

நாம் முன்பே குறிபிட்டது போல, மாற்குதான் நான்கு நற்செய்தி நூல்களிலும் முதன்மையாக எழுதப்பட்டது என்பதை மேலே நாம் விளக்கிய அனுமானங்களில் பெரும்பான்மையானவை வாதிக்கின்றன. இந்த வாதத்தை இரு ஆவண அனுமானம், நான்கு ஆவண அனுமானம், ஃபேரர்-கூல்டர் அனுமானம், இணை நற்செய்தி நூல் அனுமானம் ஆகியவை அதனை முன்னிறுத்துகின்றன. கிறித்தவ அறிஞர்கள் பெரும்பான்மையினர், இரு ஆவண அனுமானத்தை முன்னிறுத்துகின்றனர். (The Blackwell companion to New Testament P.No: 243). 

    எனவே பெரும்பான்மையான கிறித்தவ அறிஞர்கள் மாற்கு தான் நான்கு நற்செய்தி நூல்களிலும் முதன்மையாக எழுதப்பட்டது என்பதை ஏற்கின்றனர். அவர்களின் இந்த நிலைபாடு தாந்தோன்றிதனமானது அல்ல. மாறாக அதற்கு பின்வரும் வாதங்களையும் ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர். அவர்கள் முன்வைக்கும் பிரதான வாதங்களை உலக அளவில் மிகப்பெரும் அளவில் கிறித்தவ ஏடுகளை வெளியிடும் ஜொண்டர்வன் அகடமியின் வலைதளத்தில் இருந்து இங்கு பதிவிடுகிறோம்.

👉மாற்கின் 93% வசனங்கள் மத்தேயூ மற்றும் லூக்காவில் இடம்பெற்றிருப்பது

👉மாற்கு சில இடங்களில் இயேசுவின் தாய்மொழியான அரமேய வார்த்தைகளை பயன்படுத்தி அதனை மொழியாக்கமும் செய்கிறது. உதாரணமாக

καὶ ἔλεγεν• Αββα ὁ πατήρ, πάντα δυνατά σοι• παρένεγκε τὸ ποτήριον  τοῦτο ἀπ’ ἐμοῦ• ἀλλ’ οὐ τί ἐγὼ θέλω ἀλλὰ τί σύ.
“அப்பா” - பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.(மாற்கு 14:36)
மேற்குறிபிட்ட வசனத்தில் மாற்கு முதலில் • Αββα-  அப்பா என்ற அரமேய சொல்லை கிரேக்கத்தில் ஒலிபெயர்ப்பு செய்து பின் அதனை கிரேக்கத்தில் πατήρ அதனை பிதாவே என்று மொழியாக்கம் செய்கிறது . இந்த வசனத்தை மத்தேயூ(????) எப்படி கையாள்கிறது என்று பார்ப்போம்.

καὶ προελθὼν μικρὸν ἔπεσεν ἐπὶ πρόσωπον αὐτοῦ προσευχόμενος καὶ λέγων• Πάτερ μου, εἰ δυνατόν ἐστιν, παρελθάτω ἀπ’ ἐμοῦ τὸ ποτήριον τοῦτο• πλὴν οὐχ ὡς ἐγὼ θέλω ἀλλ’ ὡς σύ.
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.(மத்தேயூ 26:39)
மேற்குறிபிட்ட வசனத்தில் மத்தேயூ பிதாவே என்று பொருள் தரும் கிரேக்க சொல்லை Πάτερ-மட்டுமே பயன்படுத்துவதை காணமுடிகிறது. மாற்கு, மத்தேயூவில் இருந்து எழுதப்பட்டது என்று அனுமானித்தால், கிரேக்க மத்தேயூவின் சொல் முதலில் அரமேயத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அது ஒலிபெயர்ப்பு செய்யப்பட்டும், மீண்டும் அது கிரேக்கத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்ற மூடத்தனமான நிலை ஏற்படும், இதற்கு மாற்கு, நேரடியாகவே மத்தேயூவின் கிரேக்க சொல்லை கையாண்டிருக்கும் அல்லவா. மாறாக மத்தேயூ மாற்கில் இருந்து எழுதப்பட்டது என்று கொண்டால்தான் இந்த மொழிபெயர்ப்பு- ஒலிபெயர்ப்பு சரியான தொடர்பை நிலை நிறுத்த இயலும். மேலும் மத்தேயூ மற்றும் லூக்காவின் கிரேக்க மொழி, மாற்கின் கிரேக்க மொழியை காட்டிலும் பன்பட்டதாய் இருக்கிறது.
 
👉மாற்கு மத்தேயூவில் இருந்து எழுதப்பட்டிருந்தால் ஏன் மாற்கு, மத்தேயூவின் பல செய்திகளை விட்டுவிட்டது. அதற்கு ஆதரப்பூர்வமான விளக்கம் ஏதும் இருக்கிறதா. என்ற தேடலுக்கு எந்த பதிலும் இல்லை.

👉மத்தேயூவும், லூக்காவும், ஒரு சேர மாற்கின் நிகழ்ச்சி நிரலை அப்படியே பின்பற்றியுள்ளமை. மத்தேயூவும், லூக்காவும், முரண்படும் தருணங்களிலும் கூட இரண்டில் ஒன்று மாற்கின் நிரலையே பின்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    மேற்குறிப்பிட்ட இவையெல்லாம்தான் பெரும்பான்மை அறிஞர்கள் இரு ஆவண அனுமானத்தை ஏற்பதற்கும், அதன் தொடர்ச்சியாக மாற்குதான் நான்கு நற்செய்தி நூல்களிலும் முதலில் எழுதப்பட்டது என்பதற்கும் காரணமாய் அமைந்துள்ளது.   

நிச்சயமாக இந்த ஒத்தமை சுவிஷேச நூல்களின் சிக்கலை தீர்க்க நிச்சயம் நமக்கு இயேசுவின் சொற்களை கொண்ட அனுமான நூல் ஒன்றோ அதற்கு மேற்பட்டவையோ அவசியம்
உண்மையான இயேசுவின் வார்த்தைகளை குறைத்து சேர்த்து மாற்றம் செய்து உருவாக்கப்பட்டவைதான் இன்றிருக்கும் நற்செய்தி நூல்கள்.
இதுவரை எந்த அனுமானமும் இந்த சிக்கலுக்கான தீர்வை முழுமையாக முன்வைக்கவில்லை. 
மாற்கு நற்செய்திதான், நான்கு நற்செய்தி நூல்களிலும் முதலில் எழுதப்பட்டது.

    மேற்குறிப்பிட்ட அனுமானங்களும் வாத, பிரதி வாதங்களுமே புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களின் ஆதார ஆவணங்கள் எவ்வளவு பலவீனமானவை என்பதற்கு போதிய சான்றாய் இருக்கிறது. புதிய ஏற்பாட்டின் வரலாற்று ஆவணங்களை  வரும் தொடர்களில் ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஏன் இத்தனை முரண்பட்ட அனுமானங்கள் தேவை படுகிறது என்பது  விளங்கும். குர்ஆன் பாதுகாப்பு குறித்து எழுப்பட்ட அறிஞர்களின் கருத்து, விமர்சனம், ஹதீஸ்கள், மிஸனரிகளின் அரைவேக்காட்டு வாதங்கள்  என்று அனைத்தையும் எதிர் கொண்டு தக்க ஆதாரங்களின் அடிப்படையிலும், வாத பிரதி வாதங்கள் அடிப்படையிலும் நாம் விளக்கம் அளித்திருக்கிறோம் என்பதை இங்கு சுட்டி காட்ட வேண்டியுள்ளது.  மேலே சுட்டி காட்டியவை எல்லாம் கிறித்தவ அறிஞர்களின் வாத பிரதி வாதங்கள் எனவே அதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று ஒழிய முடியாது. எனவே மேற் குறிபிட்ட அறிஞர்களின் வாத பிரதி வாதங்களுக்கு, இங்கிருக்கும் மிசனரிகளும் ஆதாரங்களை முன்னிறுத்தி பதிலளித்து இதுவரை தீர்க்கப்படாத ஒத்தமை சிக்கலுக்கு விடையளித்து, இங்கிருக்கும் தமிழக மிசனரிகள் தங்களை மேதாவிகள் என்று நிருவுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அப்படி இல்லையென்றால் அவர்களது கிறித்தவ அறிஞர்களின் வாதங்களுக்கே எங்களால் பதிலளிக்க முடியவில்லை என்ற  அவல நிலைதான் எங்களது கிறித்தவ உலகத்தில் உள்ளது எனபதை ஏற்கவேண்டும்……… 

No comments:

Post a Comment