குர்ஆனின் கிராத்கள் குறித்தும் அது எப்படி நபி(சல்) அவர்களிடம் தொடர்புடையது என்பதையம் சென்ற தொடரில் கண்டோம். குர் ஆனின் கிராத் பாதுகாப்பு குறித்து நாம் விளக்கும் போது சில ஹதீஸ்களில் காணப்படும் மாறுபட்ட அல்லது இன்றில்லாத ஓதல் முறை குறித்து இன்றைய இஸ்லாமோஃபோபுகள் கேள்வி எழுப்பி இதனால் குர்ஆனின் ஓதல் பாதுகாக்கப்படவில்லை என்று உளறித்திரிகின்றனர். அவர்களது விமர்சனங்களில் காணப்படும் சில ஹதீஸ்களையும் அதன் மூலம் அவர்கள் முன்வைக்கும் விமர்சங்களையும், அதற்கான விளக்கத்தையும் காண்போம்.
இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும்:
அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் பஸ்ரா (இராக்) நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர்ஆனைக் கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள்.
அப்போது அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:பஸ்ராவாசிகளிலேயே நீங்கள்தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள்; அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே, (தொடர்ந்து) குர்ஆனை ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்ட போது உங்களுக்கு முன் வாழ்ந்த (வேதம் அருளப்பெற்ற சமுதாயத்த)வர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதிவந்தோம்; நீளத்திலும் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் "பராஅத்" எனப்படும் (9ஆவது) அத்தியாயத்திற்கு நிகராக அதை நாங்கள் கருதினோம். ஆனால், அந்த அத்தியாயத்தை நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் "ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன்.
மேலும், மற்றோர் அத்தியாயத்தையும் நாங்கள் ஓதிவந்தோம். அதை (சப்பஹ, யுசப்பிஹு, சப்பிஹ் என) இறைத்துதியில் தொடங்கும் அத்தியாயங்களில் ஒன்றுக்கு நிகராகவே நாங்கள் கருதினோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச்செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும்,அதில் "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அவ்வாறு நீங்கள் செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர் மறுமை நாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.) (முஸ்லீம் 1897)
மேற்குறிபிட்ட ஹதீஸில் இருந்து இஸ்லாமோஃபோபுகள் இரண்டு வாதங்களை முன்வைக்கின்றனர்.
1.குர்ஆனில் அல்பராத் என்ற அத்தவ்பா சூராவிற்கு நிகரான ஒரு சூரா இருந்தது து இன்று இல்லை. இன்றிருக்கும் குர்ஆன் இவ்வாறு மறக்கடிக்கப்பட்ட நபித்தோழர்கள் வழியாகத்தான் வருகிறது ஆகவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை
2.அது போல் முஸப்பிஹாத் என்ற இறைதுதியில் ஆரம்பிக்கும் சூராவிற்கு நிகரான ஒரு அத்தியாயம் இருந்தது அதனையும் நபிதோழரான அபூமூஸா அல் அஸ்அரீ(ரலி) மறந்துவிட்டார்.இன்றிருக்கும் குர்ஆன் இவ்வாறு மறக்கடிக்கப்பட்ட நபித்தோழர்கள் வழியாகத்தான் வருகிறது ஆகவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை.
நமது பதில்
حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ: " نَزَلَتْ سُورَةٌ نَحْوَ بَرَاءَةَ، ثُمَّ رُفِعَتْ، وَحُفِظَ مِنْهَا (إِنَّ اللَّهَ سَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِأَقْوَامٍ لَا خَلَاقَ لَهُمْ. وَلَوْ أَنَّ لِابنِ آدَمَ وَادِيَيْنِ مِنْ مَالٍ لَتَمَنَّى وَادِيًا ثَالِثًا. وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ. وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ)
அபூமூஸா அல் அஸ்அரீ(ரலி) கூறியதாவது : அல் பராத்திற்கு நிகரான சூரா இறங்கியது , பின் அது உயர்த்தப்பட்டுவிட்டது. அதில் "ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (அபூ உபைத் அவர்களது கிதாப் அல் ஃதாயில் அல் குர் ஆன் 1/323)
حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا دَاوُدَ , يَعْنِي ابْنَ أَبِي هِنْدٍ , عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: " نَزَلَتْ سُورَةٌ فَرُفِعَتْ , وَحُفِظَ مِنْهَا: " لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيَيْنِ مِنْ مَالٍ لَابْتَغَى إِلَيْهِمَا ثَالِثًا , وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ , وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ "
அபூமூஸா அல் அஸ்அரீ(ரலி) கூறியதாவது : ஒரு சூரா இறங்கியது ,பின் அது உயர்த்தப்பட்டுவிட்டது. அதில் "ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (ஸரஹ் முஸ்கில் அஸார் 5/274, ஹதீஸ் எண்:2035)மேலும் அல்லாஹ் தனது வேதத்தில்
مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا ۗ أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?(அல் குர்ஆன் 2:106)