Friday, February 8, 2019

தொடர் 5:பரிணாமம் : உண்மையா ஊகமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்


உயிரினத் தோற்றம்:
                                     நாம் சென்ற தொடரில் பரிணாமத்தின் முக்கிய ஆதாரமாய் அமையும் இனப் பிரிகை அல்லது உயிரின தோற்றத்தின் மையமாக அமைந்த இனம் என்றால் என்ன என்பதை விளக்கும் கருத்தியல்களில் இருக்கும் சிக்கல்களையும் அதன் பலவீனங்களையும், அந்த கருத்துக்கள் மத்தியில் இருக்கும் பல முரண்களையும் பட்டியலிட்டு விவாதித்திருந்தோம். நிச்சயமாக அவற்றை எல்லாம் பரிணாமவியல் உலகம் ஒன்றினைக்குமா என்ற கேள்வி நிழலாடி கொண்டிருக்கையில், அறிவியல் உலகில் பரிணாமவியலாளர்கள் நவீன பரிணாமவியலை “உயிரியலை ஒருங்கிணைக்கும் கோட்பாடு (Unifying Theory of Biology” என்று சுயத்தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால் அந்த சுயதம்பட்டத்திற்கு சென்ற தொடரில் விளக்கப்பட்ட இனம் என்ற சொல்லாக்கம் எப்படியெல்லாம் முடிவுரை எழுதுகிறது என்பதை கண்டோம். ஆனால் உன்மையில் பரிணாமம் என்பது அறிவியல் தானா அல்லது அது ஒரு நம்பிக்கை சார்ந்த ஊகமா என்பதை அறிவியலின் அளவு கோலை கொண்டு இனிவரும் தொடர்களில் ஆய்வு செய்வோம். இனப்பிரிகையை பரிணாமவியலால் விளக்க முடிகிறதா, அதன் இயங்கியல்கள் அதை தோற்றுவிக்குமா உள்ளிட்ட பலவற்றை நாம் அறிவியல் கண்ணாடி அணிந்து வரவிருக்கும் தொடர்களில் பார்க்கவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். மேலும் இந்த தொடரில் நாம் ஒரு விசயத்தை தெளிவு படுத்துகிறோம். அதாவது இஸ்லாம் கூறும் இறையியல் கோட்பாடு எவ்வாறு அறிவியலுடன் ஒத்து அமைகிறது என்பதை இந்த தொடர்களின் இறுதி பகுதியில் நாம் தர இருக்கிறோம். பொதுவாக நாத்திகர்கள் தாங்கள் முன்வைக்கும் பரிணாமவியல் குறித்து கேள்வி எழுப்பப்படும் போது தங்களை தற்காத்துக்கொள்ள அவர்கள் இறைகொள்கை குறித்து கேள்வி எழுப்பி தப்பிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். இதுவே அவர்களால் அறிவியல் தளத்தில் இருந்து பரிணாமம் குறித்து வாதிக்க முடியாது என்பதைவிட பரிணாமம் அறிவியலே இல்லை என்பதற்கு போதிய சான்று. ஆக எதற்கும் ஆகாத நாத்திகர்களின் வெத்து வாதங்களை தவிர்த்து நாம் அறிவியல் தளத்தில் இருந்து நமது பரிணாமவியல் ஆய்வை முன்னெடுப்போம் இன் ஷா அல்லாஹ்.

அறிவியல் கோட்பாடு என்றால் என்ன?

                    அறிவியல் கோட்பாடு என்பதற்கு காலம் தோறும் பல வரைவுகளை (இதிலுமா??????) அறிவியல் உலகம் வழங்கி வந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அறிவியல் உலகத்தால் ஏற்கப்படும் வரையறையை முதலில் நாம் விளக்குவோம். அந்த வரையறைக்குள் பரிணாமத்தின் அடிப்படை முதல் கட்ட விளக்கம் வருகிறதா என்பதை இந்த தொடரில் சோதிப்போம். 

          ஆக அறிவியல் கோட்பாடு குறித்த வரைவுகளில் கார்ல் பாப்பரின் வரைவு மிகவும் எளிமையானது, நிதர்சன மனித பகுத்தறிவிற்கு மிக நெருக்கமானது. மேலும் படைப்பு கோட்பாடை எதிர் கொள்ள நாத்திக உலகம் எடுத்தாளும் அறிவியல் தத்துவவியலின் அளவுகோல். ஆக அதை கீழே வழங்குகிறோம்.
These considerations led me in the winter of 1919-20 to conclusions which I may now reformulate as  follows.

1. It is easy to obtain confirmations, or verifications, for nearly every theory--if we look for confirmations.
ஒவ்வொரு கோட்பாட்டிற்கும் நாம் அதன் உறுதி படுத்தலை தேடும் போது உறுதிபடுத்தலையும், சரிபார்த்தலையும் பெறுவது எளிது.
2. Confirmations should count only if they are the result of risky predictions; that is to say, if, unenlightened by the theory in question, we should have expected an event which was incompatible with the theory--an event which would have refuted the theory. 

துணிகரமான கணிப்பினால் கிடைக்கும் முடிவுகளே உறுதிபடுத்தல் என எடுத்துக்கொள்ளப்படும். அதை விளக்குவதென்றால், நமக்கு நாம் கருத்தில் கொள்ளும் அந்த கோட்பாடு குறித்து எந்த அறிவும் இல்லாத நிலையில் , நாம் இந்த கோட்பாட்டுடன் பெருந்தாத ஒரு நிகழ்வை நாம் எதிர் நோக்கி இருக்க வேண்டும்--- ஒரு நிகழ்வு அந்த கோட்பாட்டை மறுப்பதாய் இருப்பதை எதிர் நோக்கி இருக்க வேண்டும். 



               பாப்பர் அவர்களது உதாரணத்தையே இங்கு மேற்கோள் காட்டுவோம். அதாவது ஒளியானது சூரியன போன்ற நிறை அதிகமானவற்றின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்படும் என்பது ஐண்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் கருத்து. இதனை சோதனை செய்ய சூரியனிற்கு சற்று விலகிய கோட்டில் அமைந்த ஒரு நடசத்திரத்தின் ஒளி நம்மை அடையும் போது சற்று சூரியனுக்கு அருகாமையில் இருப்பது போன்று தெரியும். அதன் நிலையை சோதிக்க இரவில் அதே நட்சத்திரத்தை கண்டால் இது உறுதியாகிவிடும். பகல் பொழுதில் இத்தகைய நடசத்திரங்களை காணவியலாது. ஆக இதை உறுதி படுத்த கிரணகனத்தின் போது இந்த நட்சத்திரத்தை கண்டால் அதன் ஒளி சூரியனின் நிறையால் பாதிக்கப்படுவதை காணமுடியும். இவ்வாறு நாம் ஒரு கோட்பாட்டை மறுக்கும் எண்ணத்துடனான ஆய்வை முன்வைக்க வேண்டும். இதன் விடையே உறுதிபடுத்தலாகும். 
3. Every 'good' scientific theory is a prohibition: it forbids certain things to happen. The more a theory forbids, the better it is.
ஒவ்வொரு நல்ல அறிவியல் கோட்பாடு என்பதும் தடையே. அது சில விஷயங்களை நடைபெறமால் தடைசெய்கிறது. எது அதிகமாக தடை செய்கிறதோ அதுவே சிறந்த கோட்பாடு. (நாம் முன் சென்ற தொடரில் கூறியது போல் எது வேண்டுமானாலும் எப்படியும் நடக்கலாம் என்று ஒரு கோட்பாடு கூறுமானால் அது அறிவியல் கோட்பாடு அல்ல. ஆக இனம் குறித்த வரைவுகளில் இந்த சிக்கலை முன்னமே கண்டிருக்கிறோம்- Link of art-4)
4. A theory which is not refutable by any conceivable event is nonscientific. Irrefutability is not a virtue of a theory (as people often think) but a vice.
எந்த கோட்பாடு அறியப்படக்கூடிய நிகழ்வால் மறுக்க முடியவில்லையோ அது அறிவியல் பூர்வமானது அல்ல. மறுக்க முடியாதது என்பது ஒரு கோட்பாட்டின் சிறப்பல்ல (மக்கள் நினைப்பது போல்) அதற்கு மாறானது.


         உதாரணமாக ஆர்தோஜெனிஸிஸில் உள்ளார்ந்த தோற்றுவாய் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. உள்ளார்ந்த தோற்றுவாய் என்ற ஒன்றை இல்லை என்று நிறுவ இயலாது. ஏனென்றால் உள்ளார்ந்த தோற்றுவாய் இல்லை என்பதை நிறுவ முதலில் அது என்ன என அறியப்பட்டிருக்க வேண்டும். ஆக உள்ளார்ந்த தோற்றுவாய் இல்லை என நிறுவும் எந்த அறியப்பட்ட நிகழ்வும் அதற்கு இருக்காது. உள்ளார்ந்த தோற்றுவாயால் இந்த நிகழ்வு நிகழ்ந்தது என கூறவும் முடியாது மறுக்கவும் முடியாது. ஆக காணப்படும் நிகழ்வுகளால் இத்தகைய கோட்பாட்டை நிறுவமுடியாது. 
5. Every genuine test of a theory is an attempt to falsify it, or to refute it. Testability is falsifiability; but there are degrees of testability: some theories are more testable, more exposed to refutation, than others; they take, as it were, greater risks.
ஒரு கோட்பாட்டிற்கான ஒவ்வொரு உண்மையான சோதனை என்பதும் அதை மறுப்பதற்கான அல்லது அதை பொய்ப்பிப்பதற்கான ஒரு முயற்ச்சியே. சில கோட்பாடுகள் அதிகமாக சோதிக்கப்படக்கூடியவை, ஏனையவற்றை விட அதிக மறுதலிப்பிற்கு ஆளாகியிருக்கும். அதனால் அவை அதிக துணிகர சோதனையை எதிர் கொண்டிருக்கும். 
6.Confirming evidence should not count except when it is the result of a genuine test of the theory; and this means that it can be presented as a serious but unsuccessful attempt to falsify the theory . (I now speak in such cases of 'corroborating evidence'.)

உண்மையான சோதனையின் முடிவுகளாக இல்லாதவை ஒரு கோட்பாட்டின் உறுதிபடுத்தும் ஆதாரமாய் எடுத்துக்கொள்ளப்படாது. அதாவது அந்த கோட்பாட்டை பொய்பிப்பதற்கான தீவிரமான சோதனைகள், அவை (கோட்பாட்டை பொய்பிப்பதில்) தோல்வியுற்ற முயற்சிகளாய் இருக்க வேண்டும்.



7. Some genuinely testable theories, when found to be false, are still upheld by their admirers--for example by introducing ad hoc some auxiliary assumption, or by re-interpreting the theory ad hoc in such a way that it escapes refutation. Such a procedure is always possible, but it rescues the theory from refutation only at the price of destroying, or at least lowering, its scientific status. (I later described such a rescuing operation as a 'conventionalist twist' or a 'conventionalist stratagem'.) 
சில உண்மையாக சோதனைக்கு தகுதியான கோட்பாடுகள், பொய்யென் அறியப்பட்டும் இன்னமும் அதன் ஆதாரவாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது- அதற்கமையும் படியான சில துணை அனுமானங்கள் நுழைக்கப்பட்டு அது மறுதளிப்பில் இருந்து காப்பாற்றப்படுகிறது. அத்தகைய முறைமை சாத்தியமே ஆனால் அந்த கோட்பாட்டின் அழிவை விலையாக கொடுத்தோ அல்லது அறிவியல் அஸ்தஸ்த்தில் இருந்து கீழ்யிறக்கியோ அந்த கோட்பாட்டை மறுதளிப்பில் இருந்து காப்பாற்றலாம். 
One can sum up all this by saying that the criterion of the scientific status of a theory is its falsifiability, or refutability, or testability.(1)
ஒருவர் இதை அனைத்தையும் ஒன்றினைத்து பின்வருமாரு கூறலாம்
“ஒரு அறிவியல் கோட்பாடு என்பது பொய்மை படுத்தவதற்கு, அல்லது மறுக்கப்படுவத்ற்கு அல்லது சோதிக்கப்படுவதற்கு ஏதுவானதாய் இருக்க வேண்டும். 


பாப்பரின் கருத்தில் இருந்து நாம் பெறும் முக்கிய முடிவுகள்:
1. ஒரு அறிவியல் கோட்பாடு என்பது சோதிக்கத்தக்கதாய் இருக்க வேண்டும்.  
2. சோதனை என்பது அதை பொய்பிக்கும் எண்ணத்துடன் நிகழ்த்தப்பட்டதாய் இருக்க வேண்டும். அதாவது முன்னமே முடிவு செய்துவிட்டு அதை நிறுவும் படி சோதிக்கக்கூடாது. 
3. இவ்வாறு சோதிப்படும் போது அந்த கோட்பாடு பொய்ப்பிக்கப்படும் நிலையில், அனுமானங்களை கொண்டு அந்த கோட்பாட்டிற்கு முட்டு கொடுக்க முற்பட்டால் அது அந்த கோட்பாட்டை அறிவியல் அந்தஸ்தில் இருந்து கீழிறக்கிவிடும். அதாவது சோதனையில் பொய்பிக்கப்படும் நிலையில் அந்த கோட்பாட்டை நிறுவ எத்துனை அனுமானங்களை துணைக்கு அழைத்து நிறுவ முற்பட்டாலும் அந்த கோட்பாடு அறிவியல் என்ற அந்தஸ்தை இழந்து விடும்.  
4. இது இப்படித்தான் நடக்கும் என தெளிவாக இருக்க வேண்டும். எதுவும் எப்படியும் நடக்கலாம் என்றிருகக்கூடாது.
        மேற்குறிபிட்ட இந்த நான்கு புரிதல்களின் அடிப்படையில் பரிணாமம் சோதிக்கப்பட்டால் நிலைத்து நிற்குமா என்பதைத்தான் நாம் நமது ஆய்வில் சோதிக்க இருக்கிறோம். மேலும் பரிணாமத்தின் முதல் நிலை அனுமானங்களை நாம் விவரித்து விமர்சிப்போம் இன்ஷா அல்லாஹ். 

பரிணாமம் சோதிக்கதக்கதா?
          உயிரியலில் பரிணாமம் என்பது இரண்டு வகையாகயான பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று ஒரு உயிரினத்தில் அந்த இனத்தை பாதுக்காக்க அவற்றில் தோன்றும் மாற்றங்கள். இன்னொன்று ஒரு உயிரினம் வேறு ஒரு உயிரினமாக மாறுவது. இவற்றில் ஒரு உயிரினம் அவை ஓர் இனமாக நிலைத்து நிற்க தேவையான மாற்றங்கள் நிகழ்வதை நம்மால் சோதித்து அறிய முடிகிறது அல்லது காணமுடிகிறது( இந்த கருத்து குறித்து பின்வரும் தொடர்களில் இன் ஷா அல்லாஹ் தெளிவாக காண்போம்) ஒரு இனத்தில் இருந்து இன்னொரு இனம் தோன்றுவதை( அதாவது இனப்பெருக்க தடை (அதாவது hybridization- இனக்கலப்பு உள்ளிட்டவற்றிலும் தடை ) மற்றும், உருவ மாற்றங்களுடன் கூடிய வேறு இனம் தோன்றுவதை சோதித்து சோதனை கூடத்தில் அறிய முடியுமா என்றால் இதுவரை அது நிகழ்தப்படவில்லை. அது இயற்கையாக நிகழ்வதையும் காணமுடியவில்லை.ஆக இந்த நிகழ்வை சோதனை கூடத்தில் நிகழத்தி சோதிக்கவும் முடியாது. அதனை பரிணாமவியலாளர்களே ஏற்கிறார் ஒரு இனம் இன்னொன்றாக மாற பல லட்சவருடங்கள் ஆகலாம் என்று பரிணாம கோட்பாட்டிற்கு ஒரு அனுமானத்தை கொண்டு முட்டு கொடுக்கிறார்கள். உதாரணமாக பழ ஈக்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அவற்றுள் இனப்பிரிகை ஏற்பட 1,500,000 முதல் 3,500,000 ஆண்டுகள் ஆகலாம் என ஜெர்ரி காய்ன் குறிப்பிடுகிறார்.(2)(3)
                     ஒரு இனம மற்றோர் இனமாக மாறுவதை சோதித்து அறிய முடியாது. ஆக அறிவியல் கோட்பாட்டின் ஆரம்ப வரைவிலக்கணத்தின் அடிப்படையிலும், பரிணாமவியலாளர்கள் அனுமானத்தால் கொடுக்கும் முட்டினாலும் ஒரு இனம் வேறு ஒரு இனமாக மாறும் என்பது அறிவியல் கோட்பாடு எனும் அந்தஸ்தை இழக்கிறது என்பது நிறுபனமாகிறது.  
( மேற்குறிபிட்ட பரிணாமத்திற்கு ஆதாரமாய் சில உதாரணங்களை சிலர் முன்வைக்கின்றனர். அது அறிவியல் மற்றும், நிதர்சனத்திற்கு எவ்வளவு எதிரானது என்பதனை ஆதாரங்கள் என்ற தலைப்பின் கீழ் விவரிக்கவுள்ளோம்). ஆக பரிணாமம் என்பது குறித்த ஒரு சாமனியனின் புரிதலுக்கு பூசப்பட்ட அறிவியல் சாயம் சற்று வெளுத்துள்ளது. பரிணாமம் என்பது மொத்தமும் ஊகம்தான என்பதை விளக்க பரிணாமம் சோதனைக்குரியது என்ற அனுமானத்தை??????? நாம் ஏற்று கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வோம்...

நவீன டார்வினிஸம்: (MODERN EVOLUTIONARY SYNTHESIS) என்றால் என்ன???


               சென்ற தொடரில் உயிரியல் இனத்தோற்ற கருத்தியலுக்கு முழுவடிவம் கொடுத்த ஏர்ண்ஸ்ட் மைர் அவர்களின் இனப்பெருக்க பாகுபாடு அல்லது பிரிவின் அடிப்படையிலான கருத்தை அறிந்தோம். நாம் 2ம் மற்றும் 3ம் தொடர்களில் ஏன் உருவ அமைப்பில் தோன்றும் மாற்றங்கள் அடுத்தத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுவதில்லை என்பது குறித்து வைஸ்மேனின் ஆய்வுகள் அடிப்படையில் விளக்கி இருந்தோம். ஆக உடலியல் ரீதியான மாறுபாடுகள் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாது என்பது நிறுவப்பட்ட நிலையில் பரிணாமத்தை அறிவியல் என வாதிட மாற்று கருத்து தேவைபட்டது. ஆக பரிணாமவியலை நிறுவ கிரிகர் மெண்டலின் கருத்து, மரபியல் கருத்துக்கள் ஆகியவற்றை தொகுத்து உருவாக்கப்பட்ட கருத்துதான் நவீன தொகுப்பு பரிணாமவியல் (MODERN EVOLUTIONARY SYNTHESIS) ஆகும்.

                20ம் நூற்றாண்டில் அதாவது 1918 முதல் 1970 வரை பரிணாமவியல் கருத்தாக்கத்தில் தோன்றிய, மாறிய புதிய புரிதல்களின் தொகுப்புத்தான் நவீன தொகுப்புப் பரிணாமம் ஆகும். கிரிகர் மெண்டலின் மரபியல், (MENDELIAN HERIDITARY) உயிரியல் அமைப்பு முறைப்படுத்தல் (BIOLOGICAL SYSTEMATICS) மற்றும் டார்வினின் இயற்கை தேர்வு (NATURAL SELECTION) ஆகியவற்றை ஒன்றினைத்து ஏர்ன்ஸ்ட் மைர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கோட்பாட்டியல் புரட்சிதான் இந்த நவீன தொகுப்புப் பரிணாமம் (MODERN EVOLUTIONARY SYNTHESIS) எனப்படுகிறது.

                பரிணாமவியலுக்கு மிக சாதகமாக இனத்தோற்ற அடிப்படையிலான இனக்கருத்து இருந்த போதிலும், ஏர்ண்ஸ்ட் மைர் போன்றவர்கள் இனப்பெருக்க பிரிவினை அடிப்படியிலான இனக்கருத்தை உயர்த்திப்பிடிக்க காரணம் இந்த நவீன தொகுப்பு பரிணாமத்தின் ஆதர்வு நிலைதான். ஆக இனங்கள் தோன்றுவதற்கு இருக்க வேண்டிய முக்கிய காரணி இனப்பெருக்க பிரிவினைதான் என்பதை ஏர்ண்ஸ்ட் மைரின் கருத்துக்கள் ஆணித்தனமாக மேற்குறிபிட்ட பரிணாமவியல் கொள்கையில் முன்வைக்கப்படுகிறது. ஆக படிமங்களினால் நிறுவப்படும் கருத்தியலும், பரிணாம உயிரிலாளர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களும் நேர் எதிரானவை. ஆனால் இவை இரண்டும் இணைந்து பரிணாமத்திற்கு முழு சான்று அளிக்கிறது என்பது எத்தகைய கேலிக்குறியது என்பதை இந்த தொடர்களை வாசிப்பவரின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

   பரிணாம்ம் குறித்து எர்ண்ஸ்ட் மைர் அவர்களது நேரடி வார்த்தைகளினாலே புரிந்து கொள்ள முயல்வோம்

THE LOGIC OF THE THEORY OF NATURAL SELECTION
Darwin's theory consisted of three inferences based on five facts derived in part from population ecology and in part from phenomena of inheritance.
Fact 1: All species have such great potential fertility that their population size would increase exponentially (Malthus called it geometrically) if all individuals that are born would again reproduce successfully.
Fact 2: Except for minor annual fluctuations and occasional major fluctuations, populations normally display stability.
Fact 3: Natural resources are limited. In a stable environment they remain relatively constant.
Inference 1: Since more individuals are produced than can be supported by the available resources but population size remains stable, it means that there must be a fierce struggle for existence among the individuals of  a population, resulting in the survival of only a part, often a very small part, of the progeny of each generation. 

These facts derived from population ecology lead to important conclusions when combined with certain genetic facts.
டார்வினின் கோட்பாடு இனத்திரள் சூழலியலியல் (Population Ecology) மற்றும் மரபுவழி பெறுகை(inheritance) நிகழ்வின் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் உண்மைகளின் அடிப்படையில் மூன்று அனுமானங்களை அல்லது உய்த்துணர்தல்களை கொண்டது. 
உண்மை  1: ஒவ்வொரு இனத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் இனப்பெருக்கம் செய்யும் பட்சத்தில், அனைத்து இனங்களின் தொகையும் பல்கிப்பெருகும் இனப்பெருக்க வளம் கொண்டவை. (மால்துஸ் இதனை வடிவியல் பெருக்கம் எனக்குறிப்பிடுகிறார்) 
உண்மை 2: ஆண்டுதோறுமான சிறு மற்றும் பெரும் ஏற்றத்தாழ்வுகளை தவிர்த்து இனத்திரள் நிலைத்தன்மையை கொண்டிருக்கும். 
உண்மை 3: இயற்கை வளங்கள் வரையறுக்கப்பட்டவை. நிலையான சூழலில் அவை ஒப்பீட்டளவில் நிலையானது. 

அனுமானம் 1: இருக்கும் வளங்கள் ஆதரிக்கும் எண்ணிக்கையை விட ஒரு இனத்தின் தனித்த உயிர்களின் இனப்பெருக்கும் அதிகமாய் இருக்கின்ற போதும், இனத்திரள் நிலைத்தன்மையை கொண்டிருப்பது, அந்த இனத்திரளில் உள்ள தனித்த உயிர்களுக்கு மத்தியிலும் கடுமையான வாழ்கை போராட்டம் நிகழ்கிறது என்பதை காட்டுகிறது. இதனால் ஒரு இனத்திரளில் ஒரு பகுதி மட்டுமே பிழைத்து வாழ்கின்றது, பல நேரங்களில் ஒவ்வொரு தலைமுறையின் சிறு பகுதி மட்டுமே தப்பி பிழைக்கின்றது. 



இனத்திரள் சூழலியலின் இந்த உண்மைகளை சில மரபியல் உண்மைகளுடன் இணைக்கும் போது சில முக்கிய முடிவுகளை அடையமுடிகிறது. 


Fact 4: No two individuals are exactly the same; rather, every population displays enormous variability. 
Fact 5: Much of this variation is heritable. 

Inference 2: Survival in the struggle for existence is not random but depends in part on the hereditary constitution of the surviving individuals.  This unequal survival constitutes a process of natural selection. 


Inference 3: Over the generations this process of natural selection will lead to a continuing gradual change of populations, that is, to evolution and to the production of new species.(4)
உண்மை 4: (ஒரு இனத்திரளின்) இரண்டு தனித்த உயிர்கள் ஒரே போன்று இருப்பதில்லை. மாறாக ஒவ்வொரு இனத்திரளும் மிகப்பெறும் மாறுபாடுகளை தனக்குள்ளே காட்டுகிறது.

உண்மை 5: இந்த மாறல்கள் பெரும்பான்மையானவை பாரம்பரிமானவை. 

அனுமானம் 2: இந்த வாழ்கை போராட்டத்தில் தப்பிப்பிழைப்பது என்பது எதேச்சையான ஒன்றல்ல மாறாக இதன் ஒரு பகுதி தப்பிப்பிழைக்கும் தனித்த உயிரின் பாரம்பரிய உள்ளமைப்பினை சார்ந்து இருக்கிறது. இந்த சமமில்லாத தப்பிப்பிழைத்தல் இயற்கை தேர்வு என்ற செயல்முறையை தோற்றுவிக்கிறது. 


அனுமானம் 3: பல தலைமுறைகளாக இயற்கைதேர்வு என்ற இந்த செயல்முறை இனத்திரள்களில் தொடரும் படிநிலை மாற்றங்களை தோற்றுவிக்கிறது அதாவது பரிணாமத்தை தோற்றுவிக்கிறது. மேலும் புது இனங்களை உருவாக்குகிறது.

           நாம் மேற்குறிபிட்ட கருத்தியலை விளக்கி ஆய்வு செய்வோம். இதில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் உய்த்துணர்தல் எந்த அளவு சரியானது என்பதை பரிணாமவியலின் ஏனைய கருத்துகளையும் தலைப்புக்களையும் ஆய்வு செய்வதற்கு முன்பே புரிந்து கொள்வது இந்த பரிணாமவியல் என்ற கோட்பாட்டின் அடித்தளத்தின் வலிமை?????? எத்தகையது என்பதை புரிந்து கொள்ள போதுமானதாய் இருக்கும்.

அனுமானம் 1: இருக்கும் வளங்கள் ஆதரிக்கும் எண்ணிக்கையை விட ஒரு இனத்தின் தனித்த உயிர்களின் இனப்பெருக்கும் ஆற்றல் அதிகமாய் இருக்கின்ற போதும், இனத்திரள் நிலைத்தன்மையை கொண்டிருப்பது, அந்த இனத்திரளில் உள்ள தனித்த உயிர்களுக்கு மத்தியில் கடுமையான வாழ்கை போராட்டம் நிகழ்கிறது என்பதை காட்டுகிறது. இதனால் ஒரு இனத்திரளில் ஒரு பகுதி மட்டுமே பிழைத்து வாழ்கின்றது, பல நேரங்களில் ஒவ்வொரு தலைமுறையின் சிறு பகுதி மட்டுமே தப்பி பிழைக்கின்றது.

           மேற்குறிபிட்ட இந்த அனுமானத்தை கார்ல் பாப்பர் அவர்களின் அறிவியல் கோட்பாட்டின் வரைவிலக்கணத்தில் அடிப்படையில் சோதிக்க முடியுமா என்று பார்போம். அவ்வாறு சோதிக்கப்படும் போது அது எந்தளவிற்கு உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதை பார்ப்போம். 

               அதாவது ஒரு இனத்தில் இருக்கும் தனித்த ஒவ்வொரு உயிர்களும் பல்கிப்பெருகும் ஆற்றல் கொண்டவை. எண்ணிக்கையில் ஆண்டுதோறும் சிறு மாற்றங்கள் தோன்றினாலும் ஒரு இனத்தில் உள்ள உயிர்களின் மொத்த எண்ணிக்கை நிலையாகவே இருக்கிறது. அது போல இயற்கை வளத்தின் அளவு வரையறுக்கப்பட்டதுதான். இந்நிலையில் ஒரு பல்கிப்பெருகும் இனத்திரளின் எண்ணிக்கை நிலையாக இருப்பது என்பது எதை காட்டுகிறது என்றால் தனித்த உயிர்களுக்கு இடையே கடுமையான போராட்டம் நிகழ்கிறது. இந்த போராட்டதில் தப்பிப்பிழைப்பவை சில உயிர்கள் மட்டுமே. இந்த தப்பிப்பிழைக்கும் உயிர்களிலும் அவற்றின் சந்ததிகளிலும் சில உயிர்களே தப்பிப்பிழைக்கின்றன. 

              மேற்குறிபிட்ட இந்த அனுமானம் சரியாக தோன்றினாலும் இந்த கருத்து அறிவியல் ஆய்வு மற்றும் உண்மை புரிதலுக்கு மாற்றமானதாகும். இந்த அனுமானத்தின் மூலமாக அமைந்த இனத்திரள் சூழலியல், இந்த கருத்து குறித்து என்ன கூறுகிறது என்பதை காண்போம். 

            இது குறித்த தற்கால ஆய்வுகள் ஒரு இனத்திரளில் இருக்கும் உயிர்களின் எண்ணிக்கை நிலையாக இருப்பது போராட்டத்தினால் மட்டும் அல்ல அந்த உயிர்களின் இனப்பெருக்க ஆற்றலில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளினால்தான். அதாவது ஒரு இனத்திரளில் இருக்கும் உயிர்களின் இனப்பெருக்க ஆற்றல் மொத்த உயிர்களின் ஜனத்தொகைக்கு ஏற்றவாறு மாறுகிறது. அதாவது ஜனத்தொகை அதிகமாக இருக்கும் போது இனப்பெருக்க ஆற்றல் தானே குறைகிறது. அதுபோல் ஜனத்தொகை குறையும் போது இனப்பெருக்க ஆற்றல்(Fecundity) தானே உயர்கிறது. (Fecundity- என்பது கரு உற்பத்தி ஆற்றல் எனப்படுகிறது. இவ்வாறான ஜனத்தொகை சார்ந்து கரு உற்பத்தி அளவில் ஏற்படும் மாறுபாடுகளை Density Dependent Regulation of Fecundity என்று இனத்திரள் சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்(5)
மேலும் இத்தகைய செயல்பாட்டிற்கான காரணம் இன்னும் புலப்படவில்லை என்பது அதிகப்படியான தகவல். (6)



            ஆக முதல் அனுமானம் கூறுவது போல் உயிர்களில் என்றும் போராட்டம் நிகழ்வதில்லை. ஆக முதல் அனுமானம் முழுவதும் சரியல்ல. அதில் குறைகள் இருக்கிறது என்பதுடன் வாழ்கை போராட்டத்தினால் பலவீனமான உயிர்கள் ஒரு இனத்திரளில் முற்றிலும் அழியாது என்பதும் நிருபனம் ஆகிறது. பலவீனமானவை அல்லது சூழலுக்கு ஏற்ப தாக்குபிடிக்காதவை அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்யும், அதன் இழப்பை ஈடு செய்ய. மேலும் மால்தூஸ் என்ற பாதிரியின் (1766- 1834) இந்த வாழ்க்கை போராட்டம் குறித்த கருத்துக்கள் கார்ல் மார்கஸ் போன்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முதலாளித்துவத்திற்கு வெண்சாமரம் வீசும் கருத்தாக எடுதுக்கொள்ளப்பட்டதால்தான் என்னவோ சோவியத்தில் மால்தூஸின் கருத்தியல் அடிப்படையிலான டார்வினிஸம் ஒதுக்கப்பட்டு லாமார்க்கியம் 1965 வரை கோலோச்சி இருந்தது போலும்..


      ஆக பரிணாமவியல் குறித்த முதல் அனுமானம் சோதனையில் தாக்குபிடிக்கவில்லை. ஆக இதனை அடிப்படையாக கொண்ட அடுத்த அனுமானம் என்ன ஆகும் என்பதையும் காண்போம்.
அனுமானம் 2: இந்த வாழ்கை போராட்டத்தில் தப்பிப்பிழைப்பது என்பது எதேச்சையான ஒன்றல்ல மாறாக இதன் ஒரு பகுதி தப்பிப்பிழைக்கும் தனித்த உயிரின் பாரம்பரிய உள்ளமைப்பினை சார்ந்து இருக்கிறது. இந்த சமமில்லாத தப்பிப்பிழைத்தல் இயற்கை தேர்வு என்ற செயல்முறையை தோற்றுவிக்கிறது. 
                அதாவது சூழலுக்கு தக்க தாக்கு பிடிக்கும் மாறல் இருக்கும் உயிரினம் ஒரு இனத்திரளில் அழியாது நிலைத்துவிடும். முன் கூறியது போல இந்த அனுமானமும் முழுமையும் சரியானதல்ல. அதாவது முன் கூறியது போலவே பலவீனமான உயிர்கள் தங்களது இருப்பை தக்கவைக்க அதிகமாக பல்கிபெருகுகிறது. அதன் விளைவாக தனது மரபை பெருமளவில் அடுத்த சந்ததிக்கு கடத்தி விடுகிறது. இதனால்தான் இன்றும் நிறக்குருடு போன்ற மரபியல் குறை இருக்கும் மனிதர்களை காணமுடிகிறது. உலக மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீத மக்கள் இத்தகைய மரபியல் குறைபாட்டுடனேயே இன்றும் இருப்பதை காணமுடிகிறது. இன்னும் தெளிவாக Mutation- Selection Balance theory இதை விளக்குகிறது.(7)
அனுமானம் 3: பல தலைமுறைகளாக இயற்கைதேர்வு என்ற இந்த செயல்முறை இனத்திரள்களில் தொடரும் படிநிலை மாற்றங்களை தோற்றுவிக்கிறது அதாவது பரிணாமத்தை தோற்றுவிக்கிறது. மேலும் புது இனங்களை உருவாக்குகிறது.
             ஆக மேற்குறிபிட்ட மூன்றாவது அனுமானம் இதற்கு முன் நாம விளக்கிய இரண்டு பலவீனமான அனுமானங்களின் மேல் கட்டமைக்கப்பட்டது. ஆக மூன்றாவது அனுமானம் தானகவே பலவீனமடைந்துவிடும். ஆயினும் இயற்கை தேர்வு என்பது நிகழத்தான் செய்கிறது. ஆனால் இயற்கை தேர்வும் அதை அடிப்படையாக கொண்ட டார்வினிஸ்மும் இனத்தோற்றத்தின் காரணம் என்பதெல்லாம் சுத்த கட்டுக்கதை. மாறாக இயற்கை தேர்வுதான் ஒரு இனத்தினை அழியாமல் பாதுகாக்கிறது என்பதை பின்வரும் தொடர்களில் இன் ஷா அல்லாஹ் விளக்குவோம். இந்த இயற்கை தேர்வுதான் இனங்களின் தோற்றத்திற்கும் , வாழ்க்கை போராட்டம்தான் இனங்களின் மறைவிற்கும் காரணம் என விளக்கவே இந்த அனுமானங்களை பிடித்து தொங்கிகொண்டுள்ளனர் பரிணாமவியலாளர்கள். மேலும் இந்த விளக்கத்தை பிடித்து தொங்கினால்தான் ஓரளவிற்காவது படிமங்களை பரிணாமத்திற்கு ஆதாரமாய் கொள்ளமுடியும். அதாவது மூதாதைகள் வாழ்க்கை போராட்டத்தில் அழிந்தன. மாறுபாட்டுடனான உயிர்கள் தப்பிப்பிழைத்தன என வாதிட முடியும், அழிந்த உயிர்களின் படிமங்களையும் எழும்பு கூடுகளையும் வைத்துக்கொண்டு இவைதான் இன்றிருக்கும் உயிர்களின் மூதாதை என பொய்யாக வாதிக்க முடியும்.

       ஆனால் படிமங்களிலும் பரிணாமவியலாளர்களுக்கு சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது படிமங்களில் உயிர்கள் திடிரென அழிந்திருக்கின்றன. அதே போல் தோன்றியும் இருக்கின்றன. இது இங்கு பேசப்படும் பரிணாமவியலின் படிநிலையில் சிறு சிறு தொடர் மாற்றங்களினால் உயிர் இனங்கள் இயற்கை தேர்வால் தோன்றும் என்பதற்கு நேர் எதிரானது. இயற்கை தேர்வினால் இனங்கள் தோன்றி இருந்தால் பூமி துவக்கம் முதல் இன்று வரை உள்ள இனங்கள் அப்படியே இருக்கும். சில அழிந்து படிமமாய் இருக்காது. அவ்வாறு அழிந்து ஒத்ததோற்றத்துடன் படிமமாய் இருப்பவற்றை “Pseudo extinct”(பொய்யாக அழிந்தவை)(8) என்று அழைக்கிறார்கள் படிமவியலாளர்கள்.


    அதாவது மூதாதைகள் அழிந்திருக்கும் ஆனால் அவற்றின் ஒத்த தோற்றமுடைய உயிர்கள் இன்றும் இருக்கும். அவை எந்த அளவிற்கு ஒத்திருக்கும் என்றால் அவற்றின் பாகுபாட்டை அவை இன்றிருக்கும் இனங்களுடன் அவை இனப்பெருக்கம் செய்தனவா என்பதை அறிந்தால் மட்டுமே சாத்தியம் எனும் அளவிற்கு அமைந்திருக்கும். நாம் சென்ற தொடரில் குறிபிட்டது போல் உருவத்தில் இருக்கும் சிறு வேற்றுமையின் அடிப்படையில் தொல்லியலாளர்கள் அவற்றை தனி இனமாக பிரித்திருப்பார்கள் ஆக படிநிலையில் சிறு தொடர் மாற்றங்களினால் உயிர் இனங்கள் தோன்றும் என்பதும், வாழ்க்கை போராட்டத்தில் உயிரினங்கள் முற்றிலும் அழிந்தன என்பதும் படிமங்களின் அடிப்படையில் நம்பும் படியாக இல்லை. இவ்வாறு உயிர் இனங்கள் படிநிலையில் சிறு சிறு தொடர் மாற்றங்களினால் தோன்றியதற்கான ஆதாரங்கள் படிமங்களில் இல்லாத காரணத்தினால்தான் ஜே கோல்ட் போன்றவர்கள் “Punctuated Equilibrium” எனும் கோட்பாட்டை முன்வைக்கின்றார்கள். எது பரிணாமத்தின் இயற்கை???? என்பதிலேயே கோல்டும் டாவ்கின்ஸும் மோதிக்கொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். (9) ஆனால் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட ஆயிரம் சிக்கல்களை அறிவியல் முன்வைக்கும் போது கோட்பாட்டியல் ரீதியில் பெருமாற்றங்கள் திடிரென உயிர்களில் தோன்றி அவை வேறு இனமாக எப்படி மாற முடியும் என்பது டாக்கின்ஸ் போன்ற பரிணாமவியலாளர்களால் எழுப்பப்படும் கேள்வி. கோல்ட் போன்றவர்கள் இத்தகைய சிறு சிறு தொடர் மாற்றங்களால் உயிர் இனங்கள் வேறு இனங்களில் இருந்து தோன்றின (Anagenesis)  என்பதற்கான படிம ஆவணங்கள் மிகவும் அரிதானது என்கிறார்கள்.(10) ஆக படிம ஆதாரங்கள் டாக்கின்ஸ் போன்ற பரிணாம ஆதரவாளர்களின் கருத்துக்கு ஒத்துவரவில்லை, ஆக உயிர்கள் திடிரென தோன்றி இருக்கின்றன என வாதிக்கின்றனர்.


        இன்னும் தெளிவாக கூறுவதாக இருந்தால் படிம ஆவணங்களில் உயிர் இனங்கள் திடீரென தோன்றியும் மறைந்தும் உள்ளது. ஆனால் ஒரு இனம் வேறு இனமாக பரிணமிக்க வேண்டுமாயின்,  படிநிலையில் சிறு சிறு தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு பிறகு ஒரு இனம் வேறு ஒரு இனமாக பரிணாமிக்கும் என உயிரியல், மரபியல், மற்றும் செல்லியல் தொடர்பான அறிவியல் ஆய்வுகள் காட்டுகிறது. ஆனால் இத்தகைய ஆய்வுகள் குறிப்பிடும் கால அளவு நேரடி ஆதாரங்களான படிமங்களோடு ஒத்துவரவில்லை. ஆக ஆய்வு குறிப்பிடும படிநிலை தொடர்மாற்றங்கள் என்பது கண்முன்னே இருக்கும் படிம ஆவணங்களுக்கு நேர்மாறாக இருக்கிறது. ஆக பரிணாம இயங்கியலின் இயற்கை என்ன என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது.

       அதுபோல் ஒரு உயிரியல் செயலாக்கம் என்பது அடிப்படையாக சில தன்மைகளை கொண்டிருக்கும். அதாவது அந்த செயலாக்கத்திற்கு உள்ளீடு இருக்கும், அடுத்து வெளியீடு இருக்கும். இதனை கொண்டு அந்த செயலாக்கத்தின் செயல்திறன் என்ன என்பனவற்றை அறிய முடியும். உதாரணமாக ஒளிச்சேர்கையை எடுத்துக்கொள்வோம் அதன் உள்ளீடு சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, நீர் உள்ளிட்டவை. வெளியீடு: குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன்.


           இது போல் இயற்கை தேர்வு என்ற செயலாக்கத்தின் உள்ளீடு என்ன. வெறும் வெளியீட்டை மட்டும் வைத்து ஒரு செயல்முறை இருப்பதாக வாத்திப்பதானால், ஏன் படைப்பு என்ற செயல்முறை நிகழ்ந்து இருக்கக்கூடாது?, என்ற வாதத்தை முன்வைக்கலாமே??? இயற்கை தேர்வின் செயல்திறன் என்ன? எவ்வளவு கால அளவை எடுத்துக்கொள்ளும் போன்ற அளவீடுகளை இயற்கை தேர்விற்கு வழங்க இயலுமா???? அந்த அளவீடுகள் படிமங்களோடு எந்த அளவிற்கு ஒத்தமைகின்றது போன்ற கேள்விகளுக்கு பரிணாமவியலில் பதில் இருக்கிறதா??? ஆக இயற்கை தேர்வுதான் உயிர்களில் இனங்களை தோற்றுவித்தது என்பது ஒரு முழு ஊகம். அது செயலாக்கத்திற்கான எந்த அளவீடுகளையும் கொண்டிருக்க வில்லை.

     பரிணாமத்தின் இறுதி இலக்கான “இனம்” என்ற வரைவில் குழப்பம். பரிணாமத்தின் அடிப்படை இயங்கியல் எப்படி நடைபெறுகிறது என்பதில் பரிணாமவியலாளர்களுக்கு இடையில் குழப்பம்....இப்படி இலக்கிலும், இயங்கியலிலும் கருத்து வேறுபாடுகளும் குழப்பமும் நிகழும் போது பரிணாமவியல் எப்படி அறிவியல் கோட்பாடு எனும் நிலையை அடையும்....... இதனால்தான் என்னவோ பாப்பர் ஆரம்பத்தில் பரிணாமம் என்பது அறிவியல் அல்ல என்று குறிபிட்டார். பின்னர் ஏற்பட்ட அழுத்தத்தினால் பரிணாமம் அறிவியல் என ஏற்கும் படியானது. ஆனால் மேல் குறியவற்றிற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அனுமான்ங்கள் பல இணைக்கப்பட்டு கொண்டே செல்கிறது எனும் போது பரிணாமம் அறிவியலா???? என்பதற்கான விடையை வாசிப்பவர் புரிந்து கொள்ளட்டும்.

Citation:
1.P.no: 36 , CONJECTURES AND REFUTATIONS by Karl Popper
2.https://www.ncbi.nlm.nih.gov/pubmed/28568554 , 3.https://onlinelibrary.wiley.com/doi/epdf/10.1111/j.1558-5646.1989.tb04233.x
4.P.No 479-480 The Growth of Biological Thought Diversity, Evolution, and Inheritance by ERNST MAYR
5.https://www.nature.com/scitable/knowledge/library/introduction-to-population-demographics-83032908
6.https://courses.lumenlearning.com/wm-biology2/chapter/population-dynamics-and-regulation/
7.P.No.702-704 Introduction to Genetic Analysis by Anthony J. F. Griffiths, Susan R. Wessler, Sean B. Carroll, John Doebley
8.https://en.wikipedia.org/wiki/Pseudoextinction
9.P.No.4 Dawkins Vs. Gould: Survival of the Fittest
10.P.No:606, The Structure of Evolutionary theory by Stephen Jay Gould.


References:
1.CONJECTURES AND REFUTATIONS by Karl Popper
2.The Growth of Biological Thought Diversity, Evolution, and Inheritance by ERNST MAYR
3.Introduction to Genetic Analysis by Anthony J. F. Griffiths, Susan R. Wessler, Sean B. Carroll, John Doebley
4.Dawkins Vs. Gould: Survival of the Fittest by Kim Sterelny
5.Essentials of Ecology by G.Tyler Miller Jr. and Scott E.Spoolman
6.The Structure of Evolutionary theory by Stephen Jay Gould

7.Prehistoric Life: evolution and fossil record by Bruce S.Lieberman and Roger Kaesler

No comments:

Post a Comment