பக்கங்கள் செல்ல

Sunday, December 9, 2018

தொடர் 3: பரிணாமம் : உண்மையா ஊகமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்

                நாம் சென்ற தொடரில் டார்வினிஸத்தின் மாற்றான லாமார்க்கிஸம் மற்றும் அதன் மறுப்பையும் கண்டோம். மேலும் டார்வின் தனது இயற்கை தேர்வு குறித்த புரிதலுக்கு மாற்றான பேஞ்ஜெனிஸிஸ் என்ற கருத்தை முன்வைத்தார் என்பதையும், பார்த்தோம். அதன் காரணமாக கலப்பு பாரம்பரியம் (Heriditary Blending) போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இயற்கைத்தேர்விற்கு அன்று விழிபிதுங்கியதால் ஆர்தோஜெனிஸிஸ் என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. அதாவது உதாரணமாக சிகப்பு நிற பூ இருக்கும் தாவரத்திற்கும் வெள்ளை நிற பூ இருக்கும் தாவரத்திற்கும் இடையே இனச்செர்க்கை ஏற்படும் போது டார்வினின் அன்றைய கருத்தியலான பேன்ஜெனிஸிஸ் அடிப்படையில் இனச்சேர்க்கையில் பிங்க் நிற பூ பூக்கும் தவாரம் கிடைக்க வேண்டும் முடிவாக. ஆனால் அதற்கு மாற்றமாக இரண்டாம் தலைமுறை பூக்கள் சில வெண்மையாகவும், சில சிகப்பாகவும் இருக்கிறது. (இது குறித்த தெளிவு பின்னாளில் கிரிகர் மெண்டலினால் தோன்றியது என்பது வேறு விஷயம். அது குறித்து பின்னாள் வரும் தொடர்களில் இன் ஷா அல்லாஹ் கண்போம்.) இது போன்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் இயற்கை தேர்வு திணறிக்கொண்டிருந்த காலத்தில் ஆர்தோஜேனிஸிஸ் என்ற கருத்தியல் முன்வைக்கப்பட்டது. இன்றும் இந்த கருத்தை ஆதாரிக்கும் பரிணாமவியலாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் நவீன லமார்க்கிஸவாதிகள் என அழைக்கப்படுகிறார்கள்

                  நாம் முதல் தொடரில் கண்டது போல் பரிணாமம் என்பது இரண்டு எதிர் கருத்தியல் பிரிவுகளை ஆரம்ப காலம் முதலே கொண்டிருக்கிறது. இது குறித்த கருத்து மோதல்கள் இரு அணி அறிவியலாளர்களிடமும் (தத்துவவியலாளர்களிடமும்) காலம் காலமாக இருப்பதை பரிணாமவியல் வரலாறு நெடுக காணமுடிகிறது. அவை.
1.இன்றிருக்கும் நவீன டார்வினிஸம் கூறுவது போல் தற்செயல் மாற்றங்களால் உயிர்களில் இனங்கள் தோன்றியது. அதாவது ஒரு இனத்தை சார்ந்த உயிரில் ஏற்படும், எந்த குறித்த நோக்கமும் இல்லாத அதன் உறுப்பு மற்றும் அதன் மரபணுக்களில் ஏற்படும் தற்செயல் மாற்றங்கள், அவை இயற்கை தேர்வினால் தேர்வு செய்யப்பட்டு வேறு  ஓர் இனத்தை தோற்றுவித்ததாக நம்பப்படும் கருத்தியல். உதாரணமாக குரங்கு மற்றும் மனிதனின் இடைபட்ட மூதாதையருக்கு ஏற்பட்ட தற்செயல் மாற்றம் குரங்கினத்தையும் மனித இனத்தையும் தோற்றுவித்தது என்ற வாதம்.

2.முன்முடிவிட்ட முடிவினை (Final Cause) நோக்கிய மாற்றங்களே உயிர்களில் இனங்களை தோற்றுவித்தது. இதனால் உயிர்கள் “பூரணத்துவத்தை (perfection)” நோக்கி நகர்ந்தவாறு இருக்கும். இதனைதான் நாம் இயல்திட்ட வாதம் அடிப்படையிலான கோட்பாடு என்று முதல் தொடரில் கண்டோம். அதாவது ஒவ்வொரு உயிர்களின் அமைப்பிலும் தோன்றும் மாற்றங்கள் பின்னாளில் ஏற்படும் ஏதோ ஒரு இறுதி முடிவுக்கான படிகட்டுகளை போன்றது என்ற கருத்தியல். உதாரணமாக குரங்கில் தோன்றிய ஒவ்வொரு மாற்றங்களும் மனிதன் என்ற இறுதி முடிவை நோக்கியதாகவே இருந்தது. இந்த-இந்த மாற்றங்கள் இப்படி-இப்படி ஏற்பட்டால்தான் அவன் மனிதன் ஆவான் என்ற முன்முடிவு எடுக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே மாற்றங்கள் தோன்றின என்ற வாதம். இத்தகைய இயல்திட்ட வாதத்தின் அடிப்படையில் அமைந்த கோட்பாடுதான் ஆர்த்தோஜெனிஸிஸ் ஆகும்.

               இந்த கருத்தியலும் இதன் விமர்சனத்தையும் இந்த தொடரில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

ஆர்தோஜெனிஸிஸ் (Orthogenesis): 


    இந்த வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஜெர்மன் விலங்கியலாளரான தியோடர் அய்மர் (1843- 1898) (Theodore Eimer) ஆவார். இவர் தனது புத்தகமான “Organic Evolution as the Result of the inheritance of Acquired Characteristics according to the Laws of Organic Growth (Translated in English- 1890)” ல் முதன்முதலில் ஆர்தோஜெனிஸிஸ் (Orthogenesis) என பயன்படுத்தினார். இவரும் ஆர்தோஜெனிஸிஸ் ஆதாரவாளர்தான். ஆயினும் இவர் இயற்கை தேர்வு உள்ளிட்டவற்றை இணைத்து கலவை கோட்பாட்டை முன்வைக்கிறார். ஆக ஆர்தோஜெனிஸிஸ் என்ற பெயர்தான் புதிதே தவிர இந்த கருத்தியல் நாம் குறிபிட்டது போல் முன்பே இருந்த கருத்தியல்தான். மேலும் ஆர்தோஜெனிஸிஸ் ஆதரவாளர், அய்மரின் சமகாலத்தில் வாழ்ந்த, புகழ் பெற்ற தாவரவியலாளரான கார்ல் வில்கம் வான் நகேலி( Carl Wilhom von Nagaeli) 1884ல் உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கு உயிர்களில் இருக்கும் உள்ளார்ந்த தோற்றுவாயே(internal Causes) காரணம் எனும் வாதத்தை முன்வைத்தார் . ஒருமுறை இந்த செய்லபாட்டினால் உயிர்கள் மாற்றம் அடைய துவங்கிவிட்டால் அவை பூர்ணத்துவத்தை நோக்கி மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். இதனை ஆர்தோஜெனிஸிஸ்டகள் “Trend” என அழைக்கின்றனர். ஆக இவ்வாறான மாற்றங்கள் நேர்கோட்டில் அமையப் பெற்றிருக்கும். 
  
     மேலும் படிம ஆராய்ச்சியளர்களான ஆல்ஃபியஸ் ஹயாட்(1838-1902), எட்வர்ட் கோப் (1840- 1897) போன்றவர்கள் குதிரைகளின் படிமங்களை ஆய்வு செய்துவிட்டு குதிரைகளின் மூதாதைகள் நேர்கோட்டில் பயணித்தே இன்றிருக்கும் நிலையை அடைந்திருக்கின்றன என்ற கருத்தை முன்வைத்தனர். மேலும் சீரற்ற மாறுபாடுகளால்(Random variation) இது சாத்தியம் இல்லை என வாதிட்டனர். மேலும் அன்றைய படிமவியலாளர்கள் இந்த கோட்பாட்டை ஆதரிக்க மூல காரணம் இடைநிலை உயிர்களின் (Transitional Organism) படிமங்கள் இல்லாமையே. மேலும் படிம ஆவாணங்கள் குறித்து டார்வின் தனது உயிரினங்களின் தோற்றத்தில் குறிப்பிடும் போது பூமியின் மேற்பரப்பில் இத்தகைய இடைநிலை உயிர்களின் படிமங்கள் குவிந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே” என்கிறார்.(origin of Species by Natural selection: Difficulties on theory. P.No: 124). மேலும் இத்தகைய வாதங்களின் அடிப்படையில் தான் குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 
      ஆனால் இது குறித்து அய்மர் விளக்கும் போது, “ கீழுள்ள உயிர்கள் பரிணமித்து மேலுள்ள உயிர்களை தோற்றுவித்தது என்றால் கீழுள்ள உயிர்கள் இருக்கக்கூடாது . ஆனால் யதார்த்தம் அதுவல்ல.” என்று மறுக்கிறார். உதாரணமாக குரங்கில் இருந்து மனிதன் வந்திருந்தால் குரங்கு இன்றிருக்கக்கூடாது. ஆனால் அது நிதர்சனத்திற்கு மாற்றமாக இருக்கிறது. ஆக அய்மரை பொறுத்தவரையில் நகேலியின் வாதம் என்பது பொருள்முதல் வாத தோல் போர்த்திய உயிர்த்திறவாதம்(vitalism) மற்றும் மாயவாதம்(Mysticism)”
        மேலும் இந்த கருத்தியல் குறித்து நமது சம கால அறிஞரான ஏர்ண்ஸ்ட் மைர் குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

1. உள்ளார்ந்த இயக்கம் அல்லது தோற்றுவாய் என்பது எது என்று விளக்கப்படவில்லை. அல்லது விளங்கமுடியவில்லை. ஆக இயங்கியல் அறியப்பட முடியாது .ஆக ஆர்த்தோஜெனிஸிஸ் மறுக்கப்படுகிறது.

2. படிமங்களை பொறுத்தவரையில் அதன் பயணத்திசை ஆர்த்தோஜெனிஸிஸை பொறுத்தவரை நேர்கோட்டில் இருக்க வேண்டும். ஆனால நிதர்சனத்தில் அதற்கு மாறாக முன்னோக்கி, பின்னோக்கி என அனைத்து திசைகளிலும் இருக்கிறது, ஆக ஒரு உயிரின் படிம அடிப்படையில் ஆர்த்தோஜெனிஸிஸை நிலை நிறுத்தமுடியாது.

    மேலும் ரிச்சர்ட் டாக்கின்ஸ் கூறும் போது: பெறப்பட்ட குணங்களில் பெறும்பாலானவை பாதிப்புகளே. ஆக உயிர்கள் பூர்ணத்துவத்தை நோக்கி நகர்கின்றது என்ற ஆர்த்தோஜெனிடிக் வாதம் சாத்தியம் அற்றது. என்று தனது “The Blind watchmaker: Doomed Rivals P.No: 216 " விளக்குகிறார்.
   
   மேலும் இத்தகைய தகவமைப்பு இயங்கியல் எங்கிருந்து வந்தது போன்ற பல அர்த்தமுள்ள கேள்விகளுக்கு ஆர்த்தோஜெனிடிக் ஆதாரவாளர்களால் போதிய விளக்கம் அளிக்க முடியாமல், இறையியல் மற்றும் இயல்திட்ட வாதத்திடம் மண்டியிட நேர்ந்ததால் ஆர்த்தோஜெனிஸிஸும் அறிவியல் ஊகமா பரிணமித்துவிட்டது...........

  சென்ற இரண்டு தொடர்களில் லாமார்கிஸம் மற்றும் ஆர்த்தோஜெனிஸிஸ்( நவீன லாமார்க்கிஸம்) இரண்டிற்கான மறுப்பையும் கண்டோம். அந்த மறுப்புக்கட்டுரையின் சாரத்தை இங்கு பதிந்துவிடுவோம். 


1. லாமார்க்கின் சந்ததிகளில் தோன்றும் பெறப்பட்ட குணங்கள்    (Inheritance of acquired characters) என்ற கோட்பாடு வைஸ்மேனின் ஆய்வுகளால் வீழ்த்தப்பட்டது. இன்னும் தெளிவாக கூறுவதென்றால் பாரம்பரிய குணங்கள் உயிரணுக்களில் இருந்து விந்து, முட்டை சேர்க்கையின் போது கருவின் (சொமாடிக் செல்களுக்கு) ஏனைய உடல் செல்களுக்கு செல்லுமே தவிர அதன் எதிர் திசையில் அதாவது உடலின் ஏனைய செல்களில் இருந்து விந்து மற்றும் கருமுட்டைக்கு தகவல் பரிமாற்றம் நடக்காது என நிறுவினார். அதே போல் இந்த தலைமுறையின் உயிரணுத்தகவலை அடுத்த தலைமுறையின் உயிரணுக்கள் தாங்கி நிற்கும் என்ற கருத்தை தனது ஆய்வின் மூலம் நிறுவினார்.

2. ஆர்த்தோஜெனிஸிஸை பொறுத்தவரையில் அதில் இருக்கும் உள்ளார்ந்த தோற்றுவாய் எனும் இயங்கியல் புலப்படவில்லை. இது பொருள் முதல்வாத தத்துவத்திற்கு முற்றிலும் மாறானது. கண்ணுக்குத்தெரியாத , விளக்கமுடியாத, அளவிடமுடியாத இயங்கியலை(Mechanism) அடிப்படையாக கொண்ட எந்த கோட்பாட்டையும் பொருள் முதல்வாதம் ஏற்காது. அது அறிவியலுக்கு பொருந்தாதது என வாதிக்கும்.

3. பூரணத்துவத்தை நோக்கி ஒவ்வொரு உயிரும் மாற்றம் அடைந்திருந்தால் மூதாதைகள் காணாமல் போயிருக்கும். ஆனால் அவை இன்றும் இருக்கிறது. இதன் காரணத்தினால்தான் இல்லாத, எந்த படிமத்திலும் காணமுடியாத மனிதனுக்கும் குரங்கிற்கும் மூதாதையாய் இருந்த இடைநிலை உயிரினத்தை இன்றும் நவீன டார்வினிஸ்ட்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை புரியமுடிகிறது.

4. ஒரு சில உயிர்களின் படிம ஆவணங்கள் அடிப்படையில் எல்லாம் ஆர்த்தோஜெனிஸிஸ் போன்ற கோட்பாடுகளை சரிகாண முடியாது. ஏனென்றால் படிமங்கள் எல்லா கருத்தையும் தரும்படியாகவே உள்ளன. ஆக இடை நிலை உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கபெறாதவரை திடிரென உயிர்கள் தோன்றின எனவும் அதை அடிப்படையாக கொண்டு வாதிக்கலாம். ஆக இது படிம ஆவணங்களின் பலவீனமான நிலையை நமக்கு உணர்த்துகிறது.

5. மேலும் பெறப்பட்ட குணங்களில் பெறும்பாலானவை பாதிப்புகளே. ஆக உயிர்கள் பூரணத்துவத்தை நோக்கி நகர்கின்றது என்ற வாதம் சாத்தியம் அற்றது.
        மேற்குறிப்பிட்ட தொகுப்பை நாம் நன்றாக கவனித்து உள்வாங்கிக்கொள்ள வேண்டும் இத்தகைய வாதங்களை நவீன டார்வினிஸ்டகளும் முன்னெடுக்கின்றனர். இவர்கள் எதன் அடிப்படையில் ஏனைய கோட்பாடுகளை மறுக்கின்றனரோ அதே அடிப்படையில் இவர்கள் முன்வைக்கும் பல ஆதாரங்கள் தகர்க்கப்படும், வரும் தொடர்களில் இன் ஷா அல்லாஹ்.


References:
1.What Evolution is? by Ernst Mayr
2.Evolution by Mark Ridley
3.Genesis: The Evolution of Biology by Jan Sapp
4.The Blind WatchMaker by Richard Dawkins
5.Origin of Species by Natural Selaction by Charles Darwin


No comments:

Post a Comment