பக்கங்கள் செல்ல

Sunday, July 16, 2017

உயிர்: 3.உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை:

ஏக இறைவனின் திருப்பெயரால்


உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை:
சென்ற தொடரில் கூறியவாறு நபி(சல்) அவர்கள் இஸ்லாமை முன்வைப்பதற்கு முன்பும் பின்பும் பல தத்துவவியலாளர்கள் உயிர் குறித்து பல கருத்துகளை முன்வைத்துள்ளனர். இஸ்லாம் உயிர் குறித்து என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். 

உயிர் குறித்து குர் ஆன் கூறுவது என்ன?

    உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(அல் குர்ஆன் 39:42)

மேற்கூறிய வசனம் அல்லாஹ் உயிர்களை இரண்டு தருவாயில் கைப்பற்றுவதாக கூறுகிறான். அதாவது தூங்கும் போதும், மரணத்தின் போதும் என்றும் கூறுகிறான். நாம் தூங்கும் போது நமது உயிர் கைப்பற்றப்படுகிறது ஆயினும் நம் உடலை சோதிக்கும் போது நமது உடல் உறுப்புக்களின் இயக்கமான மூச்சு, இதயதுடிப்பு போன்றவற்றை உணரவியலும். நமது உடலில் இருந்த உணர்வுநிலை இல்லாமல் போய்விடுகிறது. இந்த உணர்வுநிலைக்கும் பகுத்தறிவிற்கும் ஆதாரமாக அமைந்த ஆன்மாவான அந்த உயிர்தான் கைப்பற்றப்படுகிறது. மனித உடலில் இருக்கும் இதயதுடிப்பு உள்ளிட்டவை மற்றுமொரு ஆன்மாவால் கட்டுபடுத்தப்படுகிறது. இதை நாம் உடல் என்றே புரிந்து கொள்கிறோம். அதாவது ஒவ்வொரு மனித உடலிலும் இரண்டு ஆன்மாக்கள் இருக்கின்றன. ஒன்று நன்மை தீமையை பகுத்தறிந்து உடலிற்கு கட்டளையிடும் உயிர். இதை காலம் தோறும் உயிர், ஆன்மா,(SOUL, CONCIOUS MIND என்று தத்துவவியலாளர்களால் அழைக்கப்படுகிறது) மற்றொன்று உடல் உறுப்புகளின் செயல்பாட்டை உறுதி செய்யும் உயிர். அதாவது ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் செயல்பாட்டை உறுதி செய்யும் உயிர். இந்த உடலும் அதன் இயக்கத்தை உறுதி செய்யும் உயிர் என்ற இந்த மொத்த அமைப்பையும் உடல் (BODY) என்று தத்துவவியலாளர்கள் அழைப்பார்கள். இந்த இணைப்பு குறித்த விவாதத்தை MIND-BODY PROBLEM என்று தத்துவவியலாளர்கள் அழைப்பார்கள். இந்த இரண்டு உயிர்களும் மொத்தமாக கைப்பற்றப்படுவது மரணமாகும் .

மேலும் மேற்கூறிய இருமைத்துவத்தைதான் இஸ்லாம் முன்வைக்கிறது என்பதற்கு பின்வரும் வசனங்களை கவனிப்போம்.  
  
அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள்? உயிரற்று இருந்த உங்களுக்கு அவன் உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்!(அல் குர்ஆன் 2:28)

    பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
                                                                                                                               (அல்குர்ஆன் 32:9)

      "எங்கள் இறைவா! எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய். எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா?'' என்று அவர்கள் கேட்பார்கள்.
                                                                                                                            (அல்குர் ஆன் 40:11)

மேற்குறிய வசனம் நாம் உயிரற்று இருந்தோம் என்பது கருவின் ஆரம்ப நிலையை கூறுவதாகும். கருவின் ஆரம்ப நிலையில் செல்லின் உயிர் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவற்றிற்கு ஆன்மாவை பின்னாளில்தான் அல்லாஹ் வழங்குவதாக கூறுகிறான். அதை பின்வரும் நபிமொழி உறுதிசெய்கிறது.

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார்.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) நூல்: முஸ்லிம் 5145.)

ஆனால் எவ்வளவுதான் குர்ஆனும் நம்பகமான ஹதீஸ்களும் உடல் உயிர் குறித்து இருமைத்துவ வாதத்தை (DUALISM) முன்வைத்தாலும் உடல் மற்றும் உயிரின் இணைப்பு குறித்து (MIND BODY PROBLEM) நமக்கு எந்த விளக்கமும் இல்லை. இது குறித்து மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளாக விவாதித்து வந்தாலும் போதிய முடிவுகளை தற்போதுவரை எட்டவில்லை , என்றும் எட்டப்போவதுமில்லை என்பதுதான் நிதர்சன் உண்மையாகும் அதைத்தான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் பதிவிட்ட செய்தியானது பின்வரும் குர் ஆன் வசனத்தினால் எடுத்துரைக்கிறது.

   (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! (அல் குர் ஆன் 17:85)

வில்டர் பென்ஃபீல்டின் ஆய்வுகள்: ஒரு பொருள்முதல்வாதியின் சவக்குழி


வில்டர் பென்ஃபீல்ட் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுனர். வலிப்பு நோய் அறுவை சிகிச்சையின் தந்தை. மாண்ட் ரியல் நரம்பியல் கல்வி நிறுவனத்தின் முதல் தலைவர். புகழ் பெற்ற நரம்பியல் நிபுனர் நோபல் பரிசு பெற்ற செர்ரிங்க்டன் அவர்களது மாணவர். இன்று இருக்கும் நவீன நரம்பியலின் முன்னோடி. மூளை வரைபடத்தினை திரம்பட செய்வித்தவர் என்று பல புகழுக்கு சொந்தகாரர். 
ஒரு பொருள்முதல்வாதியாக தனது ஆய்வுகளை ஆரம்பம் செய்து முடிவுகளால் பொருள் இருமைத்துவத்தை முன்வைத்தவர். பொருள்முதல் வாதியான வில்டர் பென்ஃபீல்ட் எப்படி தனது ஆய்வுகளால் வீழ்த்தப்பட்டு இருமைத்துவத்தை ஏற்று கொண்டார் என்பதைதான் பின்வரும் பகுதியில் காணவிருக்கிறோம்.   

பென்ஃபீல்ட் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை வழங்குவதில் வள்ளவர். அவ்வாறு சிகிச்சை அளிக்கும் போது அவர்களை விழிப்பு நிலையிலேயே அவர்களது மூளையின் பகுதிகளை ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டோடு எவ்வாறு தொடர்புடையது என்பதை ஆய்வு செய்தபின் சேதம் அடைந்த பகுதியில் மட்டுமே திரம்பட அறுவை சிகிச்சையை மேற்கொள்வார். அதாவது 60Hz கொண்ட குறைந்த மின்னோட்டத்தை கொண்டு மூளையின் பகுதிகளை தூண்டும் போது குறிப்பிட்ட மூளையின் பகுதியுடன் தொடர்புடைய உடல் உறுப்பில் அசைவை காண்வியலும். இவ்வாறு ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை பின்வரும் படத்தினால் விளக்கினார்.

Add caption


      இவ்வாறு தொடர் ஆய்வில் ஈடுபட்ட பென்ஃபீல்ட் மனிதனின் உயிர் அல்லது உள்ளம்* என்பது குறித்து பின்வரும் ஆய்வு முடிவுகளை முன்வைக்கிறார். அதாவது உள்ளம் என்று நாம் இன்று கூறிவரும் ஒன்றிற்கும் மூளையின் நரம்பியல் செயல்பாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. உள்ளம் என்பது தனித்த ஒன்று என்று குறிப்பிடுகிறார். மேலும் உள்ளத்தின் செயல்பாடான விழிப்பானது எந்த நரம்பியல் செய்ல்பாட்டையும் சார்ந்தில்லை எங்கிறார் பென்ஃபீல்ட். தனது ஆய்வுமுடிவுகளை தனது எண்ண மாற்றங்களையும் வில்டர் பென்ஃபீல்ட்  “The mystery of Mind: A critical study of Consciousness and Human Brain” என்ற புத்தகத்தின் வாயிலாக வெளியிட்டார்.

   *உயிரும் உள்ளமும் ஒன்றாய்தான் அல்லது உயிரின் பகுதியாய்தான் வரலாறு நெடுக காணவியலும்.[1] نفس -- நஃப்ஸ் என்ற அரபுச்சொல் உள்ளம் ஆன்மா இரண்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிரேக்க சொல்லான Psyche[2] என்ற சொல் உள்ளம் ஆன்மா இரண்டையும் குறிக்கும்.


சிந்தனையும் முடிவுகளும் மூளையிலா பிறக்கிறது:

பல காலமாய் மனித சமுகத்தின் கூற்று ஒன்றையே கேள்விக்கு உடப்டுத்துகிறார் பென்ஃபீல்ட். அதாவது சிந்தனையும் முடிவெடுத்தலும் மூளையில் உதிக்கிறது என்று நாம் கூறிவரும் நெடுநாள் நம்பிக்கையையே மறுக்கப்பட்டுவிட்ட்து என்பதுதான் வில்டரின் ஆய்வு முடிவுகள் நமக்கு தரும் அதிர்ச்சியே என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது பென்ஃபீல்ட் உள்ளம் எவற்றை எல்லாம் செய்கிறது என்று நாம் நம்புவதை பட்டியலிடுகிறார்.


மேலும் நாம் அறியப்படும் உள்ளம் என்பதற்கும் மூளைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். அதாவது உள்ளமானது மூளையின் எந்த பகுதியிலும் இல்லை. அது தனித்து இயங்குவதாய் உள்ளது. மேலும் அந்த உள்ளம்தான் தான் இருக்கும் சூழலை அறிந்து அதை உணர்த்துவதாய் இருக்கிறது. அவர் நினைவில் இருக்கும் நோயாளியின் மூளையை மின்முனையினால் இயக்கி அதன் விளைவை விளக்குகிறார்.


         மேற்குறிப்பிடும்  முடிவு என்ன காட்டுகிறது. மூளையின் இயக்கத்திற்கும் “நான்” என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. “நான்” என்று அறியப்படும் உள்ளமானது மூளை என்ற உறுப்பில் இல்லை. மூளையில் தான் “நான்” என்பது இருக்குமானால் ஏன் அந்த நோயாளி “தான்” செய்யவில்லை என்று கூறவேண்டும். மூளைதான் உள்ளத்தின் இருப்பிடமாக இருந்தால் எப்படி அந்த நோயாளியினால் தனது செயலை தானே தடுக்கவியலும். மின்முனையால் ஏற்படும் செயலை எதிர்க்கும் முடிவானது மூளையில் எட்டப்படவில்லை. மூளை என்பது வெறும் கருவிதான். அதைதான் பின்வரும் பகுதியில் பென்ஃபீல்ட் விளக்குகிறார்


     அதாவது இந்த இடத்தில்தான் ஒரு பொருள்முதல்வாதியின் நம்பிக்கை தகர்ந்ததை உணரமுடிகிறது. வில்டரின் ஆய்வுகள் எதுவும் உள்ளத்தின் செயல்பாடுகளை தோற்றுவிக்கவில்லை. மூளை என்பது ஒரு உறுப்பாக பதிவு செய்வதையும், ஆன்மாவுடன் உடலின் ஏனைய பாகத்தை இணைக்கும் ஒரு பாலமாகவும்தான் உள்ளதே தவிர, சிந்தனை முடிவெடுத்தல் சூழல் குறித்த விழிப்பு போன்ற எதையும் மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் வாசிப்பை தொடர்வோம்.


     அதாவது உள்ளமும் மூளையும் தனித்தவை. ஆனால் ஒன்றை கொண்டு மற்றொன்று இயங்குவதாய் இருக்கிறது. இந்த இணைப்பைதான் உயர்ந்த மூளை இயக்கம் என்று வில்டர் கூறுகிறார். மேலும் தனது இறுதி கருத்தை, பல வருட உழைப்பின் முடிவுகளை பின்வருமாறு கூறுகிறார்.


            ஆக மனித இருப்பு என்பது இரண்டு மூல கூறுகளால் ஆனது. ஒன்று நமது உடல் உறுப்புகளிலும் செல்களிலும் காணப்படும் ஆற்றல் அல்லது உயிர்.  மற்றோன்று அறியமுடியாத உள்ளத்தை இயக்கும் உயிர். இந்த உயிர்தான் முடிவெடுத்தல் போன்ற செயல்களை செய்கிறது. இந்த உயிர்தான் நமது உறக்கத்தில் காணாமல் போகிறது. இந்த உயிர்தான் நம்மை விழிப்பில் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் புரிந்துகொள்ளவும் வைக்கிறது. அதனால்தான் மூளையை கணிணி போன்றது என்றும் அதை நிரலாக்கம் செய்து இயக்கும் தனித்த சுதந்திரமான  புரிதலுடைய செய்லாண்மைதான் நமது ஆன்மா அல்லது உள்ளம் என்று கூறுகிறார் வில்டர். பொருள்முதல் வாதத்தை அடிப்படையாக கொண்டு நாத்திகர்கள் ஆன்மா குறித்து எடுத்துவைத்த அத்துனை வாதங்களுக்கும் வில்டரின் அறிவியல் ஆய்வுகள் சம்மட்டி அடி கொடுத்தது என்பதை மூஸ்லிம்களாகிய நாம் சொல்லி புரியவைக்கத்தேவை இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
  மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். (அல் குர்ஆன் 50:16. )

No comments:

Post a Comment