பக்கங்கள் செல்ல

Sunday, July 16, 2017

உயிர்: 2. வரலாற்றில் உயிர்:

ஏக இறைவனின் திருப்பெயரால்


வரலாற்றில் உயிர்:
உயிர் என்றால் என்ன?????? இந்த  கேள்வியை மானுட சமுதாயம் பல நூற்றாண்டுகளாய் எழுப்பி வந்துள்ளது. இந்த கேள்வியை எழுப்பாத சமுதாயங்களே இல்லை என்றே கூறலாம். உயிர் குறித்து பல நூற்றாண்டுகாய் மனித சமுதாயம் ஆய்வுகளையும் பல சித்தாந்தங்களையும் முன் வைத்து வந்துள்ளது. அவை குறித்த ஒரு சிறிய பார்வை இதோ......... 

தேல்ஸ்:(கிமு. 624-548) 
அனைத்து உயிர்களுக்கும் மூலம் நீர். ஈரப்பதமே அனைத்து உயிர்களுக்கும் ஊட்டசத்தாக அமைகிறது. ஈரப்பத்தத்தில் இருந்து வெப்பம் உணடாகிறது. அந்த வெப்பமே உயிரின் ஆதாரம் என்ற கருத்தை தேல்ஸ் முன்வைத்தார்

பித்தகோரஸ்:(கிமு 582-500)
அழுகும் குப்பைகளில் இருந்து விலங்கினங்கள், கடவுளின் உயிரில் இருந்து தோன்றின. ஒரு விலங்கின் வாழ்வானது இந்த ஆன்மாவும், மண்ணுடலும் இணைந்திருக்கும் காலமே ஆகும். இந்த மண்ணுடல் இறக்கும் போது இந்த அழிவற்ற ஆன்மாவானது வேறொரு மண்ணுடல் ( அது விலங்காகவோ, மனிதனாகவோ இருக்கலாம்) அதனுள் நுழைகிறது. இதுவே மண்ணில் தோன்றும் அனைத்து நன்மை தீமைக்கும் காரணம். மேலும் உயிரானது மூன்று மூலக்கூறுகளை உடையது. 
1. உள்ளுணர்வுப்பகுதி: இந்த பகுதிதான் மண்ணுடல் மற்றும் பவ்தீக தேவை குறித்து உணர்வதாய் அமைந்தது.
2. ஆன்மாப்பகுதி: இதுதான் அன்பு, கோபம் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடயது.
3. கல்வியறிவு: இந்த பகுதி இறைசட்டங்களை புரிந்து செய்படுத்தும் பகுதி.
பித்தகோரஸின் சிந்தனை பள்ளிகள் பிளேட்டோவின் சிந்தனை பள்ளிகளுக்குப் பிறகு காணமல் போனது.

ஹிராகிளைட்டஸ்:(கிமு 535 –  475 )
உலக ஆன்மா என்பது அக்னிதான். மூச்சின் மூலமாக இந்த உலக ஆன்மாவை மனிதன் எடுத்து கொண்டு உயிர்வாழ்கிறான். எங்கும் காணப்படும் அறிவே கடவுள். உணர்வு என்பதே எதோ ஒன்று வெளியில் இருந்து நமக்குள் பாய்வது என்று கூறினார். 

எம்படொகில்ஸ்:(கிமு  490 – 430)
இவர்தான் நிறை அழிவின்மை குறித்து முதன்முதலில் பேசியவர். முன்பே இருக்கும் பொருடகளோடு இணைவதாலும் பிரிவதாலுமே பிறப்பு மற்றும் இறப்பு ஏற்படுகிறது. நீர் நெருப்பு காற்று ஆகிவைதான் முன்பே இருக்கும் பொருட்களாகும். இரண்டு விசைகள் இவ்வுலகை இயக்குகின்றன. விலக்கு விசை, ஈர்ப்புவிசை. ஆன்மா தனித்தவை அல்ல. இறைமறுப்பையும், இன்பமே நோக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் உயிர் குறித்த கருத்துகளையும் முன்வைத்தார்.
மேலும் மனோதத்துவவியலுக்கு அடிகோலிட்டவர். மனிதனின் குணங்கள் உடல் கூறு கலவையின் அடிப்படையில் அமைகின்றன என்று வாதிட்டார். தகுதியற்றவை வாழாது என்பதை கூட முன்வைத்தார். இன்றிருக்கும் பல பொருள்முதல்வாதிகளின் மூல கொள்கை இங்கிருந்துதான் ஆரம்பமானது என்று கூறலாம்.

டெமொகிரைடஸ்:(கிமு 460 – 370)
இவ்வுலகமானது எண்ணில்லா அணுக்களினால் ஆனவை. உயிரானது உலகின் ஒரு பகுதி. அது உயிர்ப்புடன் நகர்வதாய் இருந்தாலும் அதுவும் இவ்வுலகின் ஒரே வகையான அணுக்களினால்தான் ஆனது. இந்த அணுக்கள் யாவும் நெருப்பை போன்ற வெப்பத்துகள்களாகும். இவை உடலின் அனைத்து பகுதியிலும் ஊடுருவி உடலிற்கு உயிரை தருகிறது. இந்த உயிரை பல கூறுகளாக பிரித்து அவை உடலின் ஒவ்வொரு பகுதிக்கானது என்றும் கூறினார். அதாவது சிந்தனை என்பது மூளையின் உயிர், பார்வை கண்ணின் உயிர், கோபம் இதயத்தின் உயிர், ஆசை ஈரலின் உயிர் என்று குறிப்பிட்டார்.

ஹிப்பொகிரேடஸ்:((கிமு 460 – 370))
தத்துவவியலையும், மருத்துவத்தையும் இரு துறையாக முதன் முதலில் பிரித்தவர். உடல் என்பது அண்டத்தின் சிறிய மாதிரி. அண்டத்தில் நீர், நிலம், நெருப்பு மற்றும் காற்று போல் உடலில் ரத்தம்,  மஞ்சள் பித்தம், சளி மற்றும் கரும் பித்தம் அமைந்துள்ளது. இவையே மனிதனின் மனோநிலையை நிர்ணயிக்கின்றன. இதே போல் உடல் நோய்கள் அனைத்தும் இந்த நான்கு திரவங்களின் சமநிலையில் ஏற்படும் ஏற்றத்தாள்வுகளே என்ற கருத்தை முன்வைத்தார். இந்த அனைத்து திரவங்களின் ஊற்றுக்கண் மூளையே. ஆக அனைத்து நோயின் மூலமும் மூளையே. உள்ளத்தின் இருப்பிடம் மூளையே. மனநோய் என்பது இந்த உறுப்பில் ஏற்படும் பாதிப்பேயாகும். கரும்பித்தமே மனிதனின் தீய எண்ணங்களான பொறாமை, சந்தேகம், வெறுப்பு, பழியுணர்ச்சி போன்றவற்றிற்கு காரணமாகும் என்றும் குறிபிட்டார்.

சாக்ரட்டீஸ்:

        ஓர் இறைக்கொள்கையை முன்மொழிந்தார். டெல்ஃபியின் இறைவனை தனது ஒரே இறைவனாக எடுத்துக்கொண்டார். (அந்த கடவுள் அப்பலோதான் என்பது அறிஞர்களின் வாதம்) மற்ற கிரேக்க கடவுளர்களை முழுமையாக மறுத்துவிட்டார். இதனாலேயே நாத்தீக குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டது. இந்த கொள்கையினால் இளைஞர்களை வழிகெடுக்கிறார் என்று குற்றம்சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

உயிர் குறித்து இருமைதத்துவத்தை முன்வைத்தார். அதாவது உடலும் உயிரும் தனித்தவை என்ற தத்துவம். உடல் இயங்கக்கூடியது. உயிர் இயக்கக்கூடியது. உடல் அழியக்கூடியது. உயிர் அல்லது ஆன்மா அழிவில்லாதது. அதாவது உடல் இயங்கும் அற்றலை பெற்றிருக்கும். அந்த உடலை ஆன்மா இயக்கும் இதுதான் இருமைதத்துவம்

பிளாட்டோ:


பிளாட்டோ தனது “ரீபப்ளிக்” என்ற புத்தகத்தில் உயிர் குறித்து விளக்கியுள்ளார். இதற்கு முன்சென்ற தத்துவவியலாளர்கள் கூறிவந்த உடலின் அனைத்து பகுதியிலும் உயிர் என்ற பொருள் உடுறுவியுள்ளது, ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனி ஆன்மா உள்ளது என்ற கருத்தியல்களை மறுத்தார். பிளாட்டோ முன்வைத்ததும் இருமைத்துவம் தான். அதாவது ஆன்மாவும் உடலும் தனித்தனியானவை.

       உயிர் என்பது மூன்று கூறுகளால் ஆனவை. 1. கடவுளிடம் இருந்து வந்த பகுத்தறியும் அழிவில்லா பகுதி, 2. உணர்வைத்தரும் ஆன்மா பகுதி 3.இவை இரண்டையும் இணைக்கும் பகுதி. ஆகிய மூன்று பகுதிகளை கொண்டதுதான் உயிர் என்ற கருத்தை முன்வைத்தார்.
ஆன்மாவின் புணர் ஜென்மம், வேறு ஜென்மம், ஒரு சரிரத்தில் இருந்து மற்றொரு சரிரத்திற்கு செல்லுதல் போன்ற கருத்தை முன்வைத்தார். ஆன்மாவானது மரணத்திற்கு பிறகு ஒரு இடைநிலையில் காக்க கூலி வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கும். பல ஜென்மங்கள் எடுத்து தூய்மை அடைந்த ஆன்மாவே இறுதியில் சுவனத்தில் அதன் இடத்தை அடைந்து கொள்ளும்.
பகுத்தறியும் ஆன்மாவானது மூன்று நிலைகளாக காணப்படுகிறது:
1. உன்மையுடன் தொடர்புடைய அறிவாக 
2. கூட்டாக செயல்படும் போது கருத்தாக 
3. இல்லாதவை குறித்து அறியாமையாகவும் இருக்கிறது.


          அறிவாற்றல் என்பது ஒரு உணர்ச்சியே.  மேலும் ஆன்மா ஒரு வஸ்தாகும். ஆக நினைவாற்றலும் கற்பனையும் வஸ்துக்களே. பகுத்தறியும் உயிரானது சுவனத்திற்கு மிக நெருக்கமானது. இதுதான் மூளையை மையமாக கொண்டது. உணர்வைத்தரும் பகுத்தறியாத உயிரின் பகுதி தண்டுவடத்துடன் தொடர்புடையது. தண்டுவடமும் மூளையும் தான் உயிர் சக்தியை எடுத்து செல்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். மேலும் இணக்கும் உயிர் பகுதியானது இதயத்தில்தான் இருக்கிறது என்றும் கூறினார்.
ஒன்றை குறித்த எண்ணம் என்பது உள்ளத்தில் முற்பிறவியில் ஏற்பட்ட பதிவாகும். அவற்றை கல்வியின் மூலம் வெளிக்கொணர்கிறோம் என்று கூறினார்.

அரிஸ்டாடில்:
உடலின் செயல்பாடுதான் உயிர். உயிர் உடலில் இருந்து தனித்த பொருள் அல்ல. உடலில்லாமல் உயிர் இல்லை. உயிர் இல்லாமல் உடல் இல்லை என்ற கருத்தை முன்வைத்தார். உயிருக்கு தூய்மைபடுத்துதல் அல்லது பல பிறப்பிகளை அடைந்து தூய்மை பெறும் என்பன் போன்ற எந்த தேவையும் அற்றது. மேலும் உயிர் என்பது ஓர் இயக்கவிதி. அதுவே உயிர் வாழ்க்கையின் முதல் தோற்றுவாய். உயிரின் ஏனைய ஆற்றல்களான உணவு உட்கொள்ளுத, நகர்வு , சிந்தனை போன்றவையாவும் உயிர்வாழ்க்கையின் இரண்டாம் தோற்றுவாய். ஒரு உயிர் மரணத்திற்கு பிறகு வெறு ஓர் அசையும் உடலோடு கலந்து விடுகிறது. ஆனால் முற்பிறப்பின் கருத்தியல்களை அது கடத்திச் செல்வதில்லை. உடலின் உள்ளுறுப்புகள் என்பவை வெப்பத்தையும், குளிர்ச்சியையும் சமநிலையில் வைத்துகொள்ளும் இயந்திரங்களாகும். அனைத்து உணர்ச்சிகளும் மூளையுடன் தொடர்புடையவை அல்ல மாறாக இதயத்துடன் தொடர்புடையவை. மேலும் உயிரினங்களின் உயிரை மூன்று வகையாக வரையறுத்தார்.
1.தாவர உயிர்
2.விலங்கின் உயிர்
3.மனித உயிர். 

வரும் தொடரில் இஸ்லாமும் அறிவியலும் உயிர் குறித்து என்ன சொல்கிறது என்று காண்போம் இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment