பக்கங்கள் செல்ல

Sunday, June 28, 2015

எதிர் தொடர் 16,17: வானவர்கள், மனிதர்கள், ஷைத்தான்கள்

ஏக இறைவனின் திருப்பெயரால்

            
          இந்த தொடரில் நாம் மனித படைப்பின் ஆரம்பம் குறித்தும் அது குறித்து இந்த கட்டுரையாளரின் (1,2)புரிதல் குறித்தும் சிறிது நாம் அறிந்து கொள்வோம். மேலும் இந்த கட்டுரை  அதிக விளக்கம் தேவை படும் கட்டுரையாக இருப்பதால் இதனை முழுவதுமாக குற்றச்சாட்டு பதில் என்று அமைக்காமல் விளக்கம் அளிப்பதாகவும் இதற்கடுத்து இடம் பெறும் கட்டுரையின் அடித்தளமாகவும் அமைக்கவுள்ளேன். ஆக அவர் கூறும் குற்றச்சாட்டுகளை தலைப்பாகயிட்டு சில விளக்கங்கக்ளும் இதில் இடம்பெற வுள்ளது இன்ஷா அல்லாஹ்

மனிதனின் படைப்பு:
     ஏக இறைவன் அல்லாஹ் மனிதனின் படைப்பு குறித்து தனது திருமறையில் பின்வருமாறு ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறான். பொதுவாக அல்லாஹ் நபிமார்களின் வரலாறுகளை அல்குர்ஆனில் குறிப்பிடுவதற்கு காரணம் மனிதன் இதைகொண்டு படிப்பினை பெறுவதற்கு என்பதை அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான். 
        
     அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக்கிக் கூறுகிறது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.( அல் குர்ஆன் 12:111)
         
   அல்லாஹ் நபிமார்களின் செய்திகளில் பல படிப்பினைகளை வைத்துள்ளான். ஆதம்(அலை) அவர்களது செய்தியும் அத்தகைய பாடத்தை உள்ளடக்கியது தான். அது குறித்து தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.

          "பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்'' என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறியபோது "அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே'' என்று கேட்டனர். "நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்'' என்று (இறைவன்) கூறினான்.( அல் குர் ஆன் 2:30)

படைப்பின் ரகசியம் குறித்து எப்படி வானவர்கள் அறிந்து கொண்டார்கள் :
   இந்த அத்தியாயத்தின்அடுத்தடுத்த வசனங்களில் இதற்கான விடை தெளிவாக உள்ளது . அதாவது வானவர்கள் தாங்கள் அறிந்த யாவற்றையும் கற்றுக்கொடுத்தது அல்லாஹ்தான் என்று கூறுகின்றனர். இதோ.
        "நீ தூயவன்.நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர். (அல்குர் ஆன் 2:32).
   ஆதம் (அலை) அவர்களுக்கு கற்று கொடுத்ததும் அல்லாஹ்தான். வானவர்களுக்கு கற்றுகொடுத்ததும் அல்லாஹ்தான். அதனால் அல்லாஹ் எதை கற்று கொடுத்தானோ அதையே அவனிடம் தெரிவித்துள்ளனர், வானவர்கள். ஆனால் அவர்கள் உரையாடலுக்கு பதிலளிக்கும் விதமாகவே படைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் மேலே உள்ள செய்திகள் கூறுகின்றன. 

வானவர்களுக்கு பகுத்தறிவு உண்டா? 
   வானவர்கள் பகுத்தறிவு உடையவர்களாகத்தான் அல்லாஹ் படைத்துள்ளான். இதனை அல்லாஹ் தெளிவாக தனது திருமறையில் காட்டியுள்ளான். பின்வரும் இந்த உரையாடல் இப்ராஹிம்(அலை) அவர்களது மனைவிக்கும் , நற்செய்தி கொண்டு வந்த வானவர்களுக்கும் இடையே நடைபெற்றதாக அல்லாஹ் கூறுகிறான்:
      "இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும்போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்'' என்று அவர் கூறினார்.  "அல்லாஹ்வின் கட்டளை குறித்தா ஆச்சரியப்படுகிறீர்? அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் (இப்ராஹீமின்) இக்குடும்பத்தாராகிய உங்களுக்கு ஏற்படட்டும்.அவன் புகழுக்குரியவன்; மகத்துவமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.(அல் குர் ஆன் 11: 72 ,73)
                இவ்வாறு வானவர்கள் உரையாட கூடியவர்களாக, சூழலை புரிந்து செயல் படும் மனிதனிடம்  சுய தேர்வுசெய்யும்( Freewill) ஆற்றலுடன் அல்லாஹ் படைத்துள்ளான் என்பது தெளிவாகிறது. ஆனால் அவர்கள் அறிவின் ஆற்றலில் ஒரு சிறு வேறுபாட்டை நம்மால் உணரவும் முடிகிறது. அதாவது சாரா அம்மையார் அவர்களுக்கு இவ்வளவு தெளிவாக பதிலளிக்க முடிந்தவர்கள் அல்லாஹ்வை முந்தி பேச முடியாதவர்களாக, அல்லாஹ்விற்கு தொடர்பான விஷயங்களில் சுய தேர்வு (freewill) செய்ய முடியாதவர்களாக படைக்கப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது. எடுத்துக்காட்டாக ஆதம்(அலை) அவர்களது படைப்பின் சம்பவங்களையே எடுத்து கொள்ளுங்கள் ஆதம்(அலை) அவர்களுக்கு கற்று கொடுத்ததும் அல்லாஹ்தான். அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களை படைக்கப்ப்டுவதாக கூறும்போது , ஆதம்(அலை) குறித்து கருத்தை கூற முடிந்தவர்கள்  ஆனால் அல்லாஹ் பொருடகளின் பெயரை கூற கட்டளையிட்ட போது அவர்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டார்களே தவிர  " யா அல்லாஹ்; நீ கற்று கொடுத்தால் நாங்களுக்  கூறியிருப்போம் "என்று கூறவில்லை. இந்த வானவர்களின் தன்மையை  அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.

"அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் .( அல் குர்ஆன் 21:26)
     மனிதன் சுய தேர்ச்சி உடையவனாக படைக்கப்பட்டுள்ளான். அல்லாஹ்வின் கட்டளை என்று அறிந்த பின்பும் மீறக்கூடியவானாக படைக்கப்பட்டுள்ளான்.  ஆனால் வானவர்களின் சுய தேர்ச்சி செய்யும் அளவில்( degree of Freewill) மனிதனுடன் ஒப்பிடும் போது வேறுபாடு உடையவர்களாக அல்லாஹ்விற்கு முற்றிலும் வழிபட்டவர்களாக படைத்துள்ளான். மனிதர்களுக்கு தேவையான அளவு, அல்லாஹ் வானவர்கள் பற்றி தன் திருமறையில் அறிவித்துள்ளான். அவ்வளவே. ஆனால் இதில் ஒரு பாடத்தையும் அல்லாஹ் வழங்கியுள்ளான் அதாவது இந்த கட்டுரையாளர் கூறுவது போல அல்லாஹ் வானவர்களுக்கு உணர்த்த எண்ணினான் என்பது போல் அல்லாமல் மனிதனின் சுய தேர்ச்சியின் சிறப்பை பூமியில் இறக்கப்படும் முன் ஆதம் (அலை) அவர்களுக்கு சுட்டி காட்டுவதுதான். மேலும் இதே அத்தியாயத்தின் அடுத்தடுத்து இடம் பெறும் வசனங்கள் மனிதனின் சுய தேர்வின் பாதகத்தை விளக்குவதாய் உள்ளது குறிப்பிட தக்கது. மேலும் வானவர்கள் சுயதேர்வின் அளவில்தான் வேறுபடுகிறார்களே தவிர இவர் கூறுவது போல் பகுத்தறிவே இல்லாத இயந்திரம் என்பது தவறான புரிதல். சுயதேர்ச்சியில் வேறுபாடு உள்ளதால் பகுதறிவற்றவர்கள் என்று எண்ணுவது சரியான கருத்தல்ல. உதாரணமாக நமக்கும் விளங்குகளுக்கும் பகுத்தறிவு வேறுபடுகிறது என்பதுதான் சரியானது. அவை பகுத்தறிவே அற்றவை என்பது சரியானதல்ல. அப்படி இருந்ததிருத்தால் மற்ற விலங்குகளிடம் இருந்து தங்களை எப்படி தற்காத்து கொள்கின்றன? அதேபோல் மனிதனின் சுயதேர்ச்சிக்கும்  விளங்குகளின் சுயதேர்ச்சிக்கும் வித்தியாசம் உண்டு. ஆக சுயதேர்ச்சியையும் பகுத்தறிவையும் ஒன்றாய் கட்டுரையாளர் குழப்பி கொண்டதின் விளைவு வானவர்களை இயந்திரமாக எண்ணுவது.

யார் இந்த இப்லீஸ்?
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.( அல் குர் ஆன் 2:34) 
          மேற்குறிப்பிட்ட வசனம் அல்லாஹ் வானவர்களை பணிய கூறியதாகவும், இப்லீஸ் ஏன் பணியவில்லை என்று அல்லாஹ் கேட்பது என்பது தவறான ஒன்று என்று கட்டுரையாளர் கூறுகிறார். பணிய கூறப்பட்டவர்கள் வான்வர்கள் , ஜின் இனத்தை சார்ந்த இப்லீஸிடம் ஏன் பணியவில்லை என்று கேட்பது முரண்பாடு இல்லையா? என்று கட்டுரையாளர் கேட்கிறார். இது அரபிய மொழியின் பேச்சு வழக்கில் உள்ள ஒரு முறையாகும். இதை தக்லிபா( ஒன்றை விட ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்) என்று கூறுவார்கள். இவ்வாறு இருகூட்டத்தினர் இருக்கையில் ஒரு கூட்டத்தினரை மட்டும் அழைத்து கட்டளை பிறப்பித்தால் இரண்டு கூட்டத்தினருக்கும் அந்த கட்டளை பொருந்தும் . இது குறித்து WILLIAM WRIGHT அரபிய இலக்கணம் குறித்த நூலில் விளக்கியுள்ளார். இருவரில் ஒருகூட்டத்தினரின் முக்கியத்துவம், எண்ணிக்கை போன்றவற்றை கருத்தில் கொண்டு இவ்வாறு பேச்சு வழக்கில் பயன்படுத்தும் முறைதான் தக்லிபா ஆகும். இது அனைத்து மொழிகளிலும் காணப்படும் ஒரு முறைதான். உதாரணமாக பெற்றோர்களும் காப்பாளர்களும் உள்ள ஒரு சபையில் "பெற்றோர்களே வருக வருக" என்று வரவேற்கிறார்கள் என்றால் அது காப்பாளர்களுக்கும் பொருந்தும். இதே போன்ற முறைதான் அந்த குர்ஆன் வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபியர்கள் இன்னும் அதிக இடங்களில் இதை பயன்படுத்துகின்றனர் என்பதற்கு பல உதாரணங்களை WILLIAM WRIGHT தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் ஒன்று மட்டும் தெளிவு இவரது இந்த கேள்வி கூட இஸ்லாமிய எதிர்ப்பு வலைதளத்தில் இருந்து சுட்டதுதான். இன்னும் அவர்கள் தக்லிபா குறித்தும் பல கேள்விகளை பதிந்துள்ளனர். ஆனால் அவை அனைத்தும் DR. ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த உதாரணத்திற்கு பதிலாக உள்ளதே தவிர தக்லிபா என்ற முறையே அரபியில் இல்லை என்பதை நிறுபிப்பதாக இல்லை. அதனால் தான் WILLIAM WRIGHT அவர்களது நூலை REFERENCE ஆக குறிபிட்டுள்ளேன்.

இப்லீஸின் உள்ளத்தை அல்லாஹ்வால் அறிய முடியவில்லையா?
"இப்லீஸே! பணிந்தோருடன் நீ சேராமல் இருப்பது ஏன்?'' என்று (இறைவன்) கேட்டான். "கருப்புக் களிமண்ணில் இருந்து - மணல் கலந்த களிமண்ணில் இருந்து - நீ படைத்த மனிதனுக்கு நான் பணிபவனாக இல்லை'' என்று அவன் கூறினான்.(அல்குர்ஆன் 15: 32-33)
இங்கு அல்லாஹ் இப்லீஸிடம் அறிந்து கொள்ள கேட்டான் என்பது தவறான புரிதல் ஆகும். கேட்கப்படுபவர் தனது செயல் குறித்து தானே கூற கேட்கப்படும் கேள்வி. இவ்வாறாக கேட்கப்படும் கேள்விகளுக்கு அப்படிதான் பொருள்கொள்ள வேண்டும் என்பதுதான் சரியானதாகும் (பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸீர் 20:17 க்கான விளக்கம்) . இது போன்ற நடைமுறை அனைத்து மொழிகளிலும் உள்ள ஒன்றுதான். தவறிழைத்த குழந்தையிடம் அதன் தவறை அதையே சொல்ல கேட்பது போன்றது. இவர் பூமியின் வடிவம் குறித்த கட்டுரையில் அவர் அரபு மொழி அறிந்தவர் அல்ல என்று கூறியிருந்தார். ஆனால் இவரது கேள்விகள் இவரது தாய் மொழியில் கூட விபரமற்றவர் என்பதைப் போன்று தோன்றுகிறது. 

சஜ்தா என்பதின் பொருள் என்ன?
وَإِذْ قُلْنَا لِلْمَلائِكَةِ اسْجُدُوا لآدَمَ فَسَجَدُوا إِلا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ (٣٤)

 "ஆதமுக்குப் பணியுங்கள்!''¹¹ என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான். (அல் குர்ஆன்: 2:34.)

இந்த வசனத்தில் இடம்பெறும் சஜ்தா என்ற சொல்லிற்கு பணிதல் என்று பொருளாகும். பொதுவாக இஸ்லாம் தொழுகை குறித்து கூறுவதற்கு முன்பும் சஜ்தா என்ற சொல் அரபியில் இருக்கத்தான் செய்தது அதற்கு பணிதல் கட்டுப்படுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது (Refer : Lanes Lexicon vol 4 p.no 1307) . ஆக சஜ்தா என்பதற்கு தலைவணங்குதல் என்ற பொருள் மட்டும் அல்ல என்பதை அகராதி காட்டுகிறது. குர் ஆனும் இந்த வேர்சொல் அமைந்த இடங்களில் எல்லாம் இதே பொருளை தரவில்லை. உதாரணமாக அல்குர் ஆன் 22:18 வசனத்தை எடுத்துக்கொள்வோம்.



 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الأرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِنَ النَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ وَمَنْ يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِنْ مُكْرِمٍ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ (١٨)

 "வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்'' என்பதை நீர் அறியவில்லையா? இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான்.(அல் குர் ஆன் 22:18)

இந்த வசனத்தில் மலைகளும், மரங்களும் சஜ்தா செய்வதாக உள்ளது. இதற்கு பணிகின்றன என்ற பொருள்தான் தர முடியும். பணிதல் என்பது கட்டுப்படுதல் என்று 2: 34 வசனத்திற்கு பொருள் தந்தால் எந்த விதத்திலும் இஸ்லாமிய நம்பிக்கையை பாதிக்காது. இன்றும் வானவர்கள் மனிதனுக்கு பணிவிடை செய்வோராகத்தான் உள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு இட்ட கட்டளை மனிதனுக்கு அடிபணிய வேண்டும் என்பதுதான். அதன் விளைவாக இன்று மனிதன் தீய காரியங்களில் ஈடுபட்டாலும் அவனை பாதுகாக்கும் வானவர்கள் அவனை பாதுகாக்கின்றனர். ஆக இந்த கட்டுரையாளாரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இது விஷயத்தில் இவரது தவறான புரிதல் அல்லது காழ்புணர்ச்சியால் உருவானது என்பது தெளிவு.

அல்லாஹ் எதை ஆதமுக்கு கற்றுகொடுத்தான்

 وَعَلَّمَ آدَمَ الأسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (٣١)

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான்.(அல் குர்ஆன்  2:31)

அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களுக்கு அனைத்தின் பெயரையும் கற்று கொடுத்ததாக மேலுள்ள வசனம் கூறுகிறது. ஆனால் அஃறினைகளின் பெயரை மற்றும் அல்லாஹ் கற்று கொடுத்தான் என்பது கதையாசிரியரின் இடைச்சொருகள். அடுத்ததாக ஆக அதம் (அலை) அவர்களுக்கு ஆட்சி என்றால் என்ன என்பதையும் கற்று கொடுத்துள்ளான், உயிருள்ளது எது உயிரற்றது எது என்று அனைத்தும் அல்லாஹ் கற்றுகொடுத்தான் என்றுதான் அந்த வசனத்திற்கு பொருள். அடுத்ததாக் யாரை ஆதம்(அலை) அவர்கள் ஆட்சி செய்ய விரும்பினார்கள் என்று ஒரு கேள்வியை கட்டுரையாளர் முன்வைக்கிறார்.


 فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ قَالَ يَا آدَمُ هَلْ أَدُلُّكَ عَلَى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لا يَبْلَى (١٢٠)

 அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.) (அல் குர் ஆன் 20:120)
 இவ்வசனத்தில்  இடம் பெறும் وَمُلْكٍ لا يَبْلَى என்பதற்கு அழிவில்லா உடைமை  அல்லது உரிமை என்பதுதான் பொருளாகும். இதில் இடம் பெறும் முல்க் - உடைமை ,உரிமை((Refer : Lanes Lexicon Supplement) என்று பொருள் உண்டு. நிரந்தரமாக நிலை பெற்று விடுவீர்கள் என்பதைதான் அந்த வசனம் குறிக்கிறது. இதோ அந்த கருத்தை தெளிவாக கூறும் வசனம்.

            அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். "இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.(அல் குர்ஆன் 7:20)


       ஆக அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்யானது என்று ஷைத்தான் கூறுகிறான். அதைதான் அல்லாஹ் சூழ்ச்சி எங்கிறான். அடுத்ததாக ஷைத்தானை மன்னிக்க ஏனோ அல்லாஹ்விற்கு மனம் இல்லை என்று கட்டுரையாளர் புலம்புகிறார். ஷைத்தான் தலைகணம் கொண்டு தன்னை மன்னிக்க எந்த இடத்திலும் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரவில்லை. ஆகவே அவன் மன்னிக்கப்படவில்லை.
                 அடுத்ததாக ஆதம்(அலை) அவர்கள் மன்னிப்பு கேட்க முஹம்மது(சல்) அவர்களது பெயரை பயன் படுத்தியதாக கூறப்படும் செய்திகள் ஹாக்கிம் பைஹகீ போன்ற நூல்களில் இடம் பெறுகிறது ஆயினும் இதில் இடம் பெறும் பல அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள். அப்துர் ரஹ்மான் பின் ஜைத் பின் அஸ்லாம், அப்துல்லாஹ் பின் முஸ்லிம் அல்ஃபிஹ்ரி போன்ற வர்கள் இடம் பெறுவதால் இது பலவீன்மான செய்தியாகும். அதே போன்று நபி(சல்) அவர்களை படைக்கவில்லை என்றால் இந்த உலகத்தை படைத்திருக்க மாட்டேன் என்ற செய்தியையும் குறிப்பிட்டு சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த செய்திகளும் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்தான். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அம்ர் இப்னு அவ்ஸ் அல் அன்ஷாரி என்ற அறிவிப்பாளர் இட்டுகட்ட கூடியவர் என்று தஹபி போன்ற ஹதீஸ்கலை வல்லுனர்களால் விமர்சிக்கப்பட்டவர்இதன் பிறகு கட்டுரையாளர் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அது குறித்து விதி குறித்த அடுத்த தொடரில் காணலாம். இன்ஷா அல்லாஹ்....
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்

No comments:

Post a Comment