ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு ( Relativity Theory)மிகவும் நுணுக்கமான ஒரு கோட்பாடாகும்.
ஐன்ஸ்டீனின் இந்த கோட்பாட்டை பலர் புரிவதற்கு மிகவும் சிரமப்பட்டதும் உண்டு.நேரம்,இடம்(வெளி) என்பன பற்றி ஐன்ஸ்டீன் கூறும் விதத்தை சரியாக புரிந்தோம் என்றால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு அதன் ஊடாக பெறப்படும் நேரயாத்திரை கோட்பாட்டையும் சரியாக புரிய முடியும்.
இவற்றை சரியாக புரிந்தோம் என்றால் அல் குர்ஆனில் கூறப்பட்ட காலங்கள்,நேரங்கள் பற்றிய உண்மை தன்மைகளையும் சொர்க்கம் நரகம்,நபி ஸல் அவர்களின் மிஹ்ராஜ் யாத்திரை போன்றவற்றை நம்பிக்கையை தாண்டி அறிவியல் ஊடாகவும் சாத்தியமாக புரிய முடியும்.
ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின்படி நேரமும்,இடமும்(வெளி)தனித்தனியானது அல்ல.அவை வெளிநேரம் என்ற ஒன்றுக்கொன்று தொடர்பானதாகும்.பொருளும் அதன் நிழலும் என்பதுபோல என்று இப்போதைக்கு அதை விளங்கி கொள்ளுங்கள்.இதை சிறப்புச்சார்புக் கோட்பாடு (Special Theory of Relativity) என்ற முறையில் ஐன்ஸ்டீன் 1905 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தார்.துகள்களின் இயக்கம் தொடர்பாக இதில் தெளிவுபடுத்தி உள்ளார்.
“எந்த ஒரு இயக்கம் ஆயினும் அது சார்பு நிலையானது.அது தீர்க்கமானது அல்ல” என்பதே இந்த கோட்பாட்டின் அடிப்படை ஆகும்.நேரம் என்பது பயணவேகத்தை பொருத்தது என்பது ஐன்ஸ்டீன் சொல்லும்வரை எவருக்கும் தெரியாது.நேரம் என்பது மாறாத தன்மை கொண்டது என்றுதான் எல்லோருடைய நம்பிக்கையாக இருந்தது.இதை கீழே உள்ள உதாரணம் மூலம் புரிய முடியும்.
கண்டிக்கும் கொழும்புக்குமான தூரம் 100 KM தூரம் என்று வைத்துகொள்வோம்.கண்டியில் இருந்து கொழும்புக்கு ஒரு மணித்தியாலத்துக்கு 10 KM தூரம் சென்றோம் என்றால் கொழும்பை நாம் 10 மணித்தியாளங்களில் அடைய முடியும்.அதே போல அதி வேகமாக மணிக்கு 100 km வேகத்தில் சென்றோம் என்றால் ஒரு மணி நேரத்தில் கண்டியில் இருந்து கொழும்பை அடைந்துவிடுவோம்.இதுவே சார்பியல் கோட்பாட்டு நேரம் ஆகும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் எனில் நேரம் என்பது நியூட்டன் சொல்வதுபோல மாறாத்தன்மை கொண்டதல்ல. பூமியில் ஒரு வினாடி என்பது செவ்வாய்,சூரியன் என்பவற்றிலும் ஒரு வினாடியாகவே இருக்க முடியும் என்பதே நியூட்டனின் நிலைபாடு. ஆனால் ஐன்ஸ்டீன் நேரம் என்பது தீர்க்கமானது அல்ல சார்பு நிலையானது என்று உறுதிப்படுத்தினார். தண்ணீர் எப்படி சில இடங்களில் மெதுவாகவும் சில இடங்களில் வேகமாகவும் செல்லுமோ அதுபோலவே இடத்துக்கு ஏற்ப நேரம் மெதுவாகவும் சில இடங்களில் வேகமாகவும் இருக்கும் என்று நிறுவினார்.
இந்த அடிப்படையில் ஒருவர் அதி வேகமாக பூமியை கடந்து மேலே சென்றுகொண்டிருந்தால் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இந்த பூமியின் நேர செயற்பாட்டுக்கு அப்பால் அவர் சென்றுவிடுவார்.இதனை நிகழ்வெல்லை (Event Horizon)என்று சொல்லப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் ஒருவர் சென்றுவிட்டால் நாம் இருக்கும் பிரபஞ்ச நேரத்தின் எந்த தாக்கமும் அவருக்கு ஏற்படாது. அவர் நேரத்துக்கும் அப்பால்பட்ட ஒரு இடத்தை தாண்டிவிட்டார்.
இதை கவனத்தில்கொண்டு அல்குர்ஆனின் “மஆரிஜ்” எனும் அத்தியாயத்தில் நான்காம் வசனத்தை ஆய்வுக்கு உட்படுத்துவோம்.அதன் மூலம் அல் குர்ஆன் எந்தளவு அறிவியலை 1400 வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளது என்ற பேருண்மை புரியும்.
“வானவர்களும், ரூஹும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான ஒரு நாளில் அவனிடம் ஏறிச் செல்வர்”
திருக்குர்ஆன் 70:4
இந்த வசனம் ஜிப்ரீலும் (ரூஹ்)மலக்குகளும் இந்த பூமியைவிட்டு வானத்தை நோக்கி செல்லும் கால அளவை குறிப்பிடுகிறது.ஒரு நாள் ஐபதாயிரம் வருடத்துக்கு சமனானது என்று இந்த வசனம் கூறுகிறது.இதனை ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டுக்கு முன்பு எவராலும் புரிய முடியாத ஒன்றாகவே இருந்தது.ஏனென்றால் நாம் மேலே கூறியதுபோல ஐன்ஸ்டீனுக்கு முந்தைய காலத்தில் நேரம் என்பது தீர்க்கமானது எந்த இடத்திலும் மாறாதது என்றுதான் நியூட்டன் உட்பட அனைவரும் நம்பி இருந்தனர்.
மலக்குகள் ஒரு நாளில் செல்லும் வேகத்தில் நாம் வானத்தை நோக்கி செல்ல வேண்டும் எனில் ஐம்பதாயிரம் பூமி வருடங்கள் எடுக்கும். நாட்களில் கணக்கிட்டால் 1,82,50,000 நாட்கள் எடுக்கும்.மலக்குகள் ஒரு வினாடியில் செல்லும் தூரத்தை நாம் செல்ல வேண்டும் என்றால் 211 நாட்கள் தேவைப்படும்.
மலக்குகளுக்கு இது எவ்வாறு சாத்தியமாகிறது என்பதை நாம் நமக்கு புரிய முடியாத வகையில் அல்லாஹ்வின் ஆற்றல் என்றுதான் நம்புகிறோம்.அதற்கும் அப்பால் நாம் புரிய முடியுமான ஒரு அறிவியலையும் காரணத்தையும் அல்லாஹ் இதில் வைத்துள்ளான் என்பதை புரிய வேண்டும் எனில் ஒளி வேகத்துடன் மலக்குகள் வேகத்தை ஒப்பிட்டு பார்த்தோம் என்றால் அறிவியலில் அல் குர்ஆன் எந்தளவு பழையது என்பதை அறிய முடியும்.
உலகத்தில் அதிவேகமான பொருளாக அறிவியல் ஒளியை சொல்கிறது.அதன் வேகம் வினாடிக்கு கிட்டத்தட்ட 3,00,000 Km ஆகும்.இந்த வேகத்தில் ஒருவர் பூமியை தாண்டி சென்றால் பூமியின் வயதின் ஐம்பதாயிரம் வருடங்களை அவர் ஒருநாளில் கடந்திருப்பார்.பூமியின் வேகத்தைவிட அவர் பல ஆயிரம் மடங்கு வேகமாக பூமியை தாண்டி நான் மேலே கூறியவாறு நிகழ்வெல்லையை அவர் தாண்டிவிட்டார்.எனவே அவருக்கு இந்த பூமியின் நேரம் கட்டுப்படுத்துவதில்லை.வினாடிக்கு 3,00,000 Km வேகத்தில் அவர் செல்லும்போது பூமியில் உள்ளவர்களுக்கு பல வருடங்கள் கடந்திருக்கும்.ஏனெனில் அவர்கள் பூமியின் நேரத்துக்கட்டுப்பாட்டுக்குள்ளும் #நிகழ்வெல்லைக் குள்ளும் உள்ளனர்.ஆனால் ஒளி வேகத்தில் சென்றவர் வயது மாறாமல் இருக்கும்.அவர் பிரயாணித்தபோது எந்த வயதில் இருந்தாரோ அதே வயதில்தான் பூமிக்கு வரும்போதும் இருப்பார்.நேரங்களை கடந்த ஒரு எல்லையில் அவர் வாழ்ந்துள்ளதே அதற்கு காரணம்.
மலக்குகள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் ஒளிவேகம் என்பதை இலகுவாக புரிய முடியும்.எனவே அவர்கள் வினாடிக்கு பல லட்சம் Km வகம் சென்று வருவார்கள் என்ற விடையத்தை அல்குர்ஆன் தெளிவாக சொல்லி நிற்கிறது.இதையே அறிவியலும் ஒளி வேகத்தின் மூலம் இந்த பிரயாணம் சாத்தியம் என்று நிறுவுகிறது.
இனி ஒளி வேகத்தில் செல்லும் மனிதன் வயதில் முதிர்ச்சி அடையாமல் இருப்பது எப்படி?இதை இஸ்லாம் கூறியுள்ளதா என்று பார்த்தால் ஈஸா நபியவர்கள் மீள் வருகை,சொர்க்கத்தில் மனிதர்கள் முதிர்ச்சி அடைவதில்லை என்ற இஸ்லாமிய நம்பிக்கைகள் இதனையே நிரூபிக்கின்றன.ஏலவே நான் கூறியபோல நிகழ்வெல்லையை கடந்தால் பூமியில் நமக்கு வயதாகுவதுபோல நிகழ்வெல்லையை கடப்பவர்களுக்கு ஆகாது.எனவே ஈஸா நபியவர்கள் வானத்துக்கு உயர்தப்பட்டுள்ளமை சொர்க்கத்தில் மனிதர்கள் வயதாகாமல் இருப்பது என்பன நிகழ்வெல்லை யை தாண்டிய வாழ்க்கைகள் ஆகும்.நேரத்தையும் தாண்டிய ஒரு வாழ்கையை பற்றி இஸ்லாம் அன்றே பேசியுள்ளது.
இனி ஐன்ஸ்டீனின் நேரயாத்திரை (Time Travel)கோட்பாடு இஸ்லாத்துடன் எந்தவகையில் ஒத்துப்போகிறது?நேர யாத்திரை மூலம் கடந்த காலத்துக்கு செல்ல முடியும் என்பதுபோல எதிர்காலத்துக்கும் செல்ல முடியும் என்பதுவே ஐன்ஸ்டீனின் கோட்பாடாகும்.இதனை மறுத்தவர்கள் இருப்பதுபோல இயற்பியல் வல்லுனர்கள் பலர் இதை சாத்தியம் என்றே நிறுவியுள்ளனர்.ஐன்ஸ்டீனின் இந்த கோட்பாட்டை நடைமுறை சத்தியம் அற்றது என்பதற்கு இவர்கள் கூறும் காரணங்களுக்கு ஒவ்வொன்றாக மறுப்புகளை பல இயற்பியல் அறிஞர்கள் கொடுத்துள்ளனர்.
இதனை நாம் நடைமுறையில் சாத்தியமாக அறிந்துகொள்ள நபி ஸல் அவர்கள் கடந்த காலத்தில் உள்ள மூஸா நபியை சந்தித்தமை எதிர்காலத்தில் நடக்கவுள்ள சொர்க்கம் அதன் தன்மைகள் நரகம் அதன் தன்மைகளை கண்டு வந்தமை எல்லாமே நேரயாத்திரை கோட்பாட்டை உறுதிப்படுத்துகிறது.இன்னும் சொல்ல போனால் இஸ்லாம் கூறும், நாம் நம்பும் நபி ஸல் அவர்களின் மிஹ்ராஜ் பயணம்கூட நவீன அறிவியலை உறுதி செய்கிறது என்பதே உண்மை.
இஸ்லாம் கூறும் பல அறிவியலில் ஐன்ஸ்டீனின் சார்பு கோட்பாடும் அதன் ஊடாக வந்த நேரயாத்திரை கோட்பாடும் உள்ளடங்கும் என்பதை புரிய முடிகிறது.
நன்றி: அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)
Cairo, Egypt
No comments:
Post a Comment